இன்றைய இறைமொழி
புதன், 1 ஜனவரி ’25
புத்தாண்டு நாள்
அன்னை கன்னி மரியா இறைவனின் தாய் பெருவிழா
எண்ணிக்கை 6:22-27. கலாத்தியர் 4:4-7. லூக்கா 2:16-21
நீங்கள் கடவுளின் மகன், மகள்!
இன்றைய நாள் மூன்று நிலைகளில் சிறப்பு பெறுகிறது:
(அ) கிரகோரியன் காலண்டர்படி இன்று புத்தாண்டுத் திருநாள். தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கும் பூமிப் பந்து இன்றுடன் சூரியனைச் சுற்றி ஓராண்டு நிறைவுபெற்று, தன் பயணத்தை அது மீண்டும் தொடர்கிறது. நம்மை நாமே சுற்றிக்கொண்டிருக்கும் நாமும் கடவுளைச் சுற்றி வர இன்றைய நாள் நம்மை அழைக்கிறது. ‘2025’-ஆம் ஆண்டுக்குள் நுழைகிறோம். இந்த ஆண்டை நம் தாய்த்திருஅவை ‘வரிசை வழி யூபிலி ஆண்டு’ (25 ஆண்டுகள் நிறைவு வரிசை) எனக் கொண்டாட அழைக்கிறது. மூன்றாம் ஆயிரமாண்டின் முதல் யூபிலி இது. இந்தக் கொண்டாட்டத்திற்காக நாம் எடுத்துள்ள மையக்கருத்து ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்.’ 2025 என்னும் எண்ணின் கூட்டுத்தொகை 9. எண்ணியல் அடிப்படையில் ‘9’ என்னும் எண் செவ்வாய் கோளுக்கு உரியது. வானதூதரின் எண் என்ற அடிப்படையில் ’20,’ ’02’, ’25’ எனப் பிரித்தால் நமக்கு வருகிற கூட்டுத்தொகை ’11’ (2,2,7). ஒரே நேரத்தில் வகுக்கப்படுகிற (3 என்னும் எண்ணால்), வகுக்கமுடியாத எண்ணாக இருக்கிறது 2025. கணிதவியல் அடிப்படையில் ‘2025’ என்னும் எண் ஒரு சதுர எண். அதாவது, 45-ஐ 45 கொண்டு பெருக்கினால் வருகிற எண் 2025. இதற்கு முந்தைய சதுர எண் 1936 (44-ஐ 44 கொண்டு பெருக்கினால் வருவது). இதற்கு அடுத்த சதுர எண் 2116 (46-ஐ 46 கொண்டு பெருக்குவது). அரிதாக வருகிற இந்த எண் அரிதானவற்றையும் மேன்மையானவற்றையும் சிறப்பானவற்றையும் நமக்கு வழங்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு.
காலத்தைப் பற்றி அதிகம் பேசுகிற சபை உரையாளர், ‘ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது’ (சஉ 8:7) என்கிறார். ஆக, ‘ஜனவரி’ அல்ல, மாறாக, ‘டிசம்பரே’ கவனிக்கத்தக்கது. டிசம்பரை மனத்தில் வைத்து ஜனவரியைத் தொடங்குவோம். முடிவை மனத்தில் வைத்துத் தொடங்குவதே நல்ல தொடக்கம்.
(ஆ) அன்னை கன்னி மரியாவை ‘இறைவனின் தாய்’ என்று நாம் கொண்டாடுகிறோம். ‘என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?’ எனக் கேட்ட எலிசபெத்து மரியாவை மறைமுகமாக ‘இறைவனின் தாய்’ என வாழ்த்துகிறார் (காண். லூக் 1:43). கீழைத்திருஅவை ஆயர் நெஸ்டோரியஸ் அவர்களின் கிறிஸ்தியல் தப்பறைக்குப் – இயேசு பிறப்பிலிருந்தே கடவுள் அல்ல என்னும் தப்பறை! – பதில் தருகிற எபேசு நகரப் பொதுச் சங்கம் (கிபி 431), ‘இம்மானுவேல்தான் கடவுள். இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய்’ என்று அறிவிக்கிறது. ஆக, இத்தலைப்பு மரியாவுக்கு வழங்கப்பட்டது என்றாலும், இத்தலைப்பு வழியாக அறிவிக்கப்படுவது கிறிஸ்து பற்றிய புரிதலே. ‘ஆண்டவரின் அடிமை’ என்று தன்னைத் தாழ்த்திய மரியா, ‘ஆண்டவரின் தாய்’ என்னும் நிலைக்கு உயர்கிறார்.
(இ) கிறிஸ்து பிறப்பு நிகழ்வின் எட்டாம் நாள் இன்று. யூத மரபுப்படி இன்று இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது – தலைப்பேறு ஆண் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்படுதல், ‘இயேசு’ (‘யோசுவா’ – ‘அவர் விடுவிக்கிறார் அல்லது மீட்கிறார்’) என்னும் பெயர் குழந்தைக்கு வழங்கப்படுகிறது. காலத்தைக் கடந்த கடவுள் காலத்துக்குள் நுழைகிறார். அனைத்தின் உயிருமாக இருக்கிற கடவுள் பெயர் பெறுகிறார்.
‘அடிமை நிலையிலிருந்து உரிமைப்பேறு பெற்ற மகன், மகள் நிலைக்கு: கிறிஸ்துவில் நாம் பெறும் புதிய அடையாளம்’ என்பதை நம் சிந்தனையின் கருப்பொருளாக எடுத்துக்கொள்வோம்.
இதன் பின்புலம் இன்றைய இரண்டாம் வாசகம்: ‘திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்கினார் … இனி நீங்கள் அடிமைகள் அல்ல, பிள்ளைகள்தாம், பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே!’
அடிமை, பிள்ளை (மகன்-மகள்) என்னும் சொற்களைப் புரிந்துகொள்ள விவிலியத்தில் நமக்கு அறிமுகமான பகுதியை எடுத்துக்கொள்வோம். லூக்கா 15:11-32-இல் நாம் வாசிக்கும் காணாமல்போன மகன் எடுத்துக்காட்டு. இந்த எடுத்துக்காட்டில் ஒரு தந்தைக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் மகன்களாக இருந்தாலும், அவர்களுடைய மனநிலை பணியாளர் அல்லது அடிமை மனநிலையாகவே இருக்கிறது. ஆகையால்தான், தூர நாட்டிலிருந்து திரும்பி வருகிற இளைய மகன், ‘இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன். உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ எனத் தனக்குள் சொல்கிறான். ஆனால், அவன் அப்படிக் கூறுமுன் தந்தை அவனை நிறுத்திவிடுகிறார். வயல்வெளியிலிருந்து திரும்பி வருகிற மூத்த மகன், ‘பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமை போன்று வேலை செய்துவருகிறேன்!’ என்று கூறுகிறார். தூரத்திலிருந்து திரும்பினாலும், வயல்வெளியிலிருந்து திரும்பினாலும் இவர்களுடைய மனநிலை வெறும் அடிமை அல்லது பணியாள் அல்லது கூலியாள் என்னும் நிலையில்தான் இருந்தது. தந்தை அவர்களுடைய ‘மகன்கள்’ நிலையை உயர்த்துவதோடல்லாமல், அவர்களுக்குத் தன் சொத்தில் உரிமைப்பேறு அளிக்கிறார்: முதல்தரமான ஆடையை அணிவிக்கிறார். என்னுடையதெல்லாம் உன்னுடையதே என அறிவிக்கிறார்.
இயேசு தருகிற இந்த எடுத்துக்காட்டு தந்தையின் இரக்கத்தையும் பரிவையும் மன்னிக்கிற மனப்பாங்கையும் நமக்கு எடுத்துரைப்பதோடு, மகன்கள் என்கிற நிலையில் நாம் பெறுகிற உரிமையையும் அறிவிக்கிறது.
‘இன்று நான் ஓர் அடிமையா? அல்லது உரிமைப்பேறு கொண்டுள்ள மகன்-மகளா?’ – இதுவே நாம் இன்று எழுப்ப வேண்டிய கேள்வி.
இயேசு தம் சமகாலத்து யூதர்களிடம், ‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ (யோவா 8:32) என்று மொழிந்தபோது, ‘நாங்கள் யாருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர்!’ என்கிறார்கள் யூதர்கள். தொடர்ந்து இயேசு, ‘பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை. மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு’ (யோவா 8:34-35) என்கிறார்.
நாம் அனைவரும் பாவத்திற்கு அடிமை என்பதை இயேசு எடுத்துரைப்பதோடு, நிலையற்ற அடிமை என்னும் நிலையிலிருந்து நிலையான மகன்-மகள் என்னும் நிலைக்கு நம்மை உயர்த்துகிறார்.
இன்று நாம் எந்நிலையில் அடிமைகளாக இருக்கிறோம்?
(அ) பாவத்துக்கு அடிமை: கடவுளிடமிருந்து நம்மைத் தூரமாக வைக்கிற நம் தெரிவுகள்!
(ஆ) பயத்துக்கு அடிமை: எதிர்காலம் பற்றிய பயம், நிகழ்காலப் பிரச்சினைகள், போராட்டங்கள் பற்றிய அச்சம்!
(இ) பொருளுக்கு, உறவுகளுக்கு, பழக்கங்களுக்கு அடிமை: பொருள்களையும் உறவுகளையும் உடைமையாக்கிக்கொள்வதில் உள்ள பேரார்வம், விட்டுவிட முடியாத பழக்கங்கள் – மது, போதை, பாலியல் பிறழ்வு!
(ஈ) வெளியிலிருந்து வரும் பதவி, பெயர், புகழ், வாழ்த்து ஆகியவற்றுக்கு அடிமை: நம் தான்மையையும் மேன்மையையும் நமக்குள்ளே தேடாமல், அவற்றை வெளியிலிருப்பவற்றில் வெளியிலிருப்பவர்களில் தேடுதல்!
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலும் பாபிலோனியாவிலும் கட்டப்பட்டுக் கிடந்ததுபோல, நாமும் மேற்காணும் அடிமைத்தளையால் கட்டப்பட்டுள்ளோம். அடிமைகளுக்குச் சுதந்திரம் இல்லை! தான்மை இல்லை! மதிப்பு இல்லை! அவர்கள் நகரவோ, பேசவோ, சிரிக்கவோ இயலாது.
கலாத்தியத் திருஅவைக்கு எழுதுகிற பவுல், நம்பிக்கையால் நாம் இறைவனுக்கு ஏற்புடையவராகிறோமே அன்றி, திருச்சட்டத்தினால் அல்ல என்பதை வலியுறுத்துகிறார். மேலும், கிறிஸ்து இயேசுவில்மீதுள்ள கொண்ட நம்பிக்கையால் அனைவரும் கடவுளின் மக்கள் (கலா 3:26) என எடுத்துரைத்து, அவர்கள் கிறிஸ்து வழியாகப் பெற்றுள்ள மேன்மையை எடுத்துரைக்கிறார்:
‘திருச்சட்டத்துக்கு அடிமைகளாக இருந்த நம்மை மீட்க, கடவுள் தம் மகனைச் சட்டத்துக்கு உட்படுத்துகிறார் … அந்த ஆவி வழியாக நாம் கடவுளை ‘அப்பா, தந்தையே’ என அழைக்கிறோம்.’ வெறும் பிள்ளைகள் என்றல்ல, மாறாக, உரிமைப்பேறு உடைய மகன்கள், மகள்கள் என்னும் நிலைக்கு கடவுள் நம்மை உயர்த்துகிறார்.
இத்தகைய மேன்மையைப் பெற்றுள்ள கலாத்தியர்கள் அதில் நிலைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார் பவுல்: ‘கிறிஸ்து அடிமைநிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார். அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்!’ (கலா 5:1).
ஆக, ‘அடிமை நிலையிலிருந்து பிள்ளைகள் நிலைக்கு’ என ஏற்பட்டுள்ள மாற்றம் நமக்கு புதிய உறவையும், நோக்கத்தையும், எதிர்நோக்கையும் தருகிறது.
கடவுள் தரும் இந்தப் புதிய அடையாளத்தின் பொருள் என்ன?
(அ) கடவுளை ‘அப்பா, தந்தையே’ என அழைக்கும் உரிமையுடன், அவருடைய அரசில் உரிமைப்பேறு. முதல் ஏற்பாட்டில், கடவுளை ‘ஆண்டவர்-கடவுள்’ என்று இஸ்ரயேல் மக்கள் அழைத்தார்கள். இந்த நிலையில் அவர்கள் கடவுளுடைய கட்டளைகளுக்கு, திருச்சட்டத்துக்கு உட்பட்ட நிலையில் இருந்தார்கள். அடிமைகள் என்னும் நிலையிலிருந்த மக்களை, பிள்ளைகள் என்னும் நிலைக்கு உயர்த்தும் விதமாக அவர்களுக்குத் தம் ஆசியை – தந்தை பிள்ளைக்கு வழங்குவதுபோல – வழங்குகிறார். இன்றைய முதல் வாசகத்தில், மோசே வழியாக ஆரோனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்கிற கடவுள், ‘ஆசி, பாதுகாப்பு, ஒளி, அருள், உடனிருப்பு, அமைதி’ ஆகியவற்றை அவர்களுக்கு வழங்குகிறார்.
(ஆ) கடவுளோடு நெருக்கம். உரிமைப்பேறு என்னும் நிலை பெற்றோர்-பிள்ளை உறவில் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒருவர் மற்றவருக்கு அறிமுகத்தையும் நம்பகத்தன்மையையும் பெறுகிறார். கடவுள் நம்மை நம்புகிறார். நாம் நம்மை நம்புகிறோமா?
(இ) நம் வழியாக உரிமைப்பேறு தொடர்கிறது. கடவுள் தருகிற அமைதி, அருள், ஆசி ஆகியவற்றை நாம் பெற்றுக்கொள்வதோடு, அவற்றை மற்றவர்களுக்கும் வழங்குகிறோம். கடவுளை, ‘அப்பா, தந்தையே’ என அழைக்கும் நாம், ஒருவர் மற்றவரை, ‘சகோதரன், சகோதரி’ என அழைக்கிறோம்.
இந்த மேன்மையான நிலையை நமக்கு முன்னோடியாகப் பெற்றவர் அன்னை கன்னி மரியா. அவர் நமக்கு இன்று முன்மாதிரியாகத் திகழ்கிறார்:
(அ) பற்றுறுதியில் முன்மாதிரி: கடவுளின் திட்டம் தனக்குப் புரியாததாக இருந்தாலும் கடவுளைப் பற்றிக்கொண்டார் மரியா.
(ஆ) கீழ்ப்படிதலில் முன்மாதிரி: கடவுளின் திருவுளத்துக்குத் தன்னையே கீழ்ப்படுத்தினார்.
(இ) உள்ளத்தில் இருத்திச் சிந்திப்பதில் முன்மாதிரி: ‘எனக்கு நிகழட்டும்!’ என்று சரணடைந்த மரியா, தன் வாழ்வின் ‘நிகழ்ச்சிகளை எல்லாம்’ – தனக்கு நிகழ்ந்ததை எல்லாம் – உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருக்கிறார். சிதறுண்ட படங்களை ஒன்று கூட்டி ஒன்றோடொன்று பொருத்திப் புள்ளிகளை இணைக்கிறார்.
ஆண்டவரின் அடிமை என்னும் நிலையிலிருந்த மரியா ஒரே நேரத்தில் ஆண்டவரின் மகள், ஆண்டவரின் தாய் என்னும் நிலைக்கு உயர்கின்றார்.
இன்று நாம் ‘மகன்-மகள்’ என்னும் நிலையில் எப்படி வாழ்வது?
(அ) பாவத்திலிருந்து விடுதலை: பாவத்திற்குள் நம்மைத் தள்ளும் தெரிவுகளை அறிந்துகொண்டு அவற்றை மேற்கொள்வதிலிருந்து விலகி நிற்போம். நாம் ஒரே நேரத்தில் பாவத்தோடும் கடவுளோடும் இருக்க முடியாது. ஒரே நேரத்தில் அடிமை போலவும் மகன்-மகள் போலவும் வாழ முடியாது. மேன்மையானதைப் பற்றிக்கொள்ள வேண்டுமெனில் தாழ்வானதை விட வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் மேய்ப்பர்கள், மேன்மையான மெசியாவைக் காண்பதற்காக தங்கள் ஆடுகளை விட்டுச் செல்கிறார்கள். இன்று நாம் விட்டுவிட வேண்டிய பாவம் அல்லது பழக்கம் எது?
(ஆ) கடவுள் தருகிற வாக்குறுதிகளைப் பற்றிக்கொள்தல்: கடவுளின் மகன்-மகள் என்னும் நிலையில் அமைதி, பாதுகாப்பு, அருள், இரக்கம், வாழ்வு ஆகியவற்றை நாம் உரிமைப்பேறாகப் பெற்றுள்ளோம். தாயின் முகம் குழந்தைமேல் ஒளிரும்போது குழந்தை புன்னகை பூக்கிறது. கடவுளின் திருமுகம் நம்மை நோக்கியே இருப்பதால் நாமும் மகிழ்ந்திருப்போம் – இந்தப் புதிய ஆண்டில்!
(இ) வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து வாழ்தல்: வானதூதர்கள் தங்களைவிட்டு அகன்றவுடன் பெத்லகேம் நோக்கிப் புறப்படுகிறார்கள் இடையர்கள். தங்கள் வாழ்வின் நோக்கத்தை அறிந்த ஒருவர் உடனே செயலாற்றத் தொடங்குகிறார். குழந்தையை நோக்கிச் செல்கிற அவர்களுடைய பயணம் உடனடியாக மற்றவர்களை நோக்கியதாக இருக்கிறது. பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைப் பெற்றுக்கொண்டவர்கள் அதே நற்செய்தியின் அறிவிப்பாளர்களாக மாறுகிறார்கள். என் வாழ்வின் நோக்கம் என்ன? அதை நான் எப்படி வாழ்கிறேன்?
(ஈ) இயேசுவின் பெயரில் வலிமை காண்போம்: ‘இயேசு’ (‘யோசுவா’ – ‘ஆண்டவர் மீட்கிறார்’) என்னும் பெயர் திருத்தூதர் பணிகள் நூலில் நலமும் வளமும் வாழ்வும் வழங்கியது. வலிமை இழக்கும்போதும், குழப்பம், அச்சம் எழும்போதும் நாம் இயேசு என்னும் பெயரை அழைப்போம். அவர் நம்மை விடுவிக்கிறார்.
இறுதியாக,
இன்றைய நாளில், கடவுளின் ஆசியைப் பெறுகிற நாம் அதை ஒருவர் மற்றவருக்கு வழங்குவோம்!
‘ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!’ என்று வாயார வாழ்த்துவோம். ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்துமுடிக்கிற கடவுள் (காண். சஉ 3:11), ஆண்டு முழுவதும் தமது நலத்தால் நமக்கு முடிசூட்டுவாராக! (காண். திபா 65:11).
நம் கவலைகள் எல்லாம் நம் புத்தாண்டு வாக்குறுதிகள்போல மறைந்து போவதாக!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! நலமும் வளமும் வெற்றியும் வாழ்வும் உங்களுக்கு உரித்தாகுக!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: