இன்றைய இறைமொழி
சனி, 9 நவம்பர் 2024
பொதுக்காலம் 31-ஆம் வாரம், சனி
தூய யோவான் இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு, விழா
எசேக்கியேல் 47:1-2, 8-9, 12. 1 கொரிந்தியர் 3:9-11, 16-17. யோவான் 2:13-22.
நாமே ஆலயம்! நமக்கோர் ஆலயம்!
உரோமை மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இருக்கின்ற புனித யோவான் இலாத்தரன் பேராலயம் திருத்தந்தையின் அதிகாரப்பூர்வமான இருக்கையைக் கொண்டுள்ளது. திருஅவையின் நம்பிக்கை மற்றும் அறநெறி சார்ந்த கொள்கைத்திரட்டை இந்த இருக்கையில் அமர்ந்தே திருத்தந்தை வெளியிடுகிறார். இப்பேராலயம் நான்கு பாப்பிறை பேராலயங்களில் ஒன்றாகும்.
புனித மீட்பர் பேராலயம், அல்லது புனித திருமுழுக்கு யோவான் பேராலயம் என்னும் பெயர்களிலும் இப்பேராலயம் அழைக்கப்படுவதுண்டு. தொடக்ககால உரோமைத் திருச்சபையில் அனைவருக்கும் இங்குதான் திருமுழுக்கு வழங்கப்பட்டது. கான்ஸ்டான்டின் பேரரசரால் கட்டப்பட்டு, 324-ஆம் ஆண்டு திருத்தந்தை சில்வெஸ்டர் அவர்களால் நேர்ந்தளிக்கப்பட்டது. உலகெங்கும் உள்ள அனைத்துப் பேரலாயங்களின் தாய் ஆலயம் இது. திருத்தந்தையின் தலைமையை உணர்த்தும் இந்தப் பேராலயத்தின் நேர்ந்தளிப்புப் பெருவிழாவில் திருத்தந்தையுடனான ஒன்றிப்பும் ஒற்றுமையும் கொண்டாடப்படுகிறது.
ஆலயம் அல்லது கோவில் மூன்று நிலைகளில் பொருள் தருகிறது: (அ) கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று அவருடைய உடனிருப்பை வெளிப்படுத்தி, நமக்கு ஆறுதல் தருகிறது. (ஆ) விண்ணகம் நோக்கி நம் எண்ணங்களை எழுப்புகிறது. (இ) கடவுளையும் நம்மையும் இணைக்கும் தொப்புள்கொடி போல இருக்கிறது.
‘நமக்கோர் ஆலயம்’ என்று நாம் கொண்டாடும் இந்த நாள், ‘நாமே ஆலயம்’ ‘நாமே திருஅவை’ என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
முதல் வாசகச் சிந்தனை (எசே 47:1-2, 8-9, 12)
(அ) கடவுளின் உயிர்தரும் உடனிருப்பு: ‘கோவிலிலிருந்து பாய்ந்தோடும் தண்ணீர் காட்சி’ கோவில் தருகிற உயிரை அடையாளப்படுத்துகிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் உயிரற்றவர்களாக இருந்த மக்களுக்கு மீண்டும் உயிர் தருகிறார் ஆண்டவர். கடவுளை நோக்கி வரும் அனைத்தும் உயிர் பெறுகிறது எனச் சொல்லி அவர்களுடைய விடுதலையை முன்னுரைக்கிறார்.
(ஆ) வளர்ச்சியும் நலமும்: தண்ணீர் பாய்ந்தோடும் அனைத்து இடங்களிலும் பசுமையும் வளர்ச்சியும் நலமும் பெருகுகிறது. ஆலயம் நோக்கி வரும் நம் ஆன்மாவும் பசுமையும் வளர்ச்சியும் நலமும் பெறுகிறது.
(இ) எல்லாக் காலங்களிலும் பலன் தருகிறது: தண்ணீர் பாய்ந்தோடும் இடங்களுக்கு அருகே உள்ள மரங்கள் ஆண்டு முழுவதும் கனி தருகின்றன. ஆலயத்தோடு நாம் கொண்டிருக்கும் நெருக்கம் ஒரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நலம் கனிதரச் செய்கிறது.
பதிலுரைப் பாடல் சிந்தனை (திபா 46:1-2, 3, 4-5, 7-8)
(அ) கடவுளே நம் அடைக்கலமும் ஆற்றலும்: கடவுளே நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாக இருக்கிறார். நெருக்கடியான நேரங்களில் அவர் நம்மைக் காப்பாற்றுகிறார்.
(ஆ) குழப்பத்தின் நடுவில் அமைதி: இயற்கைச் சீற்றங்கள் நடுவிலும் கடவுள் நமக்கு அமைதி தருகிறார், நம் அச்சங்களைக் களைகிறார்.
(இ) கடவுள் தம் மக்கள் நடுவில் குடிகொள்கிறார்: கடவுளின் நீடித்த உடனிருப்பு தனி நபர்களையும் குழுமங்களையும் உயிரோட்டத்துடன் வைக்கிறது. கடவுள் நம்மைக் கைவிடுவதில்லை என்னும் நம்பிக்கையைத் தருகிறது.
இரண்டாம் வாசகச் சிந்தனை (1 கொரி 3:9-11, 16-17)
(அ) கடவுளின் கட்டடம்: நாம் அனைவரும் கடவுளின் கட்டடம் என்று உருவகப்படுத்துகிறார் பவுல். கட்டடம் ஒருங்கமைவும் பயன்பாட்டுநிலையும் கொண்டிருப்பதுபோல நாமும் ஒருங்கமைவும் பயன்பாட்டுநிலையும் கொண்டிருக்க வேண்டும்.
(ஆ) வலிமையான அடித்தளத்தின்மேல் கட்டுதல்: இயேசு கிறிஸ்துவே நம் உண்மையான அடித்தளம். நாம் கட்டுகிற அனைத்துக்கும் – செயல்பாடுகள், உறவுகள், மதிப்பீடுகள் – அவரே தாங்குதளமாக இருக்கிறார். அவரில் வேரூன்றும்போது நாம் கனி தருகிறோம்.
(இ) கடவுளின் ஆலயத்தின் புனிதம்: கடவுள் தம் ஆலயத்தில் குடியிருப்பதுபோல, நம் உடலாகிய ஆலயத்தில் தூய ஆவியார் குடியிருக்கிறார். ஆகவே, நம் புனிதத்தையும் நமக்கு அடுத்திருப்பவரின் புனிதத்தையும் நாம் பேணிக்காக்க வேண்டும்.
நற்செய்தி வாசகச் சிந்தனை (யோவா 2:13-22)
(அ) கடவுளுடைய இல்லத்தின்மேல் ஆர்வம்: இயேசு ஆலயத்தின்மேல் உள்ள ஆர்வத்தால் பற்றி எரிகிறார். கடவுளைப் பற்றிய ஆர்வம் நம்மில் எந்த அளவுக்கு இருக்கிறது?
(ஆ) சடங்குகளைக் கடந்த வழிபாடு: வியாபாரத் தலமாக கோவில் மாறியதைக் கடிந்துகொள்கிற இயேசு, உண்மையான வழிபாடு என்பது சடங்குகளைத் தாண்டியது என அறிவுறுத்துகிறார்.
(இ) இயேசுவே புதிய ஆலயம்: கடவுளின் காணக்கூடிய உருவமாக நம் நடுவில் வாழ்ந்தார் இயேசு. இடம் சார்ந்த பிரசன்னம் என்பது இங்கே ஆள் சார்ந்த பிரசன்னமாக மாறுகிறது. திருமுழுக்கின் வழியாக நாமும் கடவுளின் ஆலயங்களாக மாறுகிறோம்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தாங்களே கோவில், திருஅவை என்னும் உணர்வோடு வாழ்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 243).
அருள்திரு யேசு கருணாநிதி (@ Sower)
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: