இன்றைய இறைமொழி
திங்கள், 25 நவம்பர் 2024
பொதுக்காலம் 34-ஆம் வாரம், திங்கள்
திருவெளிப்பாடு 14:1-5. திருப்பாடல் 24. லூக்கா 21:1-4
பற்றுறுதியும் கொடையும்
கைம்பெண்ணின் எளிய காணிக்கையைப் பாராட்டுகிறார் இயேசு. தாராள உள்ளம் என்பது நம் கொடையின் அளவைப் பொருத்து அல்ல, மாறாக, தியாகத்தின் அளவைப் பொருத்தது. முழுமையாகக் கொடுக்கும் இதயம் கடவுளின் பார்வையில் மதிப்புக்குரியதாக இருக்கிறது. நம் நிறைவிலிருந்து அல்ல, மாறாக, நம்மையே நிறைவாகக் கொடுப்பதே பாராட்டுதற்குரியது.
முதல் வாசகச் சிந்தனை (திவெ 14:1-5)
(அ) கடவுளின் பெயரால் முத்திரையிடப்பட்டவர்கள்: 144,000 பேர் கடவுளால் முத்திரையிடப்படுகிறார்கள். முத்திரையிடப்படுதல் என்பது உரிமை கொண்டாடப்படுவதைக் குறிக்கிறது.
(ஆ) தூய்மையான அன்பு: தூய்மையும் நாணயமும் நிறைந்த வாழ்க்கை நம் சொற்களிலும் செயல்களிலும் வெளிப்படுகிறது.
(இ) புதிய பாடலைப் பாடுதல்: கடவுளால் மாற்றம் பெறுகிற மக்கள் புதிய பாடல் பாடுகிறார்கள். புதிய உறவுநிலையைக் குறிக்கிறது இச்செயல்.
பதிலுரைப் பாடல் சிந்தனை (திருப்பாடல் 24)
(அ) கடவுளின் இறையாண்மை: பூவுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருக்கு உரியவை. அனைத்துக்கும் பொறுப்பாளர்களாகிய நாம் நன்றியுணர்வுடன் வாழ்தல் வேண்டும்.
(ஆ) தூய வழியே இறை வழி: தூய்மையான இதயமும் கறைபடாத கைகளும் உடையவர்கள் கடவுளின் ஆசி பெற்றவர்களாக இருக்கிறார்க்.
(இ) மாட்சியின் அரசர்: மாட்சியின் அரசர் உள்ளே வரும்போது கதவுகளைத் திறந்து அவரை வரவேற்க வேண்டும்.
நற்செய்தி வாசகச் சிந்தனை (லூக்கா 21:1-4)
(அ) தியாகம்நிறை கொடுத்தல்: கைம்பெண்ணின் காணிக்கை சிறியதாக இருந்தாலும், கடவுளின் பார்வையில் அது பெரியதாக இருந்தது. ஏனெனில், அவர் தன்னிடம் உள்ளது அனைத்தையும் தந்தார்.
(ஆ) கடவுளின்மேல் முழுமையான பற்றுறுதி: தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுப்பதன் வழியாக, கடவுள்மேல் முழுமையான சார்புநிலையை ஏற்படுத்திக்கொண்டார் கைம்பெண்.
(இ) கடவுள் இதயத்தைக் காண்கிறார்: வெளிப்புற அடையாளங்களையும் அலங்காரங்களையும் அல்ல, மாறாக நம் உள்ளார்ந்த இயல்பையே காண்கிறார் கடவுள்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்களையே முழுமையாகக் கடவுளுக்குக் கையளிக்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 257).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: