இன்றைய இறைமொழி
செவ்வாய், 25 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 7-ஆம் வாரம் – செவ்வாய்
சீராக்கின் ஞானம் 2:1-11. திருப்பாடல் 37. மாற்கு 9:30-37
பெரியவர் யார்?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் பாடுகள்-இறப்பு-உயிர்ப்பை இரண்டாம் முறை அறிவிக்கிறார். இரண்டாம் முறை அறிவிப்பைப் புரிந்துகொள்ளவும் தவறுகிறார்கள் சீடர்கள். அவர்களுடைய எண்ணமெல்லாம் தங்களில் பெரியவர் யார் என்பது பற்றியதாக இருக்கிறது.
இயல்பாக நம்மில் உள்ள ஓர் உந்துணர்வு ‘பெருமை உணர்வு’ ஆகும். நாம் மற்றவர்களை விட ஏதோ ஒரு வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளவே விரும்புகிறோம். நம் ஆளுமை, உடல்வாகு, நிறம், உடல் எடை, படிப்பு, பெயர், வேலை, பொருளாதார நிலை, சாதிய அடையாளம், மொழி, சமூக நிலை, நாம் அடைந்த வெற்றிகள் ஆகியவற்றை முன்மொழிந்து நாம் மற்றவரைவிடப் பெரியவர் என முன்மொழிய விரும்புகிறோம்.
தன்மதிப்பு வேறு, மதிப்பைத் தனதாக்கிக்கொள்தல் என்பது வேறு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தன்மதிப்பு நமக்கு உள்ளேயிருந்து புறப்படுகிறது. நம் இருத்தல் மட்டுமே போதும் நாம் மதிப்புக்குரியவர் என்று உணர்ந்துகொள்வதற்கு. இந்த நிலையில் நாம் ஒவ்வொருவரும் தன்மதிப்பு கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மதிப்பைத் தனதாக்கிக்கொள்தல் என்பது வெளியிலிருந்து உள்நோக்கி வருகிறது. மற்றவர்களோடு ஒப்பிட்டு, அல்லது மற்றவர்கள் பார்வையில் நாம் மதிப்புக்குரியவர் என உணர்வது. இந்த நிலைப்பாட்டில் நாம் நம் மதிப்பை நமக்கு வெளியே நிறுத்துகிறோம். மற்றவர் மதிப்பு தராதபோது நாம் குலைந்து போகிறோம்.
‘பெருமை உணர்வைக் களைந்து வாழ்வதற்கான’ மூன்று வழிகளை இன்று இயேசு நமக்குக் கற்பிக்கிறார்:
(அ) முதல்வராக இருக்க விரும்புகிறவர் அனைவருக்கும் கடைசியாக இருக்க வேண்டும். எல்லாரும் இப்படி இருக்க முயற்சி செய்தால் எல்லாரும் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு பின்னால் செல்ல வேண்டியிருக்கும். ஒரு வரிசையில் நூறு பேர் இருந்தாலும் யாரோ ஒருவர் முதலாவதாக இருப்பார், இன்னொருவர் கடைசியாக இருப்பார். வரிசையை அப்படியே திருப்பினால் முதலாக இருப்பவர் கடைசியாகவும், கடைசியாக இருப்பவர் முதலாகவும் மாறுவார். இயேசுவின் சொற்களை எப்படிப் புரிந்துகொள்வது? ‘கடைசியாக இருத்தல்’ என்னும் மனப்பாங்கே ஒருவரை முதன்மை நிலைக்கு உயர்த்துகிறது. அதாவது, தன் இருத்தலை மட்டுமே பற்றிக்கொண்டு மற்ற அடையாளங்களை விடுப்பதே கடைசியாக இருத்தல் ஆகும்.
(ஆ) தொண்டராக இருத்தல் அல்லது தொண்டாற்றுதல். கிரேக்கப் பதத்தில் இதன் பொருள், ‘அடிமையாக இருத்தல்’ என்று உள்ளது. ஓர் அடிமை தன் எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, தலைவரின் எண்ணம் நிறைவேற வேண்டும் என விரும்புகிறார். அவ்வாறே, தலைமைத்துவம் ஏற்பவர் தன் எண்ணத்தை ஒதுக்கிவிட்டு மற்றவர்களின் எண்ணம் ஏற்பவராக இருக்க வேண்டும்.
(இ) சிறுபிள்ளையை ஏற்றுக்கொள்தல். நாம் நம்மைவிடப் பெரியவர்களை எளிதாக ஏற்றுக்கொள்கிறோம். ஏனெனில், அவர்களால் நமக்கு எதையாவது கொடுக்க இயலும். அல்லது அவர்களிடமிருந்து நாம் எதையாவது பெற்றுக்கொள்ள இயலும். சிறுகுழந்தைகள் எதையும் தராத நிலையில் நம் முன் நிற்கிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்ளும்போது நாம் கொடுக்கும் நிலைக்கு உயர்கிறோம். அனைவரையுமே சிறுபிள்ளைகள் என நினைத்து ஏற்றுக்கொண்டால் நம் வாழ்க்கை எளிதாக அமையும்.
இன்றைய முதல் வாசகத்தில், சோதனைகளையும் துன்பங்களையும் ஏற்றுக்கொள்வதற்கான தயார்நிலையை நாம் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறார் ஆசிரியர். ‘குழந்தாய்’ என்னும் ஆசிரியரின் அழைப்பு குழந்தைகளுக்கானது மட்டுமல்ல. நமக்கானது! குழந்தைகள் என்னும் நிலையில் வாழ்க்கையை எளிதாக ஏற்றுக்கொள்தல் நலம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: