• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

நெருக்கடியும் கடவுளின் உடனிருப்பும். இன்றைய இறைமொழி. வெள்ளி, 11 ஏப்ரல் ’25

Friday, April 11, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Lenten Season Daily Catholic Lectio இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
வெள்ளி, 11 ஏப்ரல் ’25
தவக்காலம் ஐந்தாம் வாரம் – வெள்ளி
எரேமியா 20:10-13. யோவான் 10:31-42

 

நெருக்கடியும் கடவுளின் உடனிருப்பும்

 

விவிலியத்தில், ‘நெருக்கடி’ பற்றிய உருவகங்கள் திருப்பாடல்களில் அதிகம் காணக்கிடக்கின்றன. ‘குறுகிய வழியில் நான் நடந்தேன். ஆனால், ஆண்டவர் என் பாதையை அகலமாக்கினார்’, ‘சறுக்கும் வழிகளில் நான் நடந்தேன். என் அடிகள் சறுக்காமல் நீர் பார்த்துக்கொண்டீர்’, ‘சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் நீர் என்னோடு இருக்கிறீர்’ என்று திருப்பாடல்கள் மனித வாழ்வின் நெருக்கடிகளை உருவகங்களாகப் பதிவு செய்கின்றன. மேற்காணும் உருவகங்களை நாம் வாசிக்கும் இடங்களில் ஒன்று நமக்குத் தெளிவாக இருக்கிறது. திருப்பாடல் ஆசிரியர் தன் வாழ்வில் எப்பொழுதெல்லாம் நெருக்கடி நிலையை அனுபவிக்கிறாரோ, அப்பொழுதெல்லாம் ஆண்டவரின் உடனிருப்பைக் காண்கின்றார்.

 

நெருக்கடி இருக்கும் நேரத்தில் எல்லாம் இறைத்துணை இருக்கும் என்பதே விவிலியம் தரும் பாடமாக இருக்கின்றது.

 

இன்றைய வாசகங்கள் தங்கள் வாழ்வில் நெருக்கடி நிலைகளை எதிர்கொண்டு இரு மாந்தர்களை நம்முன் நிறுத்துகின்றன.

 

முதல் வாசகத்தில், எரேமியா ஆண்டவராகிய கடவுள்முன் சரணடைகின்றார். ‘ஆண்டவரே! நீரோ என்னை ஏமாற்றிவிட்டீர்! நானோ ஏமாந்து போனேன்!’ என்கிறார். தன் சொந்த ஊராரும் இனத்தாரும் தனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து நிற்க, தன் இறைவாக்குரைக்கும் பணி தோல்வியாகிவிட்டதை உணர்ந்து பின்வாங்க விழைகின்றார். அந்த நெருக்கடி நிலையில், அவர் உரைக்கும் அழகான வார்த்தைகள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன: ‘ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்.’

 

நிர்கதியாக நிற்கும் ஒருவரின் அருகில், அவரைக் காப்பாற்ற வாளேந்திய ஒரு வீரர் இருந்தால் அவர் துள்ளிக்குதிப்பார். அவருடைய தன்னம்பிக்கை உயரும், பயம் அகலும். எரேமியாவும் அப்படித்தான் உணர்கின்றார்.

 

நெருக்கடியான நிலையில் எரேமியாவால் எப்படி இறைத்துணையை உணர முடிந்தது?

 

அனைத்தும் இறைவனிடமிருந்து ஊற்றெடுக்கின்றன என உணர்பவர்கள் நெருக்கடி நேரத்தில் இறைவனின் உடனிருப்பை எளிதாக உணர்ந்துகொள்வர்.

 

நற்செய்தி வாசகத்தில், இயேசுவுக்கும் யூதர்களுக்கும் எதிரான வாக்குவாதம் ஏறக்குறைய ஒரு முடிவுக்கு வருகின்றது. இயேசு, கடவுளைத் தம் தந்தை என அழைப்பதைப் பொறுத்துக்கொள்ளாத யூதர்கள் அவர்மேல் கல் எறிய முயற்சி செய்கின்றனர். அனைவரும் இறைவனின் பிள்ளைகளே என்பதை அந்த நேரத்தில் இயேசு அவர்களுக்கு நினைவூட்ட முயல்கின்றார். அவருடைய முயற்சி தோற்றுப் போகிறது.

 

தனக்கென்று யாருமற்ற அந்த நேரத்தில், ‘என் தந்தை என்னுள்ளும் நான் என் தந்தையினுள்ளும் இருப்பதை …’ என்று இயேசு சொல்வது, அவர் பெற்ற இறைத்துணையை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

 

இன்று நாம் நம் வாழ்வில் நிறைய நெருக்கடிகளை நாம் சந்திக்கிறோம். வறுமை, முதுமை, தனிமை, நோய், இறப்பு, இழப்பு என நாம் எந்த எதார்த்தத்தை எதிர்கொண்டாலும் அங்கே இறைத்துணை நம்மோடு இருக்கிறது என்பதை நாம் நினைவில்கொள்வோம்.

 

நீங்கள் தெய்வங்கள்!

 

‘மனிதர்கள்மேல் எனக்குள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆகையால்தான், ஒருவழிச் சாலையைக் கடக்கும்போது கூட நான் இரு பக்கங்களும் பார்க்கிறேன்.’ – கடந்தவாரம் இன்ஸ்டாகிராமில் பார்த்த போஸ்டர் ஒன்றில் இவ்வார்த்தைகள் இருந்தன.

 

மனிதர்கள்மேல் நாம் நம்பிக்கை வைக்கிறோம், அல்லது வைக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம், அல்லது வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாலையில் வாங்கும் பாலில் இருந்து, இரவில் நம் வீட்டிற்கு வெளியே நாம் அமர்த்தும் வாட்ச்மேன் வரை நாம் மனிதர்கள்மேல் நம்பிக்கை வைக்கிறோம். சில நேரங்களில் அவர்கள் நம் நம்பிக்கையைக் குலைக்கிறார்கள். அல்லது அவர்களது செயல்கள் அவர்கள்மேல் நம்பிக்கையின்மையை நம்மில் வளர்க்கின்றன.

 

இன்னொரு பக்கம், ‘மனிதர்கள்மேல் நம்பிக்கை வைப்பதை விட கடவுள்மேல் நம்பிக்கை வைப்பது மேல்’ என விவிலியம் நமக்கு அறிவுறுத்துகிறது. கடவுள்மேல் உள்ள இந்த நம்பிக்கையை நாம் எப்படி வரையறை செய்வது? கடவுள்மேல் மட்டும் நம்பிக்கை வைத்துவிட்டு, மனிதர்கள்மேல் உள்ள நம்பிக்கையை நீக்கி விடலாமா? இல்லை.

 

முதல் வாசகத்தில் (எரேமியா 20:10-13), ‘என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்’ என்று அருள்புலம்பல் செய்கின்ற இறைவாக்கினர் எரேமியா, ‘ஆண்டவர் வலிமை மிகுந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்’ என்று துள்ளிக் குதிக்கின்றார். ஆக, மனிதர்கள்மேல் நம்பிக்கை இழக்கின்ற பொழுது எரேமியாவுக்கு இறை நம்பிக்கைக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. அல்லது, மனிதர்கள்மேல் நம்பிக்கை இழக்கின்ற எரேமியா அதற்கு மாற்றாக இறை நம்பிக்கையைப் பற்றிக்கொள்கின்றார். தன் இறைவாக்குப் பணிக் கப்பல் திக்கற்றுத் தவிக்கும்போது, ஊன்றி நிற்கின்ற நங்கூரப் புள்ளியாகத் தன் இறைவனைப் பார்க்கின்றார்.

 

நற்செய்தி வாசகத்தில் (யோவான் 10:31-42), இயேசுவுக்கும் யூதர்களுக்குமான விவாதம் தொடர்கின்றது. இயேசு தன்னை இறைவனோடு ஒன்றிணைத்துப் பேசுவதற்காக யூதர்கள் அவர்மேல் கல்லெறிய முயல்கின்றனர். தன் நற்செயல்களைச் சுட்டிக்காட்டுகின்ற இயேசு அவற்றின் பொருட்டாவது அவர்கள் தன்னை நம்பலாமே எனக் கேட்கின்றார்.

 

இயேசுவுக்கும் தங்களுக்கும் உள்ள வேற்றுமையைப் பார்த்து அவர்மேல் கல்லெறியத் துணிந்த தன் சமகாலத்து மக்களிடம், அவர்களுக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையை – அனைவரும் தெய்வங்கள் (காண். திபா 82:6) என்பதை – சுட்டிக்காட்டுகின்றார்.

 

ஆக,

 

மனிதர்கள்மேல் உள்ள நம்பிக்கை குறையும்போது இரு நிலைகளில் அதை நம்மால் சரி செய்ய இயலும்:

 

ஒன்று, இறைவனை நங்கூரப் புள்ளியாகப் பற்றிக்கொள்வது.

 

இரண்டு, மற்ற மனிதர்களுக்கும் நமக்கும் உள்ள வேற்றுமையைப் பாராமல், அவர்களும் நம்மைப் போன்ற சாயல் கொண்டவர்கள் என இருவருக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்து, அவர்களை இரக்கத்துடன் தழுவிக் கொள்வது.

 

நிற்க.

 

நற்செய்தி வாசகத்தின் இறுதியில், சிலர் இயேசுவின்மேல் நம்பிக்கை கொண்டதை வாசிக்கின்றோம்.

 

நம்பிக்கை, நம்பிக்கையின்மை, நம்பிக்கை குறைவு, அவநம்பிக்கை, அதீத நம்பிக்கை என வாழ்க்கை நகர்ந்துகொண்டேதான் இருக்கும்.

 

நமக்கு அருகில் இருப்பவர் தன் கையில் கற்களை வைத்திருந்தாலும், அவர்களோடு பேசுவதற்கு இயேசு பெற்றிருந்த துணிவுக்குக் காரணம் தன்னம்பிக்கையே.

 

தன்னம்பிக்கை இல்லாமல் மற்ற நம்பிக்கைகள் சாத்தியமல்ல.

 

இயேசுவின் ‘நான் தெய்வம்! நானே தெய்வம்!’ என்னும் எண்ணம் நம் தன்னம்பிக்கைக்கு வலுவூட்டுகிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: