இன்றைய இறைமொழி
வெள்ளி, 7 மார்ச் ’25
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி
எசாயா 58:1-9அ. திருப்பாடல் 51. மத்தேயு 9:14-15
நோன்பும் மனமாற்றமும்
தவக்காலப் பயணத்தின் தொடக்கத்தில் இருக்கிற நம்மை நோன்பும் மனமாற்றமும் பற்றிச் சிந்திக்க அழைக்கின்றன இன்றைய வாசகங்கள். நம் வெற்றுச் சடங்குகளும் வெளிப்புற பக்தி அடையாளங்களும் கடவுளை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை. நம் எண்ணங்களின் செயல்களின் மாற்றங்களையே அவர் விரும்புகிறார்.
(அ) உண்மையான நோன்பு வாழ்வை மாற்றுகிறது
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் தருகிற முதன்மையான செய்தி ஒன்றை மக்களுக்கு அறிவிக்கிறார் எசாயா. நோன்பு என்பது உணவை விடுத்து நம்மையே ஒறுத்திக்கொள்வதோ வெளிப்புற சமய அடையாளங்களைப் பற்றிக்கொள்வது அல்ல. கடவுள் விரும்பும் நோன்பு நீதி, இரக்கம், அன்பு சார்ந்தது ஆகும்.
கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கும் நமக்கும் சவால் விடுகிறார். நோன்பு என்பது அநீதி என்னும் சங்கிலியை உடைப்பது, பசியோடு இருப்பவர்களிடம் உணவைப் பகிர்வது, வலுவற்ற நபர்களைப் பாதுகாப்பது ஆகியவற்றில் அடங்கியுள்ளது. நம் நோன்பு அன்பும் பணியும் இல்லாமல் இருந்தால் பயனற்றது ஆகும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஏறக்குறைய இதே கருத்தையே முன்மொழிகிறார். அவருடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை என்ற கேள்விக்கு விடை தருகிற இயேசு, நோன்பு என்பது இலக்கு அல்ல, மாறாக, கடவுளின் உடனிருப்புக்கு நாம் தரும் பதிலிறுப்பு எனக் கற்பிக்கிறார். நோன்பு என்பது உடல் ஒறுத்தலுக்கும் ஒழுக்கத்துக்கும் வழி வகுத்தாலும் அதன் நோக்கம் கடவுளுக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்வதாகும்.
(ஆ) உண்மையான மனமாற்றத்தின் இதயம்
உண்மையான நோன்பின் மனமாற்றத்தின் இயல்பை எடுத்துரைக்கிறார் தாவீது (பதிலுரைப்பாடல், திபா 51), ‘கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே’ என்கிறார். தவக்கால ஒறுத்தல் நம் உள்ளம் சார்ந்ததாக அமைகிறதா என்று நாம் கேட்போம்.
(இ) மேன்மையான நோன்பு
நம்மிலும் நம்மைச் சுற்றிய உலகிலும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அழைப்பாக இருக்கிறது நோன்பு.
உணவு மறுக்கும் நாம் பசியோடு இருப்பவர்களின் பசி ஆற்றுகிறோமா?
இறைச்சியைத் தவிர்க்கும் நாம் புறங்கூறுவதிலும், பெருமை கொள்வதிலும், தன்னலத்திலும் ஈடுபடுகிறோமா?
சடங்குகளைப் பற்றிக்கொள்ளும் நாம் உறவுகளைத் தவிர்க்கிறோமா?
கடவுளை நோக்கிய, பிறரை நோக்கிய நகர்வாக இருக்கட்டும் நம் நோன்பு.
இன்றைய சவால்: அன்பின் நோன்பு
இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் நேரம் செலவழிப்பதிலிருந்து நோன்பு இருந்து, அந்த நேரத்ஐ நாம் மற்றவர்களிடம் செலவழிப்போம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: