இன்றைய இறைமொழி
சனி, 19 அக்டோபர் 2024
பொதுக்காலம் 28-ஆம் வாரத்தின் சனி
எபேசியர் 1:15-23. லூக்கா 12:8-12
தூய ஆவியார் கற்றுத் தருவார்
‘கடவுளால் இயலாதது எதுவும் இல்லை என்னும் நம்பிக்கைப் பார்வை பெறுதல்’
பரிசேயரின் வெளிவேடம் என்னும் புளிப்புமாவு தம் சீடர்களிடம் ஊடுருவக் கூடாது என்று எச்சரித்த, அஞ்சாதீர்கள் என அறிவுறுத்திய இயேசு, தொடர்ந்து, மானிட மகனை ஏற்றுக்கொள்வதன் பயன், ஏற்றுக்கொள்ளாததன் எதிர்மறை விளைவு ஆகியவற்றை எடுத்துரைக்கிறார்.
லூக்கா நற்செய்தி எழுதப்பட்ட காலம் ஏறக்குறைய கிபி 85-ஆம் ஆண்டு என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இயேசுவின் இறப்புக்குப் பின்னர் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் கடந்து நிற்கும் குழுமத்திற்கு லூக்கா தன் நற்செய்தியை எழுதுகிறார். யூதர்களிடமிருந்து நிராகரிப்பு, உரோமையர்களுடைய ஆளுமை எனப் பல்வேறு எதிர்மறையான சூழல்களை எதிர்கொள்கிறார்கள் தொடக்கக் கிறிஸ்தவர்கள். தொழுகைக்கூடங்களிலிருந்து விலக்கிவைக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் தொழுகைக்கூடங்களே நீதிமன்றங்கள்போலச் செயல்பட்டதால், குற்றம் சுமத்தப்பட்டு அங்கே நடத்திச் செல்லப்பட்டார்கள். இந்த நிகழ்வுகள் தமக்கு நேரும் என இயேசு முன்னுரைப்பதாகவோ அல்லது நற்செய்தியாளர் தன் குழுமம் எதிர்கொண்ட நிகழ்வுகளுக்குப் பதிலிறுப்பு தரும் விதமாக எழுதுவதாகவோ இந்தப் பகுதியை எடுத்துக்கொள்ளலாம். மேலும், இந்த இடத்தில் தூய ஆவியார் பற்றிய புரிதலையும் இயேசு தருகிறார்.
லூக்கா நற்செய்தியாளர் தூய ஆவியாரின் நற்செய்தி என அழைக்கப்படுகிறது. அன்னை கன்னி மரியா தூய ஆவியாரால் கருவுற்று இயேசுவைப் பெற்றெடுக்கிறார் (காண். லூக் 1:35). தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்படுகிற எலிசபெத்து மரியாவை வாழ்த்துகிறார் (காண். லூக் 1:40). சிமியோன் தூய ஆவியைப் பெற்றவராக வாழ்கிறார், மெசியா பற்றிய எதிர்நோக்கு கொண்டிருக்கிறார் (காண். லூக் 2:25). தூய ஆவி என்னும் நெருப்பால் இயேசு திருமுழுக்கு அளிப்பதாக யோவான் முன்மொழிகிறார் (காண். லூக் 3:16). இயேசுவின் திருமுழுக்கின்போது இறங்கி வருகிறார் (காண். லூக் 3:22). இயேசுவின் பாலைவனச் சோதனையிலும் தூய ஆவியார் அவரை வழிநடத்துகிறார் (காண். லூக் 4:1). தொடர்ந்து திருத்தூதர் பணிகள் நூலில் ஆவியாரின் செயல்பாடுகளை லூக்கா பதிவு செய்கிறார்.
இன்றைய நற்செய்திப் பகுதியில் தூய ஆவியார் பற்றிய லூக்காவின் பார்வையை நாம் காண்கிறோம்: ‘தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர்’ என எச்சரிக்கிற இயேசு, தொடர்ந்து, இக்கட்டான நேரங்களில் தூய ஆவியார் நாம் பேச வேண்டியவற்றைக் கற்றுக்கொடுப்பார் என நம்பிக்கை தருகிறார்.
‘தூய ஆவியாரைப் பழித்துரைத்தல்’ என்பதன் பொருள் மறைபொருளாகவே இருக்கிறது. கடின உள்ளம், கண்டுகொள்ளாத்தன்மை, கடவுளின் இரக்கத்தின்மேல் நம்பிக்கையின்மை போன்றவை தூய ஆவியைப் பழித்துரைத்தல் அல்லது தூய ஆவியாருக்கு எதிரான பாவம் என விளக்கம் தரப்படுகிறது.
இச்சொல்லாடலை வேறு மாதிரியாகப் புரிந்துகொள்வோம். தூய ஆவியாரால் நிரப்பப்படுகிற மரியா கருவுற்று இறைமகன் இயேசுவைப் பெற்றெடுக்கிறார். ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ என அங்கே வானதூதர் கபிரியேல் மொழிகிறார். ஆக, கடவுளால் எல்லாம் இயலும் என்று நமக்குச் சொல்பவர் தூய ஆவியார். தூய ஆவியார் நமக்கு நம்பிக்கையைத் தருகிறார். அதற்கு மாறாக, கடவுளால் இது இயலாது என நாம் அவநம்பிக்கை கொள்ளும்போதெல்லாம் தூய ஆவியாரைப் பழித்துரைக்கிறோம்.
தொடர்ந்து வருகிற பகுதியில், ‘தூய ஆவியார்தாமே உங்களுக்குக் கற்றுத்தருவார்’ எனச் சொல்கிறார் இயேசு. தொழுகைக்கூடத்திற்கு இழுத்துச் செல்லப்படும்போது எல்லாம் முடிந்தது என்று நினைப்பவர்களுக்கு, ‘கடவுளால் இயலாதது எதுவுமில்லை’ எனக் கற்றுத்தருகிறார் தூய ஆவியார்.
கடவுளால் எல்லாம் இயலும் என்னும் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள இயேசு நம்மை அழைக்கிறார்.
வாசகம் தரும் மூன்று பாடங்கள்:
(அ) இயேசுவை நாம் திருமுழுக்கின் வழியாக ஏற்றுக்கொண்டுள்ளோம். இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. மாறாக, நம் பெற்றோர்களும் ஞானப்பெற்றோர்களும் மேற்கொண்ட தெரிவு. இந்தத் தெரிவு உறுதிப்பூசுதல் அருளடையாளம் வழியாக உறுதிப்படுத்தப்படுகிறது. நாம் மேற்கொண்ட இத்தெரிவு நம் வாழ்க்கை வழியாக அறிவிக்கப்பட வேண்டும். இதுவே மக்கள் முன்னிலையில் இயேசுவை ஏற்றுக்கொள்தல்.
(ஆ) தூய ஆவியாரைப் பழித்துரைத்தல் கூடாது. கடவுளால் எல்லாம் இயலும் என்னும் ஆவியாரின் செய்தியை நாம் ஏற்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.
(இ) நீங்கள் கவலைப்பட வேண்டாம். ‘என்ன பதில் அளிப்பது, எப்படி பதில் அளிப்பது, என்ன பேசுவது’ எனக் கவலைப்பட வேண்டாம் என இயேசு அறிவுறுத்துகிறார். தலைவர்கள்முன்னால் நிற்பது மட்டுமல்லாமல், நாம் அன்றாட வாழ்வில் நிறைய நெருக்கங்களைச் சந்திக்கிறோம். நம் குடும்பம், வேலை, பிள்ளைகள், எதிர்காலம், வியாபாரம், பயணம் போன்றவற்றில் நாம் அன்றாடம் முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது. இவ்வேளைகளில் இறைவனின் குரல் நம்மை வழிநடத்துகிறது என்பதை மனத்தில் கொள்வோம். நம் ஒவ்வொரு செயலையும் தூய ஆவியாரிடம் ஒப்புக்கொடுத்து அவரின் துணையைப் பெற்றுக்கொள்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில், கிறிஸ்துவே திருஅவையின் உடல் என முன்மொழிகிறார் பவுல். கிறிஸ்துவுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையேயான நெருக்கத்தை எடுத்துரைக்கிறது இந்த உருவகம்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ நம்பிக்கைப் பார்வை கொண்டு வழிநடப்பர். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 229)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: