இன்றைய இறைமொழி
வியாழன், 27 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 7-ஆம் வாரம் – வியாழன்
சீராக்கின் ஞானம் 5:1-8. திருப்பாடல் 1. மாற்கு 9:41-50
நெருப்பும் உப்பும்
வலுவற்ற நிலையில் உள்ளோர்கள்மேல் குழுமம் காட்ட வேண்டிய அக்கறை பற்றியும், இயேசுவைப் பின்பற்றுபவர்கள் எந்தவொரு பாவத்திற்கும் இடம் கொடாதவாறு நடந்துகொள்ள வேண்டிய முறை பற்றியும் எடுத்துரைக்கிறார் மாற்கு (நற்செய்தி வாசகம்).
வாசகத்தின் இறுதியில், ‘நெருப்பு’, ‘உப்பு’ என்னும் இரண்டு உருவகங்களைப் பயன்படுத்துகிறார் இயேசு: (அ) நெருப்பால் தூய்மையாக்கப்படுதல், (ஆ) உப்பின் தன்மை கொண்டிருத்தல்.
(அ) நெருப்பால் தூய்மையாக்கப்படுதல்
‘பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர்’ என்கிறார் இயேசு. இயேசுவின் இந்தப் போதனை மாற்கு நற்செய்தியில் மட்டுமே உள்ளது. எருசலேம் ஆலயத்திற்குக் கொண்டுவரப்படும் பலிப்பொருள்களை நீண்ட நாள்கள் பாதுகாப்பதற்கும் அவற்றைத் தூய்மைப்படுத்துவதற்கும் அதன்மேல் உப்பைத் தூவுவார்கள். உப்பு இறைச்சிக்குள் நுழைந்து தன்னையே கரைத்து இறைச்சியின் இயல்பை மாற்றிவிடும். சீடர்களும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர். இந்த நெருப்பு பாதாளத்தில் எரியும் நெருப்பை அல்ல, மாறாக, இந்த உலகில் சீடர்கள் எதிர்கொள்ள சவால்களையும் துன்பங்களையுமே குறிக்கிறது. நாம் நம் துன்பங்கள் வழியாகவே சீடத்துவத்துக்குத் தயாராகிறோம்.
(ஆ) உப்பின் தன்மை கொண்டிருங்கள்
உப்பு தன் இயல்பை இழந்துவிட்டால் வெறும் மண் போல ஆகிவிடுகிறது. உவர்ப்புத் தன்மை இருக்கும் வரையே உப்பு பயன்பாட்டுப் பொருளாக இருக்கிறது. அது போல, சீடரும் சீடத்துவத்தின் தன்மை கொண்டிருக்கும் வரைதான் அவர் இயேசுவைப் பின்பற்ற முடியும். சீடத்துவத்தின் தன்மையைக் காத்துக்கொள்ள வேண்டும் என மொழிகிற இயேசு, ‘ஒருவர் ஒருவரோடு அமைதியோடு வாழுங்கள்’ என அறிவுறுத்துகிறார்.
சிறியோர், பெரியோர் என்று அனைவர்மேலும் மதிப்பு பாராட்டி அனைவருடைய நலம் விரும்ப வேண்டும்.
முதல் வாசகத்தில், அறநெறி சார்ந்த அறிவுரைகளையும் கடவுளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்னும் ஆன்மிக அறிவுரையையும் தருகிறார் பென் சீரா: ‘உன் நாட்டங்களுக்கும் வலிமைக்கும் அடிமையாகாதே! … ஆண்டவரிடம் திரும்பிச் செல்லக் காலம் தாழ்த்தாதே!’
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: