இன்றைய இறைமொழி
திங்கள், 11 நவம்பர் 2024
பொதுக்காலம் 32-ஆம் வாரம், திங்கள்
தூரின் நகர புனித மார்ட்டின், நினைவு
தீத்து 1:1-9. திருப்பாடல் 24:1-2, 3-4, 5-6. லூக்கா 17:1-6
நம்பிக்கை வாழ்வு
நாம் கிறிஸ்துவின்மேல் கொண்ட நம்பிக்கையில் அனைவரும் ஒன்றாக இருந்தாலும், பணிநிலையிலும் அழைத்தலிலும் வேறுபாடுகள் உள்ளன. நம்பிக்கையாளர்கள், மூப்பர்கள், சபைக் கண்காணிப்பாளர்கள் ஆகிய அனைவரும் அவரவருக்குரிய அழைத்தல் நிலைக்குரிய பண்புகளால் தங்கள் வாழ்வை அணி செய்து நம்பிக்கையை வாழ்வாக்க வேண்டும்.
முதல் வாசகச் சிந்தனை (தீத் 1:1-9)
(அ) கடவுளின் உண்மைக்கு ஏற்ற வாழ்வு: நம் நம்பிக்கையும் உண்மை பற்றிய அறிவும் இறைப்பற்றுக்கு நம்மை அழைத்துச்செல்ல வேண்டும். கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள நம்பிக்கை நாணயமும் நேர்மையும் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
(ஆ) பிரமாணிக்கம்நிறை சீடத்துவம்: திருஅவையில் தலைமை நிலைக்கு வருகிறவர்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளை எடுத்துரைக்கிறார் பவுல்: தன்னடக்கம், குறைச்சொல்லுக்கு ஆளாகாத நிலை, நேர்மை. தலைமை நிலையில் இருக்கிற நாம் பவுல் முன்மொழியும் மதிப்பீடுகளைப் பெற்றுள்ளோமா?
(இ) நலந்தரும் போதனையைப் பற்றிக்கொள்தல்: திருஅவையின் தலைவர்கள் நலம்தரும் போதனையைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதை அவர்கள் மற்றவர்களுக்கு வழங்கவும், மற்றவர்களின் தவறுகளைத் திருத்தவும் முடியும்.
பதிலுரைப் பாடல் சிந்தனை (திபா 24:1-2, 3-4, 5-6)
(அ) படைப்பின்மேல் கடவுளின் இறையாண்மை: பூவுலகும் அதில் உள்ள யாவும் கடவுளுக்கு உரியவையாக இருக்கின்றன. ஆக, படைப்பின்மேல் மதிப்பும், கடவுளுடைய பராமரிப்புக்காக நன்றியும் அவசியம்.
(ஆ) இதயத் தூய்மையும் செயல்பாடும்: ‘கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவரே’ ஆண்டவரின் திருமுன்னிலைக்குச் செல்ல முடியும். தூய்மையான வாழ்வு அகத்திலும் புறத்திலும் வேண்டும்.
(இ) ஆண்டவரைத் தேடுவோர் பெறுகிற ஆசி: ஆண்டவருடைய திருமுகத்தை நாடுதல் என்றால் அவரோடு உறவுநிலையில் நீடித்தல்.
நற்செய்தி வாசகச் சிந்தனை (லூக் 17:1-6)
(அ) உறவுநிலைகளில் பொறுப்புணர்வு: ஒருவர் மற்றவருக்கு குறிப்பாக வலுவற்றவர்களுக்கு இடறலாக இருப்பதை இயேசு கண்டனம் செய்கிறார். நாம் ஒருவர் மற்றவரை நம்பிக்கையில் உற்சாகப்படுத்தவும், மற்றவர்களுக்குத் துன்பம் வருவிப்பவற்றைத் தவிர்க்கவும் வேண்டும்.
(ஆ) மன்னிப்பின் ஆற்றல்: கடினமாக இருந்தாலும், தொடர்ந்து மன்னிக்கும்போது அது நம் இயல்பாக மாறிவிடுகிறது. மன்னிக்கும் குணம் கொண்டிருக்கிற ஒருவர் கடவுளின் இரக்கத்தை இங்கே பிரதிபலிக்கிறார்.
(இ) சிறியளவு நம்பிக்கை: கடுகுவிதை அளவு உள்ள நம்பிக்கையும் பெரியவற்றை நிகழ்த்தும் ஆற்றல் வாய்ந்தது. நாம் செய்யும் சிறிய செயல்களும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
இன்றைய நினைவு (தூரின் நகர் புனித மார்ட்டின்)
(அ) வறியோர்பால் இரக்கம்: வழியில் யாசகம் செய்துகொண்டிருந்தவருக்கு தன் போர்வையை வழங்குகிறார் மார்ட்டின். எளியோரில் கிறிஸ்துவைக் காண்பதும், கண்டு, அன்போடும் தாராள உள்ளத்தோடும் பதிலிறுத்தலும் வேண்டும்.
(ஆ) பாதுகாப்பு வளையம் விட்டு வெளியேறுதல்: இராணுவத்தில் ஆற்றிய பணியை விடுத்து கிறிஸ்துவைப் பற்றிக்கொள்கிறார் மார்ட்டின்.
(இ) அமைதியும் ஒப்புரவும்: குழுமங்களிலும் குடும்பங்களிலும் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துதல் மேன்மையான பணி ஆகும்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்கள் நம்பிக்கையை வாழ்வில் வெளிப்படுத்துகிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 245).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: