இன்றைய இறைமொழி
செவ்வாய், 22 அக்டோபர் 2024
பொதுக்காலம் 29-ஆம் வாரத்தின் செவ்வாய்
எபேசியர் 2:12-22. லூக்கா 12:35-38
பந்தி பரிமாறப்படும் பணியாளர்கள்
‘தயார்நிலையிலும் விழிப்புநிலையிலும் நின்றுகொண்டும் இருக்கும் பணியாளர்கள் தலைவரால் பந்தி பரிமாறப்படுவர்’
தம் சீடர்கள் கொண்டிருக்க வேண்டிய தயார்நிலை, விழிப்புநிலை பற்றி உருவகமாக எடுத்துரைக்கிறார் இயேசு. ஓர் இல்லம். அந்த இல்லத்தில் நிறையப் பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய தலைவர் திருமண விருந்துக்காக வெளியூர் செல்கிறார். திரும்பி வருகிற தலைவருக்காகக் காத்திருக்கும் பணியாளர்கள் உடனடியாக அவருக்குக் கதவுகளைத் திறக்க வேண்டும். இல்லம் நுழைகிற தலைவர், பணியாளர்களை அமரச் செய்து அவர்களுக்குப் பந்தி பரிமாறுகிறார்.
உருவகங்களின் பொருளைப் பின்வருமாறு புரிந்துகொள்ளலாம்: இல்லம் என்பது இவ்வுலகம். பணியாளர்கள் என்பவர்கள் இயேசுவின் சீடர்கள். இல்லத்தின் தலைவர் இயேசு. திருமண விருந்து என்பது இயேசுவின் விண்ணேற்றம். இல்லம் திரும்புதல் என்றால் இயேசுவின் இரண்டாம் வருகை. கதவுகள் திறத்தல் என்றால் தகுதியான நிலையில் நிற்பது. பந்தி பரிமாறுதல் என்றால் நாம் பெறக்கூடிய விண்ணக மாட்சி.
நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் கூறுகள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன:
(அ) இடையை வரிந்துகட்டுதல், விளக்குகள் எரிந்துகொண்டிருத்தல், கதவைத் திறக்கக் காத்திருத்தல்
‘இடையை வரிந்துகட்டுதல்’ என்பது போருக்கான தயார்நிலையை அல்லது முதன்மையான செயல் ஒன்றைச் செய்வதற்கான தயார்நிலை குறிக்கும் சொல்லாடல். இச்சொல்லாடல் முதல் ஏற்பாட்டு யோபு நூலை நினைவூட்டுகிறது. யோபுவின் நண்பர்கள் மூவரும், இறுதியாக நான்காவது இளவல் எலிகூவும் பேசி முடித்தபின்னர், ஆண்டவர் சூறாவளியினின்று யோபுவுடன் உரையாடுகிறார். ‘வீரனைப் போல் இடையினை இறுக்கிக்கட்டு!’ என்று தொடங்குகிறது உரையாடல் (காண். யோபு 38:3-7)
‘விளக்குகள் எரிந்துகொண்டிருத்தல்’ – இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனத்தில் பணியாளர்களுடைய முதன்மையான வேலை இரவில் விளக்குகளுக்கு ஒளியேற்றுதல் ஆகும். விளக்குகள் ஏற்றப்பட்ட இல்லம் என்பது உயிரோட்டமான இல்லமாக இருக்கிறது. ஏனெனில், வெளிச்சம் இருந்தால் மட்டுமே நமக்கு இயக்கம் சாத்தியமாகிறது. இருட்டில் நாம் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், விளக்குகள் மற்றவர்களை இருளில் அடையாளம் காண்பதற்கும் உதவி செய்தன.
‘கதவைத் திறக்கக் காத்திருத்தல்’ – திருடர்கள் பயம் இருக்கும் இடங்களில் கதவுகள் பூட்டிவைக்கப்படுவதுண்டு. கதவு தட்டப்படும் விதத்தை வைத்தே, வந்திருப்பது தலைவரா அல்லது திருடரா என்பதைப் பணியாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
(ஆ) விழித்திருக்கும் பணியாளர்கள்
இங்கே விழித்திருத்தல் என்றால் வெறும் கண்களைத் திறந்து வைத்திருத்தல் அல்ல. மாறாக, தலைவரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருத்தல். அல்லது தலைவர் பற்றிய நினைவாக இருத்தல். நினைவோடு இருக்க வேண்டும் எனில், தூக்கம் மறந்தவர்களாகவும், மது மயக்கம் இல்லாதவர்களாகவும், கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடாதவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
(இ) புரட்டிப் போடுதல்
கதவு திறக்கப்பட்டவுன் உள்ளே நுழைகிற தலைவரின் கண்களில் படுகிற பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். பணியாளர்கள் தலைவருக்காகச் செய்த அனைத்தையும் இப்போது தலைவர் பணியாளர்களுக்குச் செய்கிறார்: இடையை வரிந்துகட்டுகிறார், அவர்களை மேசையில் அமர்த்துகிறார், அவர்களுக்கு உணவு பரிமாறுகிறார். நம் சமூக வாழ்வில் பணியாளர்கள் இத்தகைய மதிப்பை எங்கும் பெறுவதில்லை. தலைவரே இங்கே பணியாளராக மாறுவதோடு, பணியாளர்களைத் தலைவர் நிலைக்கு உயர்த்துகிறார். தலைகீழான புரட்டிப் போடுதல் இங்கே நடந்தேறுகிறது.
இந்த வாசகம் இன்று நமக்கு வழங்கும் பாடங்கள் எவை?
(அ) பணியாளர் மனநிலை
மேலாண்மையியல் ஆசிரியர் இராபின் ஷர்மா, ஆளுகைக்கான வழி என முதலில் குறிப்பிடுவது, ‘லன்ச் பாக்ஸ் மனநிலை – எக்ஸக்யூடிவ் மனநிலை.’ லன்ச் பாக்ஸ் மனநிலையோடு இருக்கும் ஒருவர் தம்மையே பணியாளர் எனக் கருதுகிறார், புதியவற்றைக் கற்றுக்கொடுக்கிறார், இன்னும் அதிகம் தேவை என விரும்புகிறார், எல்லாரோடும் இணக்கமாக இருக்கிறார், ஓய்வின்றித் தொடர்ந்து வேலை செய்கிறார். அவருடைய லன்ச் பாக்ஸூக்காக அவர் உழைத்தே ஆக வேண்டும். எக்ஸக்யூடிவ் மனநிலையோடு இருக்கும் ஒருவர் தமக்கு எல்லாம் தெரியும் என எண்ணுகிறார். புதியவற்றை அவர் கற்றுக்கொள்வதில்லை. மற்றவர்களிடமிருந்து தள்ளியே நிற்பார். தன் வேலை முடிந்தவுடன் ஓய்வு, பொழுதுபோக்கு என மறைந்துவிடுவார். தம் சீடர்கள் பணியாளர்களாக – லன்ச் பாக்ஸ் மனநிலை கொண்டவர்களாக – இருக்க வேண்டும் என்பது இயேசு தருகிற பாடம்.
(ஆ) விழித்திருத்தல்
இயேசுவின் சீடர்கள் தம்மைப் பற்றிய அறிவும், தம் இருத்தல் பற்றிய அறிவும், தம் தலைவர் பற்றிய அறிவும் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். அறிதல் இருக்கும் இடத்தில்தான் விழித்திருத்தல் சாத்தியமாகும். நம் சீடத்துவத்தை இன்று எது அடையாளப்படுத்துகிறது? நாம் இருக்கும் இடம், பணி பற்றிய தெளிவு நமக்கு இருக்கிறது? நம் ஆண்டவராகிய கடவுளைப் பற்றிய நம் அறிவின் அளவு என்ன?
(இ) பேறுபெற்றவர்கள்
தலைவர் பணியாளர்கள்மேல் இரக்கம் காட்டி, அவர்களைப் பந்தியில் அமர்த்தவில்லை. மாறாக, அது அவர்களுடைய உரிமை என்பதுபோலச் செயல்படுகிறார். பேறுபெற்ற நிலை என்பது மற்றவர்களுடைய இரக்கத்தால் வருவதல்ல – ஆனால், மரியா பெற்ற பேறுபெற்ற நிலை கடவுளின் இரக்கத்தால் வந்தது! நாம் எந்த அளவுக்கு நம் வாழ்க்கைக்கு பணிக்கு நம்மையே கொடுக்கிறோமோ, அதைப் பொருத்தே வாழ்க்கையும் பணியும் நமக்குத் திரும்பப் பயன்களை அளிக்கும். எனவே, நாம் பொறுப்புணர்வுடன் செயல்படுதல் அவசியம்.
இன்றைய முதல் வாசகத்தில், பவுல் இருபெரும் இறையியல் கருத்துகளை முன்மொழிகிறார்: ஒன்று, இயேசு தலைசிறந்த ஒப்புரவாளர். அவருடைய ஒப்புரவுப் பணி சிலுவை இறப்பில் நடந்தேறகிறது. இரண்டு, திருஅவை பற்றிய உருவகம். திருஅவையை ‘கட்டடம்’ என உருவகம் செய்கிறார் பவுல். ஒருவர் மற்றவருக்கு இடையே இருக்கக் கூடிய பொருந்துதன்மையையும் கிறிஸ்துவின்மேல் வீற்றிருப்பதையும் இது குறிக்கிறது.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தயார்நிலையோடும் விழிப்புநிலையோடும் இருக்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 231)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: