இன்றைய இறைமொழி
வியாழன், 20 மார்ச் 2025
தவக்காலம் இரண்டாம் வாரம் – வியாழன்
எரேமியா 17:5-10. திருப்பாடல் 1. லூக்கா 16:19-31
நெருப்பில் விழும் சொட்டுத் தண்ணீர்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் செல்வர்-ஏழை இலாசர் எடுத்துக்காட்டை வாசிக்கிறோம். இந்த எடுத்துக்காட்டில் மூன்று கூறுகள் அடங்கியுள்ளன:
(அ) செல்வம் சீடத்துவத்துக்கு தடை
செல்வம் நம்மிடம் தன்னிறைவை உருவாக்குவதாலும், கண்டுகொள்ளாமையை ஏற்படுத்தி மற்றவர்களின் தேவைகளை அறியவிடாமற் செய்வதாலும் அது சீடத்துவத்துக்குத் தடையாக இருக்கிறது. எடுத்துக்காட்டில் நாம் காணும் செல்வர் இலாசருக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. அதே வேளையில் அவர் எந்த நன்மையும் அவருக்குச் செய்யவில்லை. அவருடைய பிரச்சினை கண்டுகொள்ளாமை!
(ஆ) புரட்டிப் போடப்படும் வாழ்க்கை
வாழ்க்கையின் நிகழ்வுகளையும் நகர்வுகளையும் நாம் வரையறுக்க, கணிக்க இயலாது. நம் திட்டமிடுதல்கூட ஓரளவுக்குதான் பயன்தரும். நாம் காணும் எடுத்துக்காட்டில், செல்வந்தர் மற்றும் ஏழை இலாசரின் வாழ்க்கை தலைகீழாகப் புரட்டிப் போடப்படுகிறது. முதல் பகுதியில் செல்வராக இருந்தவர் இரண்டாவது பகுதியில் துன்பத்தில் இருக்கிறார். முதல் பகுதியில் நாய்கள் நக்கும் புண்களைக் கொண்டிருந்தவர் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிறார்.
(இ) இறப்புக்கு முன் மற்றும் பின் உள்ள வாழ்க்கை
இறப்பு என்பது வாழ்வைப் பிரிப்பது போல நாம் உணர்கிறோம். இறப்புக்கு முன் உள்ள வாழ்வு இந்த உலக வாழ்வு, இறப்புக்குப் பின் உள்ள வாழ்வு மறு உலக வாழ்வு. இரண்டும் வௌ;வேறு இரயில் பெட்டிகள் அல்ல. மாறாக, ஒரே பேருந்து போல என நாம் எடுத்துக்கொள்வோம். வாழ்க்கை என்பது ஒன்று – இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே உள்ள இறப்பு நாம் தூங்கி எழும் சிறிய தூக்கமே என நினைக்கத் தொடங்கினால் வாழ்க்கையை ஒன்றாகப் பார்க்கும் நம்பிக்கைக் கண்கள் பெறுகிறோம். அதே வேளையில், நாம் இந்த உலகில் சரி செய்ய இயலாமற்போனால், மறுவுலகில் அதைச் சரி செய்ய இயலாது. ஆக, இறப்புக்குப் பின் உள்ள வாழ்க்கையை நிர்ணயிப்பது இறப்புக்கு முன் உள்ள நம் வாழ்க்கையே.
முதல் வாசகத்தில், ‘மனிதர்மேல் நம்பிக்கை வைப்போர்’ ‘கடவுள்மேல் நம்பிக்கை வைப்போர்’ என்று மானிடரை இரு குழுக்களாகப் பிரிக்கிறார். ஆண்டவராகிய கடவுளை நம்பாமல் தங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்களைச் சுற்றியிருந்த வலிமையான நாடுகளையும் நம்புகிறார்கள் யூதாவின் அரசர்கள். ஆனால், அவர்கள் அழிந்து போகிறார்கள். ஆண்டவராகிய கடவுள்மேல் நம்பிக்கை கொள்பவர்கள் நிலைத்திருக்கிறார்கள்.
நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் செல்வர் தன் செல்வத்தை மட்டுமே நம்புகிறார். ஆனால், இலாசர் கடவுளை நம்புகிறார்.
செல்வத்தால் செய்ய இயலாதவையும் இருக்கின்றன என்பதை வாசகர்களாகிய நாம் இறுதியில் கற்றுக்கொள்கிறோம்.
‘இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது. அதனை நலமாக்க முடியாது. அதனை யார்தான் புரிந்துகொள்வர்?’ எனப் புலம்புகிறார் எரேமியா.
வஞ்சகம் மிக்க இதயத்தை நலமாக்குவது நம் செயல்களால் சாத்தியம்.
கண்டுகொள்ளாமை இன்று நம்மைப் பாதிக்கிற மிகப் பெரிய நோய். நமக்கு வேண்டியவற்றை மட்டும் பார்க்குமாறு நாம் கண்களைத் திறந்து மூடுகிறோம்.
நமக்கு அடுத்திருப்பவர்களைச் சற்றே திரும்பிப் பார்த்தல் நலம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: