• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

நாம் ஒருபோதும் கண்டதில்லையே! இன்றைய இறைமொழி. வெள்ளி, 17 ஜனவரி ’25.

Friday, January 17, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
வெள்ளி, 17 ஜனவரி ’25
பொதுக்காலம் முதல் வாரம் – வெள்ளி
எபிரேயர் 4:1-5, 11. திருப்பாடல் 78. மாற்கு 2:1-12

 

நாம் ஒருபோதும் கண்டதில்லையே!

 

‘லாட்டரியில் நமக்கு ஒரு கோடி விழ வேண்டும் என்றால், முதலில் லாட்டரி சீட்டு வாங்க வேண்டும்’ என்பது உலக வழக்கு. ‘கடவுளே, எனக்கு லாட்டரியில் விழ வேண்டும்’ என்பது நம் இறைவேண்டலாக இருந்தால், ‘லாட்டரிச் சீட்டு நான் வாங்கியிருக்கிறேனா?’ என்பது தன்னாய்வுக் கேள்வியாக அமைய வேண்டும்.

 

‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ (குறள் 619) என்னும் வள்ளுவர் வாக்கு, ‘தெய்வத்தின் செயல்பாட்டையும்’ ‘மனிதர்களின் செயல்பாட்டையும்’ வேறுபடுத்திக் காட்டி, தெய்வம் செயல்படவில்லை என்றாலும், மனிதர்களின் கடின உழைப்பு வெற்றியைக் கொண்டு வரும் எனக் கற்பிக்கிறது.

 

இன்றைய நற்செய்தி வாசகம், ‘மனிதர்களின் முன்னெடுப்பும் கடவுளின் அருளும் இணையும் இடத்தில் வல்ல செயல் நிகழ்கிறது’ எனக் கற்பிக்கிறது.

 

பாலைவனச் சோதனை நிகழ்வில், ‘கற்களை அப்பங்களாக மாற்று!’ என்று அலகை இயேசுவைச் சோதித்தபோது, அவர் அச்சோதனையில் விழவில்லை. தம் ஆற்றலை நிரூபித்துக் காட்டும் தேவை இயேசுவுக்கு இல்லை. மேலும், தமக்கு வல்ல செயல் செய்ய ஆற்றல் உண்டு என்பதற்காக அவர் தாமாகவே சென்று வல்ல செயல்கள் செய்துகொண்டிருக்கவில்லை. நமக்கு ஆற்றல்

 

இயேசுவின் வல்ல செயல்கள் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ‘வாங்க! நான் உங்களுக்கு வல்ல செயல் செய்கிறேன்!’ என்று தாமாக மக்களைத் தேடிச் செல்லவில்லை. தம் ஆற்றலைக் காத்துக்கொள்ள அறிந்தவராக இருக்கிறார் இயேசு. நம்மிடம் உள்ள மேலானவற்றை இலவசமாக அள்ளித் தரும்போது மக்கள் நம் நற்பண்பைக் கண்டுகொள்வதில்லை.

 

போதித்துக்கொண்டிருக்கிற இயேசுவைத் தேடி வருகிற நால்வர் முடக்குவாதமுற்ற தங்கள் நண்பரை, ஊர்க்காரரைத் தூக்கி வருகிறார்கள். கூட்டம் சற்றே விலகியிருந்தால் அவர்கள் எளிதாக அவரை இயேசுவிடம் கொண்டு சென்றிருப்பார்கள். முடக்குவாதமுற்றவரின் வருகையைக் கூட்டம் தொந்தரவாகப் பார்க்கிறது. வந்தவர்கள் முயற்சி தளரவில்லை. மாற்று வழியை யோசிக்கிறார்கள். வீட்டுக் கூரையைப் பிரிக்கிறார்கள். இயேசுவால் வல்ல செயல் நிகழ்த்த இயலும் என அறிந்தவர்கள் இயேசுவிடம் முடக்குவாதமுற்றவரைக் கொண்டு வருகிறார்கள். ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்லி, இயேசு வல்ல செயலை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்கிறார்.

 

‘உடல்குறையை மன்னிக்கத் தெரிந்தவர் உள்ளத்தின் குற்றத்தை மன்னிப்பதேன்?’ என்னும் கேள்வி மறைநூல் அறிஞர்களிடம் எழுகிறது. தங்களின் முணுமுணுத்தல் இயேசுவின் செயலைக் கட்டுப்படுத்தும் என நினைக்கிறார்கள். ஆனால், இயேசு வல்ல செயலை நிகழ்த்துகிறார்.

 

சுற்றியிருந்த கூட்டம், ‘இதைப் போல ஒருபோதும் கண்டதில்லையே!’ என்று வியந்து பாராட்டுகிறது. சற்றுமுன் தடையாக நின்ற கூட்டம் இப்போது நிகழ்வுக்குச் சான்று பகர்கிறது.

 

நிகழ்வு தரும் பாடங்கள் மூன்று:

 

(அ) நாம் எதில் சிறந்து விளங்குகிறோமோ அதை நாமாகவே இலவசமாக சென்று மற்றவர்களுக்கு வழங்கக் கூடாது. மற்றவர்கள் அதன் தேவையை உணரும்போது நாம் செய்தால் நாம் செய்யும் செயலுக்கு மதிப்பு இருக்கும்.

 

(ஆ) கடவுள் செயலாற்றுவார் என்று ஓய்ந்திருப்பதற்குப் பதிலாக, கடவுள் செயலாற்றுவதற்கான தளத்தை நாம் உருவாக்கும்பொருட்டு நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும்.

 

(இ) கூட்டத்தினரின் கண்டுகொள்ளாமை கண்டு நால்வர் தங்கள் முயற்சியைக் கைவிடவில்லை. மறைநூல் அறிஞர்களின் முணுமுணுத்தல் கண்டு இயேசு தம் செயலை நிறுத்தவில்லை.

 

இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் தருகிற ஓய்வை நாம் கண்டுகொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கிறார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர். நம் வாழ்வின் பரபரப்புகள், கலக்கங்கள், அங்கலாய்ப்புகள் கடவுளின் திருமுன்னிலையில் அமைதியாகின்றன. கட்டிலில் படுக்கச் செய்கிற ஓய்வு அல்ல, மாறாக, கட்டிலைத் தூக்கிக்கொண்டு நடக்கும் ஓய்வே கடவுள் தருகிற கொடை.

 

இன்று நாம் பெரிய அந்தோனியாரை நினைவுகூர்கிறோம். மேற்கத்தேய துறவு வாழ்க்கையின் நிறுவுநர் என அழைக்கப்படுகிற இவர், ‘போய் உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். பின் என்னைப் பின்தொடர்க!’ என்னும் நற்செய்திப் பகுதியைக் கேட்டவுடன் உடனடியாகச் செயல்பட்டார். இவருடைய வாழ்க்கை வரலாறு புனித அகுஸ்தினாரின் மனமாற்றத்துக்கான தொடக்கப்புள்ளியாக இருக்கிறது. நாம் ஓரிடத்தில் செய்யும் நற்செயல் இன்னோர் இடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: