இன்றைய இறைமொழி
ஞாயிறு, 16 மார்ச் ’25
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
தொடக்க நூல் 15:5-12, 17-18, 21. திருப்பாடல் 27. பிலிப்பியர் 3:17-4:1. லூக்கா 9:28-36
நிமிர்ந்து பார்!
தவக்காலத்தில் நம் கண்கள் கல்வாரி மலையை நோக்கியிருக்கின்றன. இயேசுவின் கல்வாரி மலையை நாம் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அவர் ஏறிய மற்ற மலைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த வாரம் இயேசுவின் சோதனைகள் மலையில் அவரைச் சந்தித்தோம். இன்று உருமாற்ற அல்லது தோற்றமாற்ற மலையில் அவரைச் சந்திக்கிறோம்.
இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வை ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா) நேரடி நிகழ்வுகளாகத் தங்களுடைய நற்செய்திகளிலும், பேதுருவும் யோவானும் அனுபவங்களாகத் தங்களுடைய திருமுகங்களிலும் பதிவு செய்கிறார்கள்.
லூக்கா நற்செய்தியாளரின் பதிவை இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வில் உள்ள சில கூறுகளை முதலில் புரிந்துகொள்வோம்:
(1) மலை: மலை அல்லது உயர்ந்த இடம் என்பது விவிலியத்தில் மானிடர்கள் கடவுள் அனுபவம் பெறக்கூடிய இடமாக இருக்கிறது. கடவுள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். உயர்ந்த மலையில் ஏறுவதன் வழியாகக் கடவுளுக்கு அருகில் நாம் செல்ல முடியும். மேலும், மலையில் ஏறுவது என்பது கடினமான செயல். அனுபவம் மேன்மையாகக் கிடைக்க வேண்டுமெனில் அதன் பாதையும் கடினமாக இருக்க வேண்டும்.
(2) இறைவேண்டல்: இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வை ‘இறைவேண்டல் நிகழ்வாக’ பதிவு செய்கிறார் லூக்கா. இயேசுவின் திருமுழுக்கு, பாலைநிலச் சோதனை, மற்றும் இங்கு என அனைத்து முதன்மையான நிகழ்வுகளிலும் இயேசுவை இறைவேண்டல் செய்கிற நபராகப் பதிவு செய்கிறார் லூக்கா. நம் வாழ்வின் முதன்மையான நிகழ்வுகளிலும் இறைவேண்டல் அவசியம் என்பதை நாம் இதன் வழியாக உணர்ந்துகொள்ளலாம்.
(3) முகத்தோற்றம் மாறியது: ‘உருமாற்றத்தை’ ‘முகத்தோற்ற மாற்றம்’ என எழுதுகிறார் லூக்கா. ‘முகம்’ என்பது கடவுளின் திருமுகத்தைக் குறிக்கிறது. முதல் ஏற்பாட்டில் இரண்டாவது இறையனுபவம் பெறுகிற யாக்கோபு அந்த இடத்துக்கு ‘கடவுளின் முகம்’ (பெனியேல்) எனப் பெயரிடுகிறார். சீனாய் மலையிலிருந்து இறங்கி வருகிற மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாக இருந்தது (காண். விப 34:35). முகமாற்றம் என்பது அடையாள மாற்றம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். நம் சிறு வயது நிழற்படத்தையும் இப்போதுள்ள நம் முகத்தையும் பார்த்தால் நிறைய மாற்றங்கள் இருப்பதை நாம் காண இயலும். அன்றைய நம் முகத்துக்கும் இன்றைய நம் முகத்துக்கும் தொடர்பு மிகக் குறைவாகவே இருக்கிறது.
(4) மோசேவும் எலியாவும்: ‘மோசே’ திருச்சட்டத்தின் அடையாளமாகவும், ‘எலியா’ இறைவாக்குகளின் அடையாளமாகவும் இங்கே தோன்றுகிறார்கள். மோசே வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையவில்லை என்று பழைய ஏற்பாடு சொல்கிறது (காண். இச 34). ஆனால், புதிய ஏற்பாட்டில் இங்கே மோசே வாக்களிக்கப்பட்ட நாட்டில் நுழைகிறார். விண்ணகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட எலியாவும் இங்கே இறங்கி வருகிறார். இயேசு எருசலேமில் பட வேண்டிய துன்பங்கள்பற்றி இவர்கள் இயேசுவோடு உரையாடுகிறார்கள். இவ்வாறாக, இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகிய அனைத்தும் தனித்தனி நிகழ்வுகளாக அல்லாமல், பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளின் நிறைவாக அமைகின்றன. எம்மாவு வழியில் இயேசுவோடு உடன் நடக்கிற இயேசு, ‘மோசே முதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் அவரைப் பற்றி எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்குகிறார்’ (காண். லூக் 24:27).
(5) மேகம்: ‘மேகம் சந்திப்புக்கூடாரத்தை மூடிற்று. ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று’ (விப 40:34) என்னும் சொற்களோடு முடிவடைகிறது விடுதலைப் பயண நூல். மேகமும் கடவுளின் உடனிருப்பின் அடையாளமாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் கைகளால் உருவாக்கிய சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவராகிய கடவுள் மேகத்தின் வடிவில் இறங்கி வருகிறார். ‘கடவுள் நம்மோடு’ என்னும் புதிய ஏற்பாட்டுக் கருத்துரு இங்கே தொடங்குவதாகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
(6) மேகத்திலிருந்து குரல்: ‘இவரே என் மைந்தர். நான் தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்!’ என்னும் குரல் மேகத்திலிருந்து கேட்கிறது. இக்குரல் மலையில் நின்ற மூன்று திருத்தூதர்களை நோக்கி ஒலிக்கிறது. இயேசுவைப் பற்றியதாக குரல் இருந்தாலும், ‘செவிசாயுங்கள்!’ என்னும் கட்டளை திருத்தூதர்களுக்கு விடப்படுகிறது.
மேற்காணும் கூறுகள் வழியாக நாம் அறிந்துகொள்வது என்ன?
இயேசுவின் தோற்றமாற்ற அனுபவம் அவருக்கும் அவருடைய திருத்தூதர்களுக்கும் அடித்தள அனுபவமாக அமைகிறது. இந்த நிகழ்வின் வழியாக இயேசு யார்? என்னும் கேள்விக்கான விடையையும், தாங்கள் யார்? என்னும் கேள்விக்கான விடையையும் அறிந்துகொள்கிறார்கள். தங்களோடு வழிநடப்பவர் மோசேக்கும் எலியாவுக்கும் நிகரானவர், அவர்களைவிட மேலான ஆண்டவர் என கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய பார்வை அகலாமாகிறது. அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு இங்கே சான்று கிடைப்பதை உணர்கிறார்கள். இயேசுவுக்குச் செவிசாய்க்க வேண்டும் (காண். இச 6) – கீழ்ப்படிய வேண்டும் – என்னும் கட்டளையையும் அவர்கள் பெறுகிறார்கள்.
இயேசுவைப் பொருத்தவரையில் இந்த அனுபவம் ஓர் இறைவேண்டல் அனுபவம். அந்த இறைவேண்டலில் அவர் தந்தையின் குரலைக் கேட்பதோடு தந்தைக்கு நெருக்கமான அவர் தந்தையின் திருவுளத்தை இவ்வுலகில் நிறைவேற்ற வேண்டும் என்னும் அழைப்பையும் பெற்றுக்கொள்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிராம் (ஆபிரகாம்) பெற்ற கடவுள் அனுபவத்தை வாசிக்கிறோம்.
காரான் என்னும் இடத்திலிருந்து ஆண்டவராகிய கடவுள் காட்டிய கானான் நோக்கிப் புறப்படுகிறார் ஆபிராம். நிலத்தையும் இனத்தையும் வாக்களிக்கிறார். கூடாரத்திலிருந்து ஆபிரகாமை வெளியே அழைக்கிற கடவுள், ‘வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்!’ என்கிறார். பகலின் ஒளியிலும் விண்மீன்களைக் ‘காண்கிறார்’ ஆபிரகாம். அவர் தன் நம்பிக்கைக் கண்களால் காண்கிறார். தம் வாக்கு வெறும் வாக்கு அல்ல என்று ஆபிரகாமுக்கு உணர்த்துகிற கடவுள் அவரோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார். ஆண்டவராகிய கடவுளே இந்த உடன்படிக்கையை முன்னெடுக்கிறார். அவருடைய ஒளியே தீச்சட்டி வடிவில் வெட்டப்பட்ட பலிப்பொருள்கள் வழியாக நகர்கிறது. இவ்வாறாக, நிபந்தனையற்ற உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார் கடவுள்.
இரண்டாம் வாசகத்தில், தன் நெஞ்சுக்கு நெருக்கமான பிலிப்பி நகர இறைமக்களுக்கு கடிதம் வரைகிற பவுல், இரண்டு வகையான மக்களைக் குறிப்பிடுகிறார்: ஒன்று, நற்செய்திக்கு எதிரானவர்கள். இரண்டு, நம்பிக்கை கொள்கிற இறைமக்கள். நற்செய்திக்கு எதிரானவர்கள் இவ்வுலகம் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் விண்ணகம் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். ‘நமக்கோ விண்ணகமே தாய்நாடு. அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்ற வல்லவர்’ என எழுதுகிறார் பவுல். ஆக, உருமாற்றம் என்பது நம்பிக்கையாளர்களாகிய நமக்கும் சாத்தியமாகிறது.
மேற்காணும் மூன்று வாசகங்களும் நமக்கு வழங்கும் பாடங்கள் எவை?
(அ) வெளிப்படுத்துதல்
இன்று மேலாண்மையியலில் பேசப்படக்கூடிய கருத்துருகளில் ஒன்று ‘வெளிப்படுத்துதல்’ (‘மேனிஃபெஸ்டேஷன்’). அதாவது, நம் வாழ்வின் இலக்கை கடவுள் அல்லது பிரபஞ்சம் அல்லது நேரம் நமக்கு வெளிப்படுத்துகிறது. அந்த வெளிப்படுத்துதலைக் கண்ட ஒருவர், வெளிப்படுத்தப்பட்ட இலக்கைப் பின்பற்றத் தொடங்கும்போது அவரை அனைவரும் அறிந்துகொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, கொல்கத்தா நகர் தெரசா (அன்னை தெரசா) இந்தியாவுக்கு வரும்போது பள்ளி ஆசிரியையாக வருகிறார். ஆசிரியப் பணி அல்ல, மாறாக, ஆற்றுப்படுத்தும் பணியே தன் பணி என்பதை ‘வெளிப்படுத்தப்பட்ட இலக்காக’ எடுத்து தன் பாதையை மாற்றுகிறார். உலகம் அனைத்தும் அவரை அறிந்துகொள்கிறது.
வெறும் கூடாரத்தில் அமர்ந்திருப்பது அல்ல, மாறாக, விண்மீன்கள் போன்ற மக்களினத்தாரின் தந்தையாக விளங்குவதற்காக ஆபிரகாம் அழைக்கப்பட்டிருப்பதாக அவருக்கு வெளிப்படுத்துகிறார் கடவுள். தன் நம்பிக்கைப் பார்வையில் அதைக் காண்கிற ஆபிரகாம் துன்பங்கள் வந்தபோதும் தொடர்ந்து கானான் நாட்டில் குடியிருக்கிறார். வெறும் வயிற்றுக்காகவும், வயிற்றின் தேவைகளுக்காகவும் அல்ல, மாறாக, கடவுளால் உருமாற்றம் பெறவே நாம் இருக்கிறோம் என்று பவுல் பிலிப்பி நகர மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். அவர்களும் அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையைத் தகவமைத்துக்கொள்கிறார்கள். தோற்றமாற்ற நிகழ்வில் வெளிப்படுத்துதல் இயேசுவுக்கும் திருத்தூதர்களுக்கும் நடக்கிறது. இயேசு யார்? என்னும் கேள்விக்கான விடையை அவர்கள் தெரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள்.
என் வெளிப்படுத்துதல் என்ன? என்பதை இன்று நாம் கேட்போம். நாம் எப்படி நம்மைக் காட்சிப்படுத்திப் பார்க்கிறோமோ, அப்படியே நாம் மாறுகிறோம். நாம் காட்சிப்படுத்துவதை உண்மை என நினைக்கிற நம் மூளை அதை அப்படியே உண்மையாக மாற்றுகிறது. ‘என் வாழ்வில் நான் விரும்புவது என்ன?’ என்ற கேள்விக்கு நம் ஒவ்வொருவரும் விடை காண முயற்சி செய்வோம்.
(ஆ) நகர்தல்
ஆபிரகாம் கூடாரம் விட்டு நகர்கிறார். சீடர்கள் மலையை நோக்கி நகர்கிறார்கள். நகர்தல் அல்லது செயல்படுதலில்தான் வெளிப்படுத்துதல் நிகழ்கிறது. ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு ஒரே செயல்களைச் செய்துகொண்டு புதுமையான ஒன்றை நாம் அடைய இயலாது. தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரே வெற்றி காண்கிறார். பாவத்தில் நின்றுகொண்டே கடவுள் நோக்கிப் பயணம் செய்ய நம்மால் இயலாது. நம் கால் கட்டப்பட்டுக்கிடந்தால் முன்னேற இயலாது. அல்லது புனித அகுஸ்தினார் சொல்வது போல, ‘என் காலடிகளைக் கட்டியிருந்த இரும்புக் குண்டுகளை நான் களைவதற்குப் பதிலாக, அவற்றையும் தூக்கிக்கொண்டே நடந்ததால் மிகவும் சோர்வுற்றேன். இங்குமங்கும் அலைக்கழிக்கப்பட்டேன்’ என்னும் நிலை நமக்கும் வரும்.
(இ) நிமிர்ந்து பார்த்தலும் குனிந்து பார்த்தலும்!
விண்மீனை நிமிர்ந்து பார்க்கிற ஆபிரகாம் குனிந்து பார்த்துத் தன் பயணத்தைத் தொடர வேண்டும். விண்ணகமே தாய்நாடு என்றாலும் பிலிப்பி நகர இறைமக்கள் இவ்வுலக வாழ்வியல் கட்டங்கள் வழியே தங்கள் பயணங்களைத் தொடர வேண்டும். மலைமீது இயேசுவோடு ஏறிச் சென்ற சீடர்கள் திரும்பவும் கீழே இறங்க வேண்டும். இறையனுபவம் பெற்ற நாம் அனுபவத்தின் கனிகளை பிறரோடு உள்ள உறவுநிலைகளில் தர வேண்டும்.
‘ஆண்டவரது முகத்தையே நான் நாடுவேன்!’ என்று பாடுகிறார் திருப்பாடல் (27) ஆசிரியர் (பதிலுரைப் பாடல்). ஆண்டவருடைய முகத்தை நாம் தேடும்போது அவருடைய ஒளி நம்மேல் படுகிறது. அவருடைய ஒளியில் நம் வழியை நாம் காண்கிறோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: