இன்றைய இறைமொழி
செவ்வாய், 12 நவம்பர் 2024
பொதுக்காலம் 32-ஆம் வாரம், செவ்வாய்
ஆயர் புனித யோசபாத், நினைவு
தீத்து 2:1-8, 11-14. திருப்பாடல் 37:3-4, 23, 27, 29. லூக்கா 17:7-10
பற்றற்ற பணி
நாம் எதற்கு யாருக்குப் பணி செய்கிறோமோ அவற்றோடு, அவரோடு ஒரு பற்றை ஏற்படுத்துகிறோம். இந்தப் பற்று அல்லது பிணைப்பின் விளைவாக நாம் அவரிடமிருந்து பாராட்டையும், பரிசையும் எதிர்பார்க்கிறோம். பற்றற்ற நிலையில் பணியாற்றுதல் என்பது ஒரு கொடை. இந்தக் கொடையைப் பெற்ற ஒருவர் தன்னிலேயே விடுதலை பெற்றவராக மாறுகிறார். கடவுள் நமக்கு அளிக்கும் அருள் இவ்வுலக வாழ்வுக்கு நம்மைப் பயிற்றுவிக்கிறது. தொடர் பயிற்சியின் வழியாக நாம் மதிப்பீடுகளைக் கற்றுக்கொள்கிறோம். நம் பணிகள் அல்ல, மாறாக, நம் மதிப்பீடுகளே மற்றவர்களின் மனத்தில் நிற்கின்றன.
முதல் வாசகச் சிந்தனை (தீத் 2:1-8, 11-14)
(அ) நன்மைத்தனத்தின் எடுத்துக்காட்டாக வாழ்தல்: நலம்தரும் போதனையும் நற்செயல்களும் நம் வாழ்வை நாம் நன்மைத்தனத்தில் தகவமைத்துக்கொள்ள நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன. நம் நம்பிக்கை செயல்களாக வெளிப்பட வேண்டும்.
(ஆ) பயிற்றுவிக்கும் அருள்: கடவுளின் நம் வாழ்வை மேன்மைப்படுத்திக்கொள்ள நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
(இ) நற்செயல்கள்: ஆயர்பணித் திருமுகங்களில் ‘இறைப்பற்றும்’ ‘நற்செயல்களும்’ இணைந்தே செல்கின்றன. இறைபற்றில் வேரூன்றி, நற்செயல்களில் கனிதருதல் வேண்டும்
பதிலுரைப் பாடல் சிந்தனை (திபா 37:3-4, 23, 27, 29)
(அ) ஆண்டவர் மேல் நம்பிக்கையும் மகிழ்ச்சியும்: ஆண்டவரில் நம்பிக்கை கொள்தலும் அவரில் மகிழ்தலும் நம் ஆன்மாவின் ஆசைகளாக இருத்தல் நலம். அவரே நம் ஆன்மாவின் தேடல்களை நிறைவு செய்கிறார்.
(ஆ) நம்பிக்கையாளர்களுக்குக் கடவுளின் வழிகாட்டுதல்: கடவுள் தம்மைத் தேடுவோரின் வழிகளை நெறிப்படுத்துகிறார்.
(இ) நன்மைத்தனமும் நீடித்த அமைதியும்: தீமையிலிருந்து நம்மைத் திருப்பி நன்மையை நோக்கிச் செல்லும்போது அமைதி பிறக்கிறது.
நற்செய்தி வாசகச் சிந்தனை (லூக் 17:7-10)
(அ) பணியில் தாழ்ச்சி: கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் பணி செய்தல் நம் கடமை என நினைவூட்டுகிற இயேசு, தாழ்ச்சியைப் பற்றிக்கொள்ள அழைக்கிறார். தாழ்ச்சி என்றால் தன்னைக் குறைப்படுத்துதல் அல்ல, மாறாக, தன்னை அதிகமாக நினையாதிருத்தல். தன்நிறைவு பெற்றிருக்கிற உள்ளம் பிறரின் பாராட்டுகளைத் தேடுவதில்லை.
(ஆ) கடவுளின் திருவுளத்துக்குப் பணிதல்: நம் விருப்பங்களை ஒதுக்கிவிட்டு இறைவிருப்பம் ஏற்பதே சீடத்துவம்.
(இ) கடவுளின் பணியாளர்கள் என்னும் நிலை: கடவுளின் பணியாளர்கள் என்னும் நிலையில் வாழ்க்கை நமக்கு வரையறுத்துள்ள பணிகளைச் செய்துவிட்டு நன்றியுணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் விடைபெறுதல் நலம்.
இன்றைய நினைவு (ஆயர் யோசபாத்து)
உக்ரைன் நாட்டில் பிறந்த ஆயர் கீழைத் திருஅவைக்கும் கத்தோலிக்கத் திருஅவைக்கும் ஒன்றிப்பை ஏற்படுத்த விரும்பினார். துணிச்சலோடும் பரிவோடும் ஒப்புரவை ஏற்படுத்தினார். கிறிஸ்தவ ஒன்றிப்பின் பாதுகாவலர் என இவர் அழைக்கப்படுகிறார்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ பற்றற்ற நிலையில் பணியாற்றுகிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 246).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: