இன்றைய இறைமொழி
புதன், 15 ஜனவரி ’25
பொதுக்காலம் முதல் வாரம் – புதன்
எபிரேயர் 2:14-18. திபா 105. மாற்கு 1:29-39
தொடரும் சோதனை!
இயேசுவின் வாழ்வில் சோதனைகள் அவருக்குப் பாலைநிலத்தில் மட்டுமே நடந்ததாக நினைக்கிறோம். பாலைநிலச் சோதனைகளையும் தாண்டி அவருடைய வாழ்க்கை முழுவதும் அவருக்குச் சோதனைகள் வந்துகொண்டேதான் இருந்தன. இன்றைய நற்செய்தி வாசகத்தில் அப்படிப்பட்ட சோதனை ஒன்றையே வாசிக்கிறோம்.
சீமோன் பேதுருவின் வீடு, வீட்டு வாசல்முன் மக்கள், மக்களுக்கு நலம் என்று விறுவிறுப்பாகப் பணி செய்த இயேசு, அடுத்தநாள் விடியற்காலையில் எழுந்து இறைவேண்டல் செய்யத் தனிமையான இடத்துக்குச் செல்கிறார். அங்கு வருகிற சீமோனும் உடன் வந்தவர்களும், ‘எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!’ என்று இயேசுவிடம் சொல்கிறார்கள். அவர்களுடைய சொற்களின் பொருளை உடனடியாகப் புரிந்துகொள்கிறார் இயேசு.
‘அறிமுகமானதன் ஆனந்தம் போதும்!’ என்று இயேசுவைத் தடுத்து நிறுத்தப் பார்க்கிறார்கள் சீடர்கள். ‘அடுத்த ஊருக்குப் போவோம்!’ என்று சொல்லி நகர்கிறார் இயேசு.
தொழுகைக்கூடத்தில் இயேசு பெற்ற பாராட்டு, ஊர் மக்கள் அடைந்த நற்சுகம், தன் வீட்டிற்கு வெளியே கூடிய கூட்டம் என அனைத்தையும் கண்ட சீமோன் சற்றே சொக்கிப் போகிறார். ‘இதுபோல எந்நாளும் இருந்தால் நலம்!’ என்று நினைக்கிறார்.
அறிமுகமான இடத்திலேயே இருப்பதும், நாம் செய்துகொண்டிருப்பவற்றையே தொடர்ந்து செய்வதும், மக்களுக்குப் பயனுள்ளவாறு நடந்துகொள்வதும் நமக்கு வரும் சோதனையும்கூட.
‘அடுத்த ஊர்களுக்குச் செல்வது’ கடினம். ஏனெனில், அங்கே நமக்கு யாரும் அறிமுகம் இல்லை. செல்ல வேண்டிய இடம் தூரமாகவும் பயணம் கடினமாகவும் இருக்கும். இது போலவே அங்கு நாம் ஏற்றுக்கொள்ளப்படுவோமா என்பது தெரியாது. ஆக, ‘இங்கேயே இருந்துகொள்வோம்’ என்று நம் மனம் சொல்லத் தொடங்கும்.
பொருளாதாரவியலில் இதை ‘இழப்பு வெறுப்பு பிழை’ (‘லாஸ் அவெர்ஷன் ஃபேலஸி’) என்பர். என் கையில் 1000 ரூபாய் இருக்கிறது. அதை வட்டிக்குக் கொடுத்தால் நாளை மாலை என் கையில் 1200 ரூபாய் இருக்கும். ஆனால், வட்டிக்குக் கொடுத்து ஒருவேளை அது எனக்குக் கிடைக்காமல் எல்லாப் பணமும் போய்விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் நான் 1000 ரூபாயை அப்படியே வைத்துக்கொள்கிறேன். நான் கையிலிருப்பதை இழந்துவிடுவதை விரும்புவதில்லை. தாலந்து எடுத்துக்காட்டில் நாம் காணும் மூன்றாம் பணியாள் செய்ததும் இப்படியே.
ஆனால், இயேசு இத்தவற்றைச் செய்யவில்லை. சீடர்களின் சோதனைக்குள் விழவில்லை. தாம் புறப்பட்டதோடல்லாமல், அவர்களையும் நகர்த்துகிறார்.
இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குரு என அறிமுகம் செய்கிறார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர். ‘இரக்கமும் நம்பிக்கையும்’ இயேசுவின் தலைமைக்குருத்துவப் பணியின் இரண்டு பக்கங்களாக இருக்கின்றன. சகோதர சகோதரிகளுக்கு இரக்கம், கடவுளுக்கு நம்பகத்தன்மை என்று பணி செய்கிறார் இயேசு.
இயேசு அனைத்திலும் நம்மைப் போல ஆகிறார். நம்மைப் போலவே சோதனைக்கும் ஆளாகிறார். ஆனால், அந்தச் சோதனையை வெல்கிறார்.
தேங்கிவிடுதல் அல்ல, தொடர்ந்து நகர்தலே வாழ்க்கை எனக் கற்றுத் தருகிறார் இயேசு.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: