இன்றைய இறைமொழி
சனி, 15 மார்ச் ’25
தவக்காலம் முதல் வாரம் – சனி
இணைச்சட்ட நூல் 26:16-19. திருப்பாடல் 119. மத்தேயு 5:43-48
நிறைவுள்ளவராய்
‘நிறைவு’ என்பது ‘இன்னும் கொஞ்சம்’ என்பதன் முழுமை.
அந்த முழுமையை நோக்கி வாழ நம்மை அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
மலைப்பொழிவின் சுருக்கமாக இயேசு தன் சீடர்களுக்கு வழங்கும் அறிவுரை நிறைவுள்ளவர் ஆதல் (காண். மத் 5:43-48). ‘விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராக இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராக இருங்கள்’ என அறிவுறுத்துகிறார் இயேசு (நற்செய்தி வாசகம்). உங்கள் செயல்களைப் பொருத்து உங்கள் இலக்குகளை இறக்கிக் கொள்வதற்குப் பதிலாக, இலக்கை உயர்;த்திக் கொண்டு உங்கள் செயல்களையும் உயர்த்துங்கள் என்பது இயேசுவின் அறிவுரையாக இருக்கிறது.
பகைவரிடமும் அன்பு கூர்வதும், துன்புறுத்துவோருக்காக இறைவேண்டல் செய்வதும் விண்ணகத் தந்தையின் மக்களாக சீடர்களை மாற்றுகிறது.
‘பல நேரங்களில் என்னால் இவ்வளவுதான் செய்ய முடியும் என நாம் சொல்கிறோம். அந்த அளவையாவது நாம் செய்ய வேண்டும்’ என்கிறார் கேம்யு என்கிற மெய்யிலாளர்.
‘அடுத்திருப்பவருக்கு அன்பு, பகைவருக்கு வெறுப்பு’ என்று சொல்லப்பட்ட மோசே கட்டளையை நீட்டுகின்ற இயேசு, ‘பகைவருக்கும் அன்பு, துன்புறுத்துவோருக்கும் இறைவேண்டல்’ என மொழிகின்றார். மேலும், இப்படிச் செய்வதால் சீடர்கள் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள் ஆவதாக வாக்களிக்கின்றார். ஏனெனில், ஆண்டவராகிய கடவுளே இப்படித்தான் அன்பு செய்கிறார்.
மற்றவர்களின் இருத்தல் மற்றும் இயக்கத்தைப் பொருத்து கதிரவனும் மழையும் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்வதில்லை. எல்லார் மேலும் அடிக்கும் வெயிலாக, எல்லார்க்கும் பெய்யும் மழையாகக் கடவுள் நம் மேல் கடந்து செல்கின்றார்.
‘நிறைவு’ என்னும் பதத்தை ‘தூய்மை’ என மொழிகிறார் மோசே (காண். முதல் வாசகம், இச 26:16-19). ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்கள் அவரால் உயர்த்தப்படுவர் என்பது மோசேயின் ஆறுதல் மொழியாக இருக்கிறது.
அப்படி இருக்க, நம் அன்பு மட்டும் ஏன் மற்றவர்களின் இருத்தல் மற்றும் இயக்கத்தைப் பொருத்து அமைய வேண்டும்?
பாகுபாடு காட்டாத, பகுத்துப் பார்க்காத, தீர்ப்பிடாத அன்பு இருந்தால் எத்துணை நலம்.
இந்த நிலை நமக்கு எப்போது வரும்?
நம் விருப்பு-வெறுப்புகளை நாம் கடக்கும்போது.
நம் வாழ்க்கையின் நாள்கள் குறையக் குறைய இயல்பாகவே, நம் நட்பு வட்டம் சுருங்குகிறது, நாம் பொறுமையில் வளர்கிறோம், அடுத்தவர்கள்மேல் கோபம் வருவதற்குப் பதிலாக இரக்கம் வருகிறது. இப்படி நிறைய மாற்றங்கள் நம்முள் நடக்கின்றன. நாம் கட்டி வைத்த ஒவ்வொன்றையும் விட்டுச் செல்ல மனம் பக்குவப்படத் தொடங்குகிறது. எல்லாரும் ஒரே மாதிரி தெரிய ஆரம்பிக்கிறார்கள். வெள்ளிக் கிழமை இரவில் வெளியில் சென்று ஊர் சுற்றுவதை விட, கட்டிலில் படுத்துக்கொள்ள மனம் விரும்புகிறது. யாராவது சண்டையிட முன்வந்தால், ‘சரி அப்படியே இருக்கட்டும்!’ என அவர்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ளத் தூண்டுகிறது. குழந்தைகளைப் பார்த்தால் இயல்பாகவே உதடுகள் புன்னகைக்கின்றன. வயது முதிர்ந்தவர்களைக் கண்டால் கரம் உதவிக்கு இயல்பாக நீள்கிறது. சாலையில் ஆம்புலன்ஸ் கடந்து சென்றால் உதடுகள் செபத்தை முணுமுணுக்கின்றன. இப்படி, நாம் வாழ்வில் இன்னும் செய்ய வேண்டியவை, இன்னும் கொஞ்சம் நடக்க வேண்டியவை நிறையவே இருக்கின்றன. காலம் குறையக் குறைய நிறைவு கூடுகிறது.
முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களுக்கு அறிவுறுத்துகின்ற மோசே, மக்கள் ஆண்டவராகிய கடவுளுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றார். அதாவது, தாங்கள் கொடுத்த வாக்கை, கொஞ்சம் செயலாக்க வேண்டும்.
‘இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்தால்தான், நடந்தால்தான் என்ன!’ என நம்மை அழைக்கின்றன இன்றைய வாசகங்கள்.
இயேசுவின் பாடுகளோடு இன்னும் கொஞ்சம் நாம் நடந்தால், அவரின் உயிர்ப்பில் பங்கேற்க முடியும். அந்த உயிர்ப்பே நம் வாழ்வின் நிறைவு.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: