இன்றைய இறைமொழி
செவ்வாய், 11 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 5-ஆம் வாரம் – செவ்வாய்
லூர்து நகர் புனித கன்னி மரியா – விருப்ப நினைவு
தொடக்கநூல் 1:20-2:4அ. திருப்பாடல் 8. மாற்கு 7:1-13
(வாசகங்கள் பொதுக்காலத்துக்கு உரியவை)
தூய்மையும் தாய்மையும்
இயேசுவுக்கும் பரிசேயர்-மறைநூல் அறிஞர்களுக்கும் இடையே ஏற்கெனவே ‘ஓய்வுநாள் மீறல்’ தொடர்பான உரசல்கள் இருந்ததை நாம் கடந்த வாரங்களில் கண்டோம். தூய்மைச் சடங்கை மையப்படுத்தி மற்றோர் உரவல் எழுவதை இன்றயை நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம்.
இயேசுவுடைய சீடர்கள் கழுவாத கைகளால் உண்பதை பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் காண்கிறார்கள். இது பற்றிய குற்றச்சாட்டு எழுந்தபோது, நேரடியாக அவர்களுடைய குற்றச்சாட்டுக்குப் பதில் தராமல், தூய்மைக்கான புதிய விளக்கத்தைத் தருகிறார் இயேசு.
பரிசேயர்களைப் பொருத்தவரையில் தூய்மை என்பது (அ) மூதாதையரின் சடங்குகளைப் பின்பற்றுவது, (ஆ) வெளிப்புறம் சார்ந்தது, (இ) சடங்கு போலத் தொடர்ந்து செய்ய வேண்டியது.
ஆனால் இயேசுவைப் பொருத்தவரையில், தூய்மை என்பது (அ) கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றுவது, (ஆ) அகம் சார்ந்தது, (இ) சடங்குகளைத் தாண்டிச் செல்வது.
பரிசேயர்களின் தூய்மை-தீட்டு கோட்பாடு ஒரு பக்கம் ஆன்மிக அளவில் இருந்தாலும், பெரும்பாலும் சமூகத் தீட்டுக்கு இது வழி அமைப்பதாக இருந்தது. சமூகவியல் அடிப்படையில் பார்க்கும்போது பாகுபடுத்துதலில் ‘தூய்மை-தீட்டு வேறுபாடு’ முக்கியப் பங்காற்றுகிறது. நம்மைச் சார்ந்தவர்கள் தூய்மையானவர்கள் என்றும், நம்மைச் சாராதவர்கள் தீட்டானவர்கள் என்று கருதும் போக்கும் நம் நடுவே இருக்கிறது.
நம் உள்ளமும் எண்ணமும் தூய்மையாக இருந்தால், தெளிந்த நீரோடை போல இருந்தால் நலம்.
இன்றைய முதல் வாசகத்தில், முதல் படைப்புக் கதையாடல் நிறைவு பெறுகிறது. ஆண்டவராகிய கடவுள் மனிதரைத் தம் உருவிலும் சாயலிலும் படைக்கிறார். மேலும், படைப்பின் இறுதியில் ஓய்வெடுக்கிறார்.
அனைத்தையும் நல்லதென, மனிதர்களை மிகவும் நல்லதெனக் கண்டார் கடவுள்.
நாமும் அனைத்தையும் அனைவரையும் நல்லதென, நல்லவரெனக் காணும்போது கடவுள்நிலைக்கு உயர்கிறோம்.
இன்று நம் வணக்கத்துக்குரிய அன்னை கன்னி மரியாவை ‘லூர்து நகர் அன்னை’ எனக் கொண்டாடி மகிழ்கிறோம். லூர்து நகரில் மசபியல் குகையில் பெர்னதெத் என்னும் இளவலுக்கு 1858-இல் காட்சி தந்த அன்னை கன்னி மரியா, ‘நாமே அமல உற்பவம்’ என்று தன்னை அறிவிக்கிறார்.
அன்னை கன்னி மரியாவைப் பொருத்தவரையில் ‘அமல உற்பவம்’ என்னும் தூய்மை அவருடைய தாய்மைக்கான தயார் நிலை.
நம் வாழ்வில் தூய்மை அவசியம் என்பதையும் சாத்தியம் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது இன்றைய நாள்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: