• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

நற்செய்திக்காக எல்லாவற்றையும்! இன்றைய இறைமொழி. செவ்வாய், 3 டிசம்பர் ’24.

Tuesday, December 3, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Advent

இன்றைய இறைமொழி
செவ்வாய், 3 டிசம்பர் ’24
திருவருகைக்காலம் முதல் வாரம் – செவ்வாய்
புனித பிரான்சிஸ் சவேரியார், பெருவிழா (இந்தியா)
எசாயா 61:1-3. 1 கொரிந்தியர் 9:16-19, 22-23. மாற்கு 16:15-20

 

நற்செய்திக்காக எல்லாவற்றையும்!

 

‘சீடர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினார். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு நிகழ்ந்த அரும்அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்’ – இவ்வாறு தன் நற்செய்தியை நிறைவு செய்கிறார் மாற்கு.

 

சவேரியார் அறிவித்த நற்செய்தி உண்மையானது என்பதை உறுதிப்படுத்துகிறார் ஆண்டவர். இன்று நாம் கொண்டாடி மகிழும் நம் பெரிய தகப்பன் புனித பிரான்சிஸ் சவேரியாரின் அழியாத திருவுடல் இந்நாள்களில் கோவா மறைமாவட்டத்தில் பொதுமக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. நமக்கு நற்செய்தி அறிவித்தவரின் முகத்தையும், நம் ஊர்களில் நடந்த கால்களையும், நமக்குத் திருமுழுக்குக் கொடுத்த கைகளையும் பார்த்துவிட வேண்டும் என மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள்.

 

அழியாஉடல் புனிதர் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் எவை?

 

  1. மாற்றமும் திரும்பாத திடமும்

 

பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பிரான்சிஸ் சவேரியார், தன் எழுத்து, புத்தகம், கரும்பலகை, மாணவர் சந்திப்பு, ஆய்வுத்தாள் என்று மும்முரமாக இருந்தபோது, புனித இஞ்ஞாசியார் சுட்டிக்காட்டிய விவிலிய வார்த்தைகளை – ‘ஒருவர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் வாழ்வை (ஆன்மாவை) இழந்துவிட்டால் என்ன பயன்!’ – கேட்டவுடன், தன் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டார். மாற்றியது மட்டுமல்ல, அந்தப் பாதையிலிருந்து ஒரு நொடியும் திரும்பவில்லை. மாற வேண்டியது மட்டுமல்ல, மாறியபின் திடமாக இருப்பதும் முக்கியமானது எனக் கற்றுத் தருகிறார் நம் புனிதர்.

 

  1. நலம் தருதல்

 

நம் புனிதர் தன் பணிவாழ்வில் பல வல்ல செயல்களை நடத்தியிருப்பதாக – குறிப்பாக, நலம் நல்கியதாக – நாம் பல இடங்களில் வாசித்திருக்கின்றோம். புனித அருளானந்தரும் கூட, அவருடைய அன்னை புனித சவேரியாரிடம் மன்றாடியதால்தான் உடல்நலம் பெற்றதாக வரலாற்றில் வாசிக்கின்றோம். தன்னிலே நலமாக இருக்கும் ஒருவர்தான் பிறருக்கு நலம் தர முடியும்.

 

  1. ஆன்மீகப் பயிற்சிகள்

 

நம் உடல்நலனுக்கு உடற்பயிற்சி பயன்தருவது போல, ஆன்மீக வாழ்வுக்கு ஆன்மீகப் பயிற்சிகள் பயன்தருவதோடு அவசியமாகின்றன. பயிற்சி தரப்படும் எதுவும் பலம் பெறுகிறது. புனித சவேரியார் தன் மனமாற்றத்தில் உறுதியாக இருக்கக் காரணம் அவர் தன்னையே அன்றாடம் ஆன்மீகத்தில் புதுப்பித்துக் கொண்டதுதான்.

 

  1. கீழ்ப்படிதல்

 

கீழ்ப்படிதலில்தான் முழுமையான கட்டின்மை (சுதந்திரம்) உள்ளது என்பதற்கு புனித சவேரியாரின் வாழ்வு நல்ல எடுத்துக்காட்டு. கடவுளுக்கும், திருஅவைக்கும், திருத்தந்தைக்கும், தன் சபையின் தலைவர் இனிகோவுக்கும் கீழ்ப்படிதலை வழங்கிய நம் புனிதர், கீழ்ப்படிதலே தூய்மை வாழ்வுக்கான அழைப்பின் முதற்படி என உணர்த்துகின்றார்.

 

  1. ஏழ்மையின்மேல் காதல்

 

நம்மவர்கள் வெளி நாடுகளில் சென்று பணி செய்வது கடினம் அல்ல. தட்பவெப்ப நிலை தவிர மற்ற அனைத்தும் மேலை நாடுகளில் மிகவும் சிறப்பாக இருக்கும். மோசமான தட்பவெப்ப நிலையை எதிர்கொள்வதும் அங்கே எளிது. ஆனால், அங்கிருப்பவர்கள் இங்கு வந்து பணி செய்வது கடினம். அதிக வெப்பம், காரம் நிறை உணவு, புரியாத மொழிகளும் கலாச்சாரங்களும், மோசமான வாழிடம், பாதுகாப்பற்ற தண்ணீர், கழிப்பிட வசதியின்மை, மருத்துவத்தில் பின்தங்கிய நிலை, மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் இல்லாமை, மக்களை பிரிவுபடுத்திய சாதியம், மக்களின் மூட நம்பிக்கைகள் என எவ்வளவோ இடர்பாடுகள் இருந்தாலும், தன் ஏழ்மையால் நம் மண்ணைத் தழுவிக்கொண்டார். நம் நாட்டின் ஏழையருள் ஒருவராகத் தன்னை இணைத்துக்கொண்டார் நம் புனிதர்.

 

  1. மக்கள்மேல் அன்பு

 

மக்கள்மேல் கொண்ட அன்பினால் புனித சவேரியார் மக்களின் குறைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். நம் புனிதர், தன் சபைத் தலைவர் இனிகோவுக்கு எழுதிய கடிதங்கள் நம் மக்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் உதவுகின்றன. நம் தாய்நாட்டு மக்களின் அறியாமை மற்றும் இயலாமையை அவர் குறையென்று ஒருபோதும் கருதவில்லை. அவற்றைப் பற்றி தன் தலைவரிடம் முறையிடவும் இல்லை. நம் மக்களைத் தீர்ப்பிடாமல் அன்பு செய்தவர் இவர்.

 

  1. திருத்தூதுப்பணி படைப்பாற்றல்

 

இன்று நம் கிறிஸ்தவம் தக்கவைக்கப்படுகிறதே அன்றி விரிவுபடுத்தப்படுவதில்லை. நாம் நம் பாதுகாப்பு வளையங்களான நிறுவனங்கள், ஆலயங்கள், வளாகங்களுக்குள் நம்மையே சுருக்கிவிட்டோம். புனித சவேரியார் ஒரு நல்ல பேராசிரியராக இருந்ததால், மறைக்கல்வி கற்றலை எளிதாக்குகின்றார். பாடல்கள், சுலோகங்கள், பயிற்சிகள் வழியாக மறைக்கல்வி கற்றுத்தந்தார். இன்று நம் படைப்பாற்றலைப் பயன்படுத்தி திருத்தூதுப் பணி வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

 

  1. திருமுழுக்கு

 

நாளின் இறுதியில் தன் கையைத் தூக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும் அளவுக்கு புனித சவேரியார் திருமுழுக்கு கொடுத்ததாக நாம் அவரது வாழ்க்கை வரலாற்றில் வாசிக்கின்றோம். அந்தக் காலத்தில், அதிகமான திருமுழுக்கு அதிகமான கிறிஸ்தவர்கள், அதிகமான கிறிஸ்தவர்கள், அதிகமான கிறிஸ்தவம் என்ற புரிதலே இருந்தது. வெறும் திருமுழுக்கு மட்டும் நம்மைக் கிறிஸ்தவர்கள் ஆக்கிவிடுமா? எனப் பலர் விமர்சிப்பதுண்டு. ஆக்கிவிடாதுதான்! ஆனால், அது ஒரு நல்ல தொடக்கம் என்பதை அறிந்திருந்தார் நம் புனிதர்.

 

  1. பணிப் பகிர்வு

 

தானே ஒரு இடத்தில் தங்கி தன் பணியைச் சுருக்கிக்கொள்ளவில்லை புனித சவேரியார். தன் வாழ்வின் குறுகிய தன்மையை உணர்ந்த ஞானியாக அவர் இருந்ததால், தான் தன் திருஅவையின் தலைவராக இருப்பதற்குப் பதிலாக, அந்தந்த ஊரில் தலைவர்களை உருவாக்கினார். இது நாம் கற்க வேண்டிய பெரிய மேய்ப்புப் பணிப் பாடம். நம் பங்குகள் இன்னும் அருள்பணியாளர்களை மையப்படுத்தியே இயங்குகின்றன. மேலும், அருள்பணியாளர்கள் பல நேரங்களில் தலைவர்களாக இருக்கவே விரும்புகின்றனரே, தலைவர்களை உருவாக்கத் தயங்குகிறார்கள். தனக்கு எதுவும் நிலையல்ல என்று நினைத்த நம் புனிதர், அனைவரையும் நிரந்தரத்திற்குத் தயாரித்தார்.

 

  1. பண்பாட்டுமயமாக்கல்

 

நம் திருஅவையின் இரண்டாம் வத்திக்கான் சங்கம், பண்பாட்டுமயமாக்கல் அல்லது கலாச்சாரமயமாக்கலை அதிகமாக வலியுறுத்துகிறது. ‘நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்’ என்ற பவுலைத் தன் முன்மாதிரியாகக் கொண்ட நம் புனிதர், கிறிஸ்தவத்தின் முக்கியக் கூறுகளை நம் பண்பாட்டின் கூறுகளோடு பிணைத்து மக்களுக்கு அளித்தார். இப்படியாக, தன் அந்நியத்தன்மை நம் மக்களுக்கு இடறலாக இல்லாதவாறு பார்த்துக்கொண்டார். மேலும், தன் இன்சொல்லால் நம் நாட்டு அரசர்களின் நன்மதிப்பைப் பெற்றார் புனிதர். எல்லாப் பண்பாடும் நல்லதே, எல்லா மாந்தர்களும் பண்புடையவர்களே என்ற தன் பெருந்தன்மையால் அவர் இவ்வாறு செயல்பட்டார்.

 

  1. செபமும் தவமும்

 

தன் அயராத பணிகளுக்கு நடுவிலும் பல மணி நேரங்கள் நற்கருணையின் முன் அமர்ந்து இறைவேண்டல் செய்தார். பல மைல் கற்கள் பயணம் செய்ய வேண்டியிருப்பினும் குறைவான உணவே உட்கொண்டார். இந்நாட்டு மக்கள் ஏழ்மையில் இருக்க தான் உண்டு குடிப்பது தவறு என்று உணர்ந்திருந்தார் நம் புனிதர். தன் பணிதான் செபம் என்று சொல்லித் தன் ஓய்வை நியாயப்படுத்தவில்லை அவர்.

 

  1. திருத்தூது ஆர்வம்

 

‘எனக்கு நிறைய ஆன்மாக்களைக் கொடும்!’ என்பதும், ‘எப்போதும் மேன்மையானதே!’ என்பதும் தான் இவருடைய இறைவேண்டல்களாக இருந்தன. இவருடைய திருத்தூது ஆர்வம் இவரை ஜப்பான் நாட்டின் கடற்கரை வரை அழைத்துச் சென்றது. ‘இது போதும்!’ என்று தன் பணியை நிறுத்திக்கொள்ளவில்லை நம் புனிதர். ‘இன்னும் கொஞ்சம்! இன்னும் கொஞ்சம்! என் இயேசுவுக்காக!’ என்பதே இவரது எண்ணமும் செயலுமாக இருந்தது.

 

பெரிய தகப்பனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: