இன்றைய இறைமொழி
வியாழன், 13 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 5-ஆம் வாரம் – வியாழன்
தொடக்கநூல் 2:18-25. திருப்பாடல் 128. மாற்கு 7:24-30
பசியாறும் நாய்க்குட்டிகள்!
நாம் ஆயிரம் யோசனைகள் அல்லது எண்ணங்கள் கொண்டிருக்கலாம். நம் செயல்தான் நாம் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. பல நேரங்களில் நம் எண்ணங்களோடு நாம் நிறுத்திக்கொள்கிறோம். நாம் விரும்புவதைச் செய்யவும் பெறவும் நமக்கு வெளியே தடைகள் இல்லை. நமக்கு நாம்தான் தடைகளாக நிற்கிறோம்.
நம் வாழ்வுக்கான பொறுப்பு நாம் எனவும், தொடர்ந்து செயலாற்றுதலே வெற்றி தரும் என்று நமக்குக் கற்பிக்கிறார் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் பெனிசிய நகரத்துப் பெண்.
இவர் ஒரு பெண். புறவினத்துப் பெண். பேய் பிடித்த இளவலின் தாய். தான் விரும்பியது தன் மகளுக்கு நலம். அதைப் பெற்றுக்கொள்ள இயேசுவிடம் வருகிறார்.
வல்ல செயல்களை வழக்கமாக விரும்பிச் செய்கிற இயேசு இந்த நிகழ்வில் கொஞ்சம் பொறுமை காக்கிறார். ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவதில்லையே!’ என்கிறார் இயேசு. பெண் உடனடியாகக் கோபப்படவில்லை. இயேசுவைப் போல அவரும் பொறுமையோடு நிகழ்வைக் கையாளுகிறார். பிள்ளைகளுக்குரிய உணவு நாய்க்குட்டிகளுக்கு வழங்கப்படவில்லை என்றாலும், நாய்க்குட்டிகள் எப்படியோ பசியாறிவிடுகின்றன என்கிறார். மேசையின் மேலே இயேசு பார்த்தபோது, மேசைக்குக் கீழே பெண் பார்க்கிறார்.
தனக்கு நிகழ வேண்டிய செயல் இயேசுவால் மட்டுமே நிகழும் என்று உறுதியாக நம்பினார் இயேசு. பசியால் துடிக்கும் நாய்க்குட்டி எப்படியும் பசியாற விரும்புகிறதே அன்றி, திரும்பிப் போய்விட விரும்புவதில்லை. இரக்கப்பட்டு நாய்க்குட்டிகளுக்கு வழங்கப்படவில்லை என்றாலும், எதார்த்தமாக விழுகிற துகள்களால் நாய்க்குட்டிகள் பசியாறும் என்பது பெண்ணின் எண்ணமாக இருக்கிறது.
இவரிடம் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?
‘எதையும் தனிப்பட்ட அளவில் எடுத்துக்கொண்டு யாரிடமும் கோபம் கொள்ளக் கூடாது’ என்பதுதான். அவர் கோபம் கொண்டு இயேசுவின் திருமுன்னிலையிலிருந்து நகர்ந்திருந்தால் அவருடைய மகள் நலம் பெற்றிருக்க இயலாது. நிகழ்வு தன் கட்டுக்கு வெளியே சென்றாலும் பொறுமையாகக் கையாண்டு அதைத் தன் கட்டுக்குள் கொண்டு வருகிறார் பெனிசிய நகரத்துப் பெண்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் பெண்ணைப் படைத்து ஆணுக்கு ஏற்ற துணையாக அவரை ஆணிடம் கொண்டு வருகிறார். ‘எலும்பின் எலும்பும் சதையின் சதையும்’ என்னும் ஆதாமின் சொற்கள் வெறும் உணர்ச்சிப் பெருக்கில் எழுந்த சொற்கள் அல்ல, மாறாக, இருவரும் ஒருவர் மற்றவர்மேல் காட்டுகிற பொறுப்புணர்வின் நிரப்புநிலையின் உறுதிமொழியாக அவை இருக்கின்றன.
திருப்பாடல் ஆசிரியர் (திபா 128) நற்பேறு கொண்ட ஆணைப் பற்றி வர்ணிக்கிறார். நற்பேறும் நலமும் ஆண்டவரிடமிருந்தே வருகின்றன.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: