இன்றைய இறைமொழி
புதன், 26 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 7-ஆம் வாரம் – புதன்
சீராக்கின் ஞானம் 4:11-19. திருப்பாடல் 119. மாற்கு 9:38-40
நம் சார்பாக!
நம்மோடு இருக்கிற ஒருவரே நம்மைவிட நன்றாகச் செயல்படும்போது அல்லது வெற்றிபெறும்போது அல்லது நல்ல நிலைக்கு உயரும்போது அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அப்படி இருக்க நம்மைச் சாராத ஒருவரின் செயல்பாட்டை, வெற்றியை, நல்ல நிலையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
இயேசுவின் சீடர்கள் ஏற்கெனவே சிறுவன் ஒருவனைப் பிடித்திருந்த பேயை ஓட்டப் போய் அதை ஓட்ட இயலாமல் போகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில், தங்கள் குழுவைச் சாராத ஒருவர் இயேசுவின் பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு அவர்மேல் பொறாமை, கோபம் கொண்டு நிகழ்வை இயேசுவின் கவனத்துக்குக் கொண்டு வருகிறார்கள். இயேசு தம் சீடர்களின் பார்வையை அகலமாக்கி, அனைவரையும் நம்மவர்போல ஏற்றுக்கொள்ள அழைக்கிறார்.
இயேசுவுடைய பெயரின் ஆற்றல்
இயேசுவின் சீடர்கள் குழாமைச் சாராத ஒருவர் இயேசுவின் பெயரைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார். இயேசுவின்மேல் அந்த நபர் கொண்டிருந்த நம்பிக்கையும், இயேசுவின் பெயர் கொண்டிருந்த ஆற்றலும் நமக்குப் புலனாகின்றன. ‘யோசுவா’ (‘அவர் விடுவிக்கிறார், காப்பாற்றுகிறார்’ என்பது பொருள்) என்னும் இயேசுவின் பெயர் ஆற்றல் நிறைந்ததாக இருக்கிறது.
அவர்-நாங்கள்-நாம்
‘அவர்-நாங்கள்’ என்று மற்றொரு நபரைப் பார்த்து வேற்றுமைப்படுத்திய சீடர்களை, ‘நாம்’ (இயேசு என்னும் பெயரை உச்சரிக்கிற, பயன்படுத்துகிற அனைவரும்) என்னும் சொல்லால் அனைவரையும் ஒன்றிணைக்கிறார் இயேசு. நான்-அவர் என்னும் பேதம் அல்லது வேறுபாடு பல நேரங்களில் வித்தியாசங்களை உருவாக்குவதோடு, ஒருவர் மற்றவரை அந்நியப்படுத்துகிறது.
கடவுளின் செயல்பாடு
கடவுள் அனைவர் வழியாகவும் செயல்பட வல்லவர். அவருடைய செயல்பாடுகளை வரையறுக்க மனிதர்களாகிய நம்மால் இயலாது. அவருடைய செயல்பாடுகளை அப்படியே ஏற்று அவை நம் வாழ்வில் நடந்தேறுமாறு மனம் திறந்து வைத்தல் நலம்.
சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்க்கை
நாம் வளர வளர இந்த ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம். அதாவது, ஒருவர் மற்றவரைப் பகைத்துக்கொண்டு, சண்டை சச்சரவு செய்துகொண்டு வாழ்வதால் பயன் ஒன்றுமில்லை. அனைவரோடு இணக்கத்தோடு வாழும்போது நம் மன அமைதியை நாம் தக்கவைத்துக்கொள்கிறோம்.
நிறைவாக,’நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்’ என்று மானிடர் பற்றிய பரந்த கண்ணோட்டத்தைப் பெற்றுக்கொள்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில், ஞானத்தின் செயல்பாடுகளையும் ஞானத்தைத் தேடுவதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார் பென் சீரா.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: