இன்றைய இறைமொழி
செவ்வாய், 4 மார்ச் ’25
பொதுக்காலம் 8-ஆம் வாரம் – செவ்வாய்
சீராக்கின் ஞானம் 35:1-12. திருப்பாடல் 50. மாற்கு 10:28-31
நூறு மடங்காக!
செல்வம் படைத்த இளவல் ஒருவர் திருச்சட்டத்தைப் பின்பற்றுகிறார். ஆனால், இயேசுவைப் பின்பற்றத் தயங்குகிறார். அதன் தொடர்ச்சியாக வரும் நிகழ்வில் பேதுரு இயேசுவிடம், ‘பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே!’ எனக் கேட்கிறார்.
‘இழப்பவர் எவரும் பெறுகிறார் எனில், உமக்காக அனைத்தையும் அனைவரையும் இழந்த நாங்கள் பெற்றுக்கொள்வதென்ன?’ என்பது பேதுருவின் கேள்வியாக இருக்கிறது.
‘நான் உங்களுக்குத் தருவேன்’ என்று இயேசு எந்த வாக்குறுதியும் தரவில்லை. மாறாக, ‘இவை கிடைக்கும்!’ என இரண்டை முன்மொழிகிறார். ஒன்று, இழந்தவை அனைத்தும் இம்மையில் நூறு மடங்காக, ஆனால், இன்னல்களுடன். இரண்டு, மறுமையில் நிலைவாழ்வு.
இவ்வாழ்வில் நாம் இழக்கும் அனைத்துக்கும் மறுவாழ்வில் நிலைவாழ்வு என்பது இயேசுவின் போதனை. இறப்புக்குப் பின் வாழ்வு என்பது இயேசுவின் சமகாலத்தில் நிலவிய நம்பிக்கை. இறப்புக்குப் பின் வாழ்வு என்பதும், இவ்வுலகில் எதையும் பெறாத ஒருவர் மறுவுலகில் பெற்றுக்கொள்வார் என்பதும் மக்கபேயர் நூல் காலத்தில் உருவாகிற கருத்துருக்கள். இவை நம் நம்பிக்கையே! இது எப்படி நடக்கும்? இவ்வுலகில் நாம் இழந்ததை மறுவுலகில் யார் நினைவுகூர்வார்? எப்படி அது நமக்கு மீண்டும் கிடைக்கும்? என்ற கேள்விகளுக்கு விடை இல்லை.
‘இன்னல்களுடன் நூறு மடங்காக’ என்னும் இயேசுவின் சொல்லாடலை எப்படிப் புரிந்துகொள்வது?
அனைத்தையும் இழப்பதன் நொறுங்குநிலையே என நான் புரிந்துகொள்கிறேன். அதாவது, ஒன்றை இழக்கும்போது நான் விடுதலை பெற்றவன் ஆகிறேன். ஆனால், அதே வேளையில் அந்தத் தெரிவு தருகிற துன்பத்தையும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு சீடர் இயேசுவுக்காகத் தன் வீட்டை இழக்கிறார். அவர் வீடு என்ற கவலையிலிருந்து விடுதலை பெறுகிறார். அதன் பராமரிப்பிலிருந்து விடுதலை பெறுகிறார். ஆனால், அவர் தங்குவதற்கான, தலைசாய்ப்பதற்கான இடத்தை அவர் கண்டுபிடிக்க வேண்டும். அதுவே அவருக்கு இன்னலாக மாறுகிறது. ஆக, விடுதலை, மகிழ்ச்சி என்பதெல்லாம் தற்காலிக அனுபவமே.
அனைத்தையும் இழக்கிற சீடர் நொறுங்குநிலையை ஏற்க வேண்டும் என்பதே இயேசுவின் போதனை.
இன்னொரு பக்கம், இயேசுவின் போதனையைத் தலைகீழாகப் புரிந்துகொள்ளக் கூடாது. அதாவது, ‘நூறு மடங்கு கிடைக்கும்’ என்பதற்காக சீடத்துவம் ஏற்றல் தவறு.
சீடத்துவம் தருகிற தன்விடுதலையே நாம் பெறுகிற வெகுமதி.
இன்றைய முதல் வாசகத்தில், ‘ஆண்டவர் திருமுன் வெறுங்கையோடு வராதே! … ஆண்டவரைத் தாராளமாய் மாட்சிப்படுத்து … உன் உழைப்பின் முதற்கனிகளைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே! … பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு கடவுளுக்கு உரித்தாக்கு!’ என அறிவுரை வழங்குகிறார் பென் சீரா. இது கடவுளே கூறிய சொற்களா, அல்லது கடவுளுக்குப் பணிபுரிவதாகச் சொல்கிற குருக்களின் சொற்களா என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில், ஆண்டவருக்கு என வருபவை என அனைத்தும் ஆண்டவரின் குருக்களுக்கே செல்கின்றன என்பதை நாம் அறிவோம்.
அனைத்தையும் துறந்து வெறுங்கையராய் வருகிற குரு, மற்றவர்கள் கைநிறையக் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்துவது வியப்பாகவும் நெருடலாகவும் இருக்கிறது.
‘நாம் கொடுக்கிற அனைத்தையும் கடவுளிடமிருந்து நூறு மடங்கு பெற்றுக்கொள்வோம் என்பதால் நிறையக் கொடுப்போம்!’ என்று சிந்தனையை முடிக்க மனம்வரவில்லை. நூறு மடங்கு திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான நாம் கொடுத்தால் கடவுளை வங்கியாளர் அல்லது வட்டியாகத் திரும்பக் கொடுப்பவராகச் சுருக்கிவிடுவோம்.
கடவுளைப் போலவே கடவுளைப் பற்றியவையும் புரிதலுக்கு அப்பாற்பட்டு இருக்கின்றன.
பொருள்களும் நபர்களும் நமக்கும் கடவுளுக்கும் குறுக்கே நிற்கக் கூடாது என்பதே பாடம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: