இன்றைய இறைமொழி
திங்கள், 18 நவம்பர் 2024
பொதுக்காலம் 33-ஆம் வாரம், திங்கள்
திருவெளிப்பாடு 1:1-4, 2:1-5. திருப்பாடல் 1:1-2, 3, 4-6. லூக்கா 18:35-43
நம்பிக்கைப் பார்வை
வழிப்போக்கர் ஒருவரில் தாவீதின் மகனைக் காண்பதற்கு நம்பிக்கைப் பார்வை அவசியம். பார்வையற்ற நபர் கொண்டிருந்த இலக்குத் தெளிவு, முதன்மைகள், பாதை நமக்கு வியப்பு தருகிறது. பார்வையை (மீண்டும்) பெறுதல் மட்டுமே அவருடைய விருப்பமாக இருந்தது. இயேசுவால் பார்வை பெற்ற அவர் இயேசுவோடு தன்னையே இணைத்துக்கொள்கிறார். இயேசுவை நோக்கிய, இயேசுவுடன் இணைந்த பயணம் நம் இதயங்களில் தொடங்குகிறது.
முதல் வாசகச் சிந்தனை (திவெ 1:1-4, 2:1-5)
(அ) திருவெளிப்பாடு கடவுளின் பிரமாணிக்கத்திற்கான அழைப்பு: நம்பிக்கையில் தொடர்ந்து நிலைத்திருக்கவும் எல்லாச் சூழ்நிலைகளிலும் கடவுள்மேல் கொண்டுள்ள அன்பில் பிரமாணிக்கமாக இருக்கவும் நம்மை அழைக்கிறது திருவெளிப்பாடு நூல்.
(ஆ) தொடக்கநிலை அன்பு நோக்கித் திரும்புதல்: எபேசு நகரத் திருஅவைக்கு எழுதுகிற ஆசிரியர், அவர்கள் தொடக்கத்தில் கடவுள்மேல் கொண்டிருந்த அன்பு நோக்கித் திரும்புமாறு அழைப்பு விடுக்கிறார்.
(இ) மனமாற்றம் என்றால் புத்துயிர்: நாம் விழுந்த இடங்களிலிருந்து எழுவதற்கு அழைப்பு விடுக்கிறார் இயேசு. இயேசுவை நோக்கித் திரும்புகிற பயணம் நமக்கு ஆன்மிகப் புத்துயிர் அளிக்கிறது.
பதிலுரைப் பாடல் சிந்தனை (திபா 1:1-2, 3, 4-6 )
(அ) கடவுளின் வார்த்தையில் மகிழ்தல்: கடவுளின் திருச்சட்டத்தை தியானிக்க நம்மை அழைக்கிறார் திருப்பாடல் ஆசிரியர். கடவுளின் வார்த்தை நமக்கு வழிகாட்டுதலும் வலிமையுமாக இருக்கிறது.
(ஆ) கடவுளின் நேரத்தில் கனிதருதல்: கடவுளில் நிலைத்திருப்பவரின் வாழ்க்கை தொடர்ந்து கனிதரும் மரம்போல இருக்கிறது.
(இ) நல்லாரின், பொல்லாரின் வழி: கடவுள் நல்லாரின் வழிகளைப் பேணிக்காக்கிறார். அவை வாழ்வை நோக்கி இருக்கின்றன.
நற்செய்தி வாசகச் சிந்தனை (லூக் 18:35-43)
(அ) இடைவிடாத நம்பிக்கை: பார்வையற்ற நபர் இயேசுவை நோக்கித் தொடர்ந்து குரல் எழுப்புகிறார். இயேசு மட்டுமே தன்னைக் குணமாக்க இயலும் என நம்புகிறார்.
(ஆ) நம்பிக்கை வழியாகக் காணுதல்: கண்கள் வழியாக அல்ல, மாறாக, நம்பிக்கை வழியாக இயேசுவை ‘தாவீதின் மகன்’ என அறிக்கையிடுகிறார் பார்வையற்ற நபர்.
(இ) நன்றியறிதலும் சான்று பகர்தலும்: பார்வை பெற்ற நபர் கடவுளைப் புகழ்ந்து பாடி வழிநடக்கிறார். சீடத்துவப் பயணம் சான்று பகர்தலில் தொடங்குகிறது.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ நம்பிக்கையால் அனைத்தையும் காண்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 251).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: