இன்றைய இறைமொழி
செவ்வாய், 7 ஜனவரி ’25
திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின் செவ்வாய்
1 யோவான் 4:7-10. திபா 72. மாற்கு 6:34-44
நீங்களே உணவு கொடுங்கள்!
இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வை இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.
பசி என்னும் எதிர்மறையான உணர்வு நிகழ்வின் தொடக்கத்தில் இருக்கிறது. பசி என்ற உணர்வோடு மக்கள் நின்றபோது, பரிவு என்னும் உணர்வோடு அவர்களை எதிர்கொள்கிறார் இயேசு.
‘அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்!’ என்று சீடர்கள் ஒதுங்கி நின்றபோது, ‘இருநூறு தெனாரியத்துக்கு வாங்க வேண்டுமா?’ என்று கணக்குப்போட்டபோது, ‘நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்’ என மொழிகிறார் இயேசு.
அவர்கள் பார்க்கத் தொடங்கிய அந்த நிமிடம் வல்லசெயல் நடக்கத் தொடங்குகிறது.
‘எதுவும் இல்லை’ என்றவர்கள், ‘இது இருக்கிறது’ என்று ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் காட்டுகிறார்கள். நிகழ்வுக்குப் பொறுப்பேற்கத் தொடங்குகிறார்கள்.
நம் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு நாம் பொறுப்பேற்கத் தொடங்கும்போது கடவுள் ஆற்றும் வல்ல செயலை நாம் உணரத் தொடங்குகிறோம்.
நாம் எதிர்கொள்ளும், நமக்கு நேரும் எதிர்மறை உணர்வுகள் அனைத்தும் ஒரு பக்கம் இருந்தாலும், கடவுள் நம்மேல் பரிவு கொண்டவர் என்னும் உணர்வு நமக்கு ஆறுதல் தருகிறது.
‘நீங்களே உணவு கொடுங்கள்!’ என்று நாம் செய்ய முடிந்தவற்றை நாமே செய்ய வேண்டும் எனக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு.
இதே மாதிரியான நிகழ்வுதான் இயேசு இலாசரை உயிர்ப்பிக்கும் நிகழ்வு. இறந்த இலாசரை உயிர்ப்பிக்க கல்லறைக்கு வருகிற இயேசு, ‘கல்லறையின் கல்லைப் புரட்டுங்கள்!’ என்கிறார். இறந்த ஒருவரை உயிர்ப்பிக்க ஆற்றல் கொண்ட ஒருவரால், கல்லறைப் புரட்டச் செய்ய இயலாதா? இயலும்! ஆனால், மனிதர்கள் செய்ய வேண்டியவற்றை மனிதர்கள் செய்ய வேண்டும். அவர்களால் இயலாத ஒன்றைச் செய்ய மட்டும் கடவுள் போதும்.
‘இன்று என் நிலைக்கு, இருத்தலுக்கு நான் காரணம்!’ என்று நான் என் வாழ்வுக்குப் பொறுப்பேற்கத் தொடங்கும்போது நிறைவு என்னைத் தழுவிக்கொள்கிறது.
பசியோடு இருந்த நிலை மறைந்து பன்னிரண்டு கூடைகளில் அப்பம் நிறைகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: