இன்றைய இறைமொழி
திங்கள், 28 அக்டோபர் ’24
பொதுக்காலம் 30-ஆம் வாரத்தின் திங்கள்
திருத்தூதர்கள் புனித சீமோன், ததேயு
எபேசியர் 2:19-22. லூக்கா 6:12-19.
நாமும் திருத்தூதர்களே!
‘திருத்தூதர்களின் போதனைவழி நின்றி, அவர்களின் பாரம்பரியும் போற்றி, அவர்களுடைய வாழ்வால் தூண்டப்பெறும்போது நாமும் திருத்தூதர்களே!’
இன்று திருத்தூதர்களும் புனிதர்களுமான சீமோன்-யூதா திருநாளைக் கொண்டாடுகிறோம். ‘தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா அல்லது ததேயு’ என இவர்களை அழைக்கிறார் லூக்கா. ‘கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலர்’ யூதா-ததேயு பக்தி முயற்சி பல இடங்களில் முதன்மையாக உள்ளது. இவர் இயேசுவின் உறவினர் என்பதும், தண்ணீர் திராட்சை இரசமாக மாற்றப்பட்ட கானாவூரில் அன்று நடந்தது இவருடைய திருமணம்தான் என்பது மரபுவழிச் செய்தி.
திருத்தூதர்களைப் பற்றிய மூன்று புரிதல்களைத் தருகின்றன இன்றைய வாசகங்கள்:
(அ) அடித்தளங்கள் அடிப்படையானவை, கண்களுக்குத் தெரியாதவை: திருஅவை என்பதைக் கட்டடம் என உருவகம் செய்கிற பவுல் (முதல் வாசகம்), கட்டடத்தின் அடித்தளங்கள் எனத் திருத்தூதர்களையும் இறைவாக்கினர்களையும் முன்மொழிகிறார். ‘அடித்தளம்’ ஒரு கட்டடத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், அடித்தளத்தைப் பொருத்தே கட்டடத்தின் உறுதித்தன்மை இருக்கும். ஆனால், அடித்தளம் நம் கண்களுக்கு மறைவாக இருக்கிறது. கட்டடமே மற்றவர்களின் பார்வையில் படுகிறது. கட்டடத்தை மட்டுமே நாம் பாராட்டுகிறோம். உணவில் மறைந்திருக்கிற உப்பு போல, கட்டடத்திலிருந்து மறைந்து நிற்கிறது அடித்தளம். நம் நம்பிக்கை வாழ்வு என்னும் கட்டடம் திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டுள்ளது. திருத்தூதர்கள் வழியாக நாம் நம்பிக்கையைப் பெற்றோம். நமக்குத் தங்கள் நம்பிக்கையைக் கொடுத்துவிட்டு அவர்கள் மறைந்து நிற்கிறார்கள். நம்மில் இயேசு மலர்ந்து நிற்கிறார்.
(ஆ) மலைமேல் இயேசுவோடு, தரையில் மக்களோடு: இன்றைய நற்செய்தி வாசகத்தில், சீடர்களிடமிருந்து திருத்தூதர்களை இயேசு தெரிவு செய்யும் நிகழ்வு மலைமேல் நடக்கிறது. இறைவேண்டலில் தனித்திருக்கிற இயேசு, இறைவேண்டலின் இறுதியில் திருத்தூதர்களைத் தெரிவு செய்கிறார். தொடர்ந்து, அவர்களைக் கீழே கூட்டி வருகிறார். சமவெளியான நிற்கிற அந்த இடத்தில்தான் இயேசுவின் பணியும் திருத்தூதர்களின் பணியும் தொடங்குகிறது. இயேசுவோடு மலையிலும் மக்களோடு தரையிலும் நிற்பவர்களே திருத்தூதர்கள். ஆன்மிக வாழ்வின் இரு தளங்களை மலையும் தரையும் குறிக்கின்றன. முதல் ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுளின் பத்துக் கட்டளைகளை சீனாய் மலையில் பெறுகிற மோசே கீழே இறங்கி வருகிறார் (காண். விப 34:29-34). அமலேக்கியரோடு நடந்த போரில் (காண். விப 17:8-16), மோசே மலைமேல் ஆண்டவரை நோக்கி கைகளை உயர்த்தி நிற்கிறார், யோசுவா தரையில் அமலேக்கியரை நோக்கி வாள் பிடித்து நிற்கிறார். மலையும் தரையும் இணையும் புள்ளியே வெற்றியின் தொடக்கமாக இருக்கிறது. நம் வாழ்விலும் இவ்விரு தளங்கள் அடிப்படையானவை.
(இ) பெயர்களோடும் செயல்களோடும்! மலையில் திருத்தூதர்கள் இயேசுவுடன் இருக்கும் நிகழ்வில் அவர்களுடைய பெயர்களைப் பதிவு செய்கிறார் லூக்கா. ஆனால், தரையில் அவர்கள் இயேசுவுடன் இருக்கும்போது அவர்களுடைய பெயர்கள் பதிவுசெய்யப்படவில்லை. மாறாக, அவர்கள் செய்த ஆற்றல்மிகு செயல்கள் – போதித்தல், நோய்களைக் குணமாக்குதல், பேய்களை ஓட்டுதல் – மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. நம் பெயர்கள் மட்டும் நமக்கு அடையாளமாக இருப்பதில்லை, மாறாக, நாம் செய்யும் செயல்களே நம்மை அடையாளப்படுத்துகின்றன. இயேசுவின் திருத்தூதர்களின் புகழ் நிலைப்பதற்கான காரணம் அவர்கள் பெற்றிருந்த பெயர்களோ, அல்லது அவர்கள் இயேசுவோடு கொண்டிருந்த நெருக்கமோ அல்ல, அவர்கள் இயேசுவோடு இருந்தபோதும் அதற்குப் பின்னரும் செய்த பணிகளே. நம் வாழ்விலும் நம் பெயர்கள் நம் அடையாளங்கள் அல்ல, மாறாக, நம் செயல்களே!
‘மக்கள் யாவரும் இயேசுவைத் தொட முயன்றார்கள்’ என நற்செய்தி வாசகம் நிறைவுபெறுகிறது. மக்களுக்கும் இயேசுவுக்கும் இடையே நிற்கிற பாலங்களாகத் திகழ்கிறார்கள் திருத்தூதர்கள். இவர்களுடைய நம்பிக்கை விரல்கள் வழியாகவே நாம் இன்று இயேசுவைத் தொடுகிறோம். இந்த விரல்கள் இந்த உலகில் நீண்டுகொண்டே செல்கின்றன – நம் வழியாக!
நிற்க.
புனித யூதா ததேயு பக்தி முயற்சி பற்றிய ஒரு குறிப்பு. புனித யூதா ததேயுவின் கையில் இருக்கும் சுருள் பற்றிய கதையாடல் பாரம்பரியத்தில் உண்டு. அதன்படி, எதேஸ்ஸா நாட்டைச் சார்ந்த (இன்றைய துருக்கி) அரசர் அப்காரின் தொழுநோயைப் போக்குவதற்காக இயேசு வருமாறு அவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அப்காரின் நம்பிக்கையைக் காண்கிற இயேசு தம் முகத்தை ஒரு துணியில் பதித்து, யூதா ததேயு வழியாக அதை அரசரிடம் அனுப்புகிறார். இயேசுவின் திருமுக உருவத்தைத் தாங்கிய துணியை யூதா ததேயு அரசர்முன் விரிக்க, அரசர் உடனடியாக நலம் பெறுகிறார்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் மறைப்பணி செய்கிற யூதா ததேயு அங்கேயே மறைசாட்சியாக இறக்கிறார். இவருடைய எலும்புகள் உரோமைக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் புனித பேதுருவின் கல்லறைக்கு அருகில் வைக்கப்படுகின்றன. புனித ப்ரிஜித் மற்றும் புனித பெர்நார்துவுக்குத் தோன்றுகிற இயேசு, ‘கைகூட இயலாதவற்றைக் கைகூடச் செய்பவர் புனித யூதா ததேயு’ என வெளிப்படுத்துகிறார்.
யூதா ததேயு கற்பிக்கும் பாடம் இதுவே: இயேசுகிறிஸ்துவின்மேல் நம்பிக்கை வையுங்கள், மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள். இரண்டாம் ஏற்பாட்டில் நாம் காண்கிற மிகச் சிறிய புத்தகமான ‘புனித யூதா எழுதிய திருமுகம்’ ஒட்டுமொத்த விவிலிய வரலாற்றையும் சொல்வதோடு, இரு முக்கியமான அறிவுரைகளை வழங்குகிறது: ‘தூய்மைமிகு நம்பிக்கையாக அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்’ (வ. 20), ‘நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்’ (வ. 22).
‘திருத்தூதர்களின் போதனைவழி நின்றி, அவர்களின் பாரம்பரியும் போற்றி, அவர்களுடைய வாழ்வால் தூண்டப்பெறும்போது நாமும் திருத்தூதர்களே!’
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்கள் வாழ்விடங்களில் திருத்தூதுப் பணி ஆற்றுகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 236).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: