இன்றைய இறைமொழி
செவ்வாய், 8 அக்டோபர் 2024
பொதுக்காலம் 27-ஆம் வாரம், செவ்வாய்
கலாத்தியர் 1:13-24. லூக்கா 10:38-42
நல்ல பங்கு
நிலைவாழ்வு பெறுவதற்கான இரு முதன்மையான கட்டளைகளை இயேசு முன்மொழிகிறார். பிறரை அன்பு செய்வதற்கான உருவகமாக நல்ல சமாரியரைத் தருகின்றார். தொடர்ந்து லூக்கா பதிவு செய்யும் நிகழ்வு கடவுளை அன்பு செய்வதைப் பற்றியதாக இருக்கின்றது. இதை ஓர் உருவகமாக அல்லாமல் நிகழ்வாகப் பதிவு செய்கின்றார்.
இயேசு பெத்தானியாவுக்கு வருகின்றார். அங்கே மார்த்தா தம் வீட்டில் அவரை வரவேற்கின்றார். இயேசுவைக் கவனிப்பதில் மிகவும் அக்கறை காட்டுகின்றார். அந்தப் பணியில் தான் தனியாக விடப்பட்டதாக உணர்கின்றார். மரியாவோ இயேசுவின் காலடிகளில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார். இயேசு மரியாவின் செயலைப் பாராட்டுகின்றார்.
இங்கே இரு வகை விருந்தோம்பலைக் காண்கின்றோம். முதல் வகை விருந்தோம்பலில், விருந்திற்கு அழைத்தவர் விருந்தினருக்குப் பரிமாறுகின்றார். அதாவது, மார்த்தா இயேசுவுக்குப் பரிமாறுகின்றார். இரண்டாம் வகை விருந்தோம்பலில், விருந்துக்கு அழைத்தவர் விருந்தினரால் பரிமாறப்படுகின்றார். அதாவது, மரியா இயேசுவால் பரிமாறப்படுகின்றார்.
ஆக, இறைவனை அன்பு செய்வது என்பது, அவருடைய காலடிகளில் நாம் அமர, அவர் நமக்குப் பரிமாறுவது.
முதல் வகை விருந்தோம்பலில், விருந்தினர், பெறுகின்ற நிலையில் இருக்கின்றார்.
இரண்டாம் வகை விருந்தோம்பலில், விருந்தினர், தருகின்ற நிலையில் இருக்கின்றார்.
நம் இறைவன் பெறுகின்ற நிலையில் இருப்பவர் அல்லர். அவர் நிறைவாக இருப்பதால் அவருக்கு நாம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. குறைவானவர்களாக இருக்கின்ற நாம் அவரால் நிறைவுசெய்யப்பட வேண்டும். இதுவே மேன்மையான நிலை.
முதல் வகை நிலையில், விருந்தினர் உயர்ந்த நிலையில் இருக்கின்றார். அதாவது, நின்றுகொண்டிருக்கின்றார். அழைக்கப்பட்டவர் அமர்ந்திருக்கின்றார்.
இரண்டாம் வகை நிலையில், விருந்துக்கு அழைத்தவர் அழைக்கப்பட்டவரின் காலடிகளில் அமர்ந்து, மற்றவரை உயர்த்துகின்றார்.
ஆக,
இறைவனால் நாம் பரிமாறப்படாத வரை, நம் வயிறுகள் என்றும் காலியாகவே இருக்கும்.
இறைவனை, பெறுகின்ற நிலையில் வைத்து, நாம் அவருக்குத் தர முயற்சிக்கும்போதெல்லாம் நம் வாழ்வில் பரபரப்பும், கவலையும்தான் மிஞ்சும்.
இறைவனைத் தாழ்த்தி, நம்மை நாம் உயர்த்தினால் நம் உறவுநிலைகளில் தனிமையே மிஞ்சும்.
இயேசுவைத் தன் வீட்டுக்குள் அழைத்து விருந்து பரிமாறினார் மார்த்தா.
ஆனால், ஆண்டவரின் காலடிகளில் அமர்ந்தார் மரியா.
மார்த்தா, வந்த விருந்தினரில் இயேசுவைக் கண்டார். மரியாவோ, ஆண்டவரைக் கண்டார்.
இயேசுவைக் காணும் நிலையிலிருந்து ஆண்டவரைக் காணும் நிலைக்குக் கடத்தலே சிறந்த பங்கு. அந்தப் பங்கு நம்மிடமிருந்து எடுக்கப்படாது. ஏனெனில், அது தனிப்பட்ட வாழ்வியல் அனுபவம்.
முதல் வாசகத்தில், தன் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிற பவுல், தான் கடவுளைத் தேர்ந்துகொண்டதை அறிவிக்கிறார். தன் தாயின் வயிற்றிலேயே கடவுள் தேர்ந்துகொண்டதாக முன்மொழிகிறார். நம் வாழ்வுக்கான நோக்கத்தை நாம் கண்டுகொள்ள நம்மை அழைக்கிறது முதல் வாசகம். நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் நல்ல பங்கை வைத்துள்ளார்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ இறையன்புக்கும் பிறரன்புக்குமான சமநிலையை அறிந்தவர்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 219)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: