இன்றைய இறைமொழி
திங்கள், 10 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 5-ஆம் வாரம் – திங்கள்
தொடக்கநூல் 1:1-19. திருப்பாடல் 104. மாற்கு 6:53-56
தொட்ட அனைவரும்!
இயேசுவைச் சந்திக்க மக்கள் ஆர்வம் காட்டுவதையும், இயேசு அவர்களுக்கு நலம் தருவதையும் பற்றி இன்றைய நற்செய்தி வாசகத்தில் எழுதுகிறோம். ‘அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்!’ என மிக அழகாக பகுதியை நிறைவு செய்கிறார் மாற்கு.
‘அனைவரும்’ என்னும் எண்ணம் இப்போது வேகமாகக் குறைந்து வருகிறது.
நாடு, மொழி, இனம், நிறம், சாதி, கொள்கை, கட்சி, சமயம், என நாளுக்கு நாள் பிளவுகள் கூடிக்கொண்டே வருகின்றன. ‘நாம்’ என்னும் நிலை மாறி, ‘நான்-நீ’ அல்லது ‘நாம்-அவர்கள்’ என்னும் பேதம் வேகமாக வளர்ந்துவருகிறது. நாம் ஒருவரைக் காண்கிற நொடியில் அவருக்கும் நமக்கும் என்ன வேறுபாடு என்றுதான் மனம் யோசிக்கத் தொடங்குகிறது. பிறப்பால், மொழியால், இனத்தால், சமயத்தால் உயர்வு-தாழ்வு பாராட்டுவது நம் உள்ளத்தில் உதிக்கிறது.
நாம் கொண்டாடுகிற கூட்டொருங்கியக்கம் மேற்காணும் வேறுபாடுகளை உடைப்பதற்கான வழிமுறையே.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இந்த உலகைப் படைக்கிற முதல் கதையாடலை வாசிக்கிறோம்.
நம் அனைவரின் ஊற்றுக்கண் கடவுளே என்று உணர்ந்துகொள்ள இந்த நிகழ்வு நம்மை அழைக்கிறது. நாம் அனைவருமே கடவுளின் வாய்ச்சொற்களாகவும் கை வேலைப்பாடுகளாகவும் பிறந்தோம். கடவுள் என்ற ஒற்றை நபர் நம் அனைவரையும் இணைப்பவராக இருக்கிறார்.
நம்மிடம் உள்ள வேற்றுமை மனப்பான்மை குறைவதற்கான ஏதாவது ஒரு முயற்சியை இன்று நாம் எடுப்போம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: