• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

நம்பிக்கையின் நாற்காலி. இன்றைய இறைமொழி. சனி, 22 பிப்ரவரி ’25.

Saturday, February 22, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
சனி, 22 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 6-ஆம் வாரம் – சனி
பேதுருவின் திருப்பீடம் விழா

1 பேதுரு 5:1-4. திருப்பாடல் 23. மத்தேயு 16:13-19

 

நம்பிக்கையின் நாற்காலி

 

உரோமையிலுள்ள புனித பேதுரு பசிலிக்காவின் உள் சுவரில் தூய ஆவியாரின் திருவுருவம் தாங்கிய கண்ணாடி ஒன்று உண்டு. அந்தப் படத்துக்குக் கீழே பழைமை வாய்ந்த நாற்காலி ஒன்று இருக்கிறது. இந்த நாற்காலியை புனித பேதுரு பயன்படுத்தினார் என்பது மரபுவழிச் செய்தி. இந்ந நாற்காலியைச் சுற்றி நான்கு மறைவல்லுநர்களின் உருவங்கள் நிற்கின்றன: கீழைத் திருஅவையைச் சார்ந்த புனித ஜான் கிறிஸோஸ்தம் மற்றும் புனித அத்தனாசியுஸ், மேலைத்தேய திருஅவையைச் சார்ந்த புனித அம்புரோஸ் மற்றும் புனித அகுஸ்தீன். இந்நான்கு மறைநூல் வல்லுநர்களும் இணைந்து நின்று திருஅவையின் ஒருமைப்பாட்டைக் குறித்துக் காட்டுவதோடு, அவர்கள் பேதுருவின் அதிகாரத்தின்கீழ் செயல்படுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது. நாற்காலிக்கு மேலே உள்ள இரண்டு வானதூதர்கள் இணைந்து, திருத்தந்தையின் மூன்று பொறுப்புகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்: அவர் (அ) அரசர்களின் தந்தை, (ஆ) உலகின் ஆளுநர், (இ) கிறிஸ்துவின் பதிலி.

 

ஏறக்குறைய 4-ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுகிற இந்த விழா, திருத்தூதர் பேதுரு மற்றும் அவருடைய வழிவருபவர்களின் மேன்மையையும் எடுத்துரைக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ என்று இயேசு கேட்டவுடன், ‘நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்’ என உரைக்கிறார் சீமோன். சீமோன் என்னும் பெயரை உடனடியாக பேதுரு என மாற்றுகிற இயேசு, அந்தப் பாறையின்மேல் தம் திருச்சபையைக் கட்டுவதாக வாக்களிக்கிறார்.

 

முதல் வாசகத்தில், மூப்பர்களுக்கு அறிவுறுத்துகிற பேதுரு தன்னையும் உடன்பணியாளர் என முன்மொழிகிறார். திருத்தந்தையின் பணி மற்ற ஆயர்களுடன் இணைந்து செய்யப்பட வேண்டிய பணி என்பதை நாம் இங்கே கற்றுக்கொள்கிறோம்.

 

இந்த விழா நமக்குத் தரும் பாடங்கள் எவை?

 

(அ) நம்பிக்கையின் உறுதித்தன்மை

 

நாம் இயேசுவின்மேல் கொண்டிருக்கிற நம்பிக்கையே திருஅவையின் அடித்தளமாக இருக்கிறது. இந்த அடித்தளம் உறுதியாக இருக்க வேண்டும்.

 

(ஆ) பணி செய்யும் அதிகாரம்

 

அந்தியோக்கிலும் பின்னர் உரோமையிலும் ஆட்சி செய்த பேதுரு, அதிகாரத்தால் அல்ல, மாறாக, பணி செய்வதன் வழியாக மக்களை ஆட்சி செய்கிறார்.

 

(இ) தலைமைத்துவத்தின் விழா

 

அகில உலகத் திருஅவை தொடங்கி, மறைமாவட்டத் திருஅவை வரை பணியாற்றும் திருத்தந்தை, ஆயர்களுக்காக நாம் இறைவேண்டல் செய்வோம்.

 

பதிலுரைப் பாடலில் தன் ஆண்டவராகிய கடவுளை ‘ஆயர்’ என அழைக்கிற தாவீது, அவருடைய அருள்நலமும் பேரன்பும் புடைசூழ்ந்து வரும் என்கிறார். திருஅவையின் தலைமைத்துவத்துக்காக இறைவேண்டல் செய்கிற நாம் நமக்குரிய அழைத்தல் நிலையில் தலைமைத்துவத்தை வாழ்ந்து காட்டுவோம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: