• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

நிறைவு அது நிறைவு இது! இன்றைய இறைமொழி. செவ்வாய், 17 டிசம்பர் ’24.

Tuesday, December 17, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Advent

இன்றைய இறைமொழி
செவ்வாய், 17 டிசம்பர் ’24
திருவருகைக்கால வார நாள்
தொடக்கநூல் 49:1-2, 8-10. திருப்பாடல் 72. மத்தேயு 1:1-17

 

நிறைவு அது நிறைவு இது!

 

‘நிறைவு அது நிறைவு இது
நிறைவிலிருந்து நிறைவு நிறைந்து வழிகிறது
நிறைவிலிருந்து நிறைவை நிறைவாய் எடுத்தாலும்
நிறைவு நிறைந்து நிற்கிறது
அமைதி, அமைதி, அமைதி!’

 

கடவுளின் நிறைவைப் பற்றிப் பாடும் பிரிகதாரன்யக உபநிடதத்தின் பாடல் ஒன்று இது. திருவருகைக்காலத்தின் வாரநாள்களில், டிசம்பர் 17 முதல் 24 வரை உள்ள நாள்கள் கிறிஸ்து பிறப்புக்கான தயாரிப்பு நாள்களாக (எட்டு அல்லது ஒன்பது) கொண்டாடப்படுகின்றன. இந்நாள்களில் ஒவ்வொரு நாள் மாலை இறைவேண்டலின்போதும் ‘ஓ’ என அழைக்கும் முன்மொழிகள் பாடப்படுகின்றன.

 

மனிதர்கள் தங்களில் குறையுள்ளவர்கள். தாங்கள் உருவாக்கிய கடவுள் அல்லது தங்களை உருவாக்கிய கடவுள் குறையற்றவராக, நிறைவுள்ளவராக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். கடவுளின் திருமுன்னிலையில் குறைவு என்பதே இல்லை.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணையை வாசிக்கிறோம். 3, 7, 14, 42 என்று நிறைவைக் குறிக்கும் எண்களைப் பயன்படுத்தி, பெயர்களை வரிசைப்படுத்தி இயேசுவை முன்மொழிகிறார் மத்தேயு. இயேசுவின் சமகாலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் தலைமுறை அட்டவணை என்பது ஒருவருடைய வேர்களை அறிந்துகொள்வதற்கான அளவுகோல் என்று காணப்பட்டாலும், சமூகத்தில் மதிப்புக்குரியவர்களுக்கும் அரசர்களுக்குமே தலைமுறை அட்டவணைகள் எழுதப்பட்டன – நம்ம ஊரில் இராஜாதி இராஜ இராஜ மார்த்தாண்ட இராஜ கம்பீர என்பது போல!

 

மத்தேயுவும் லூக்காவும் இயேசுவின் தலைமுறை அட்டவணையைப் பதிவு செய்கிறார்கள். இருவருடைய எழுத்துக்களிலும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆபிரகாமுடன் தலைமுறை அட்டவணையை முடித்துக்கொள்கிறார் மத்தேயு. லூக்கா அட்டவணையை ஆதாம் வரை நீட்டுகிறார்.

 

‘தாவீதின் மகன், ஆபிரகாமின் மகன், இயேசு கிறிஸ்து’ – இம்மூன்று தலைப்புகளைக் கொண்டு தலைமுறை அட்டவணையைத் தொடங்குகிறார் மத்தேயு.

 

‘தாவீதின் மகன்’ என்னும் தலைப்பு இயேசுவின் மெசியா நிலையைக் குறிக்கிறது. ‘ஆபிரகாமின் மகன்’ என்னும் தலைப்பு இயேசு இஸ்ரயேல் இனத்தில் தோன்றியவர் என்பதை உறுதி செய்கிறது. ‘இயேசு’ என்பது தனிப்பட்ட பெயர். ‘கிறிஸ்து’ (அருள்பொழிவு பெற்றவர்’) என்பது தலைப்பு.

 

தலைமுறை அட்டவணையின் காலத்தை மூன்று காலங்களாகப் பிரிக்கிறார் மத்தேயு: (அ) ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் இடையே உள்ள காலம். (ஆ) தாவீதுக்கும் பாபிலோனிய நாடுகடத்தலுக்கம் இடையே உள்ள காலம். (இ) பாபிலோனிய நாடுகடத்தலுக்கும் இயேசுவுக்கும் இடையே உள்ள காலம். ஒவ்வொரு காலத்திலும் உள்ள தலைமுறைகள் பதினான்கு – அதாவது, இரண்டு முறை ஏழு. ஏழு என்னும் நிறைவு மற்றொரு ஏழு என்னும் நிறைவால் அணிசெய்யப்படுகிறது. பதினான்கு என்பது மூன்று முறை தொடர்ந்து, நாற்பத்து இரண்டு – நிறைவுக்கெல்லாம் நிறைவு என நிறைந்து நிற்கிறது.

 

இயேசுவின் தலைமுறை அட்டவணை நமக்கு உணர்த்துவது என்ன? (அ) காலத்தைக் கடந்த கடவுள் காலத்துக்கு தன்னையே உட்படுத்தி காலத்தைப் புனிதப்படுத்துகிறார். (ஆ) மனித வரலாற்றில் பங்கேற்கத் திருவுளம் கொள்கிற கடவுள் வலுவற்ற மனிதர்களில் ஒருவராக தன்னையே அடையாளப்படுத்துகிறார். (இ) கடவுள் நமக்கு அந்நியமான நபர் அல்ல, மாறாக, நம்மோடு நெருக்கமான ஒரு நபர். (ஈ) தலைமுறை அட்டவணையில் பெண்கள் (தாமார், ராகாபு, ரூத்து, பத்சேபா, மரியா) அல்லது சில புறவினத்துப் பெயர்களையும் காண்கிறோம். அனைவரையும் உள்ளடக்கியதாக வரவேற்பதாக இருக்கிறது மெசியாவின் வருகை.

 

இன்றைய முதல் வாசகத்தில், ஒவ்வொரு மகனுக்கும் ஆசி வழங்குகிற யாக்கோபு, ‘யூதாவை விட்டுச் செங்கோல் நீங்காது. அவன் மரபைவிட்டுக் கொற்றம் நீங்காது’ என மொழிகிறார். என்றென்றும் தொடர்கிறது யூதாவின் ஆட்சி. ‘கால் மடக்கிப் படுத்திருக்கும் சிங்கம்’ அமைதி, நிறைவு, வெற்றி ஆகியவற்றைக் குறிக்கிறது.

 

நிற்க.

 

இன்று நாம் செபிக்கும் ‘ஓ’ – ‘ஓ ஞானமே, வாரும்!’ என்பது. ‘உன்னதரின் ஞானமே, ஆற்றலுடன் அனைத்தையும் அன்பாய் நடத்துகிறவரே, எங்களுக்கு உண்மையின் வழிகாட்ட வந்தருளும்!’ என்று கொடுக்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தியின் வாழ்த்தொலி.

 

ஞானத்தின் மேன்மையை எடுத்துரைக்கிற நீதிமொழிகள் நூல் ஆசிரியர், ஞானம் ‘படைப்பின் தொடக்கத்திலேயே, எதுவும் படைக்கப்படும் முன்பே இருந்தது’ (நீமொ 8:22) என்கிறார். மேலும் கடவுள் பூவுலகிற்கு அடித்தளமிட்டபோது, அவருடைய சிற்பியாய் (செல்லப் பிள்ளையாய்) அவரது அருகில் இருந்தது ஞானம் (8:30).

 

நற்செய்தியாளர் யோவானும் இதையொட்டியே, ‘அனைத்தும் அவரால் உண்டாயின. உண்டானது எதுவும் அவராலன்றி உண்டாகவில்லை’ (யோவா 1:3) என்று எழுதுகிறார்.

 

இயேசுவே கடவுளின் ஞானம். இந்த ஞானம் நிறைவை நோக்கியும் உண்மை நோக்கியும் அழைத்துச் செல்வதாக!

 

அறிவு, நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு என அறிதலை மட்டுமே பற்றிக்கொண்டிருக்கும் நாம், அறிவுக்குத் துணைநிற்கும் ஞானத்தைக் கடவுளிடம் கேட்போம்.

 

நிற்க.

 

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்கள் வாழ்வின் நிறைவு என இறைவனைக் காண்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 274).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: