இன்றைய இறைமொழி
புதன், 9 ஏப்ரல் ’25
தவக்காலம் ஐந்தாம் வாரம் – புதன்
தானியேல் 3:14-20, 24-25, 28. யோவான் 8:31-42
பொய்யும் விடுதலையும்
ஏறக்குறைய கடந்த 10 நாள்களாக நாம் யோவான் நற்செய்தியிலிருந்து வாசித்துக் கொண்டிருக்கிறோம். இயேசுவை ஏற்றுக்கொள்ள யூதர்கள் தயக்கம் காட்டுவதும், இயேசு தன்விளக்கம் தருவதும், பின் அவர்கள் அதை கேலியாக்குவதும் என நிகழ்வுகள் நகர்ந்துகொண்டே வருகின்றன.
இன்றைய நற்செய்தி வாசகம் (யோவா 8:31-42), ‘விடுதலை’ என்னும் சொல்லை மையமாக வைத்துச் சுழல்கிறது. இன்றைய நற்செய்தியில் இரண்டு வரையறை வாக்கியங்களை முன்வைக்கின்றனர் யூதர்கள்:
அ. ‘நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை’
ஆ. ‘ஆபிரகாமே எங்கள் தந்தை’
இவை இரண்டுமே பொய் என்பதை இயேசு அவர்களுக்கு தோலுரிக்கின்றார்.
அ. ‘நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை’
இயேசுதான் இந்த விவாதத்தை தொடங்குகிறார்: ‘என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள். உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்.’
இப்போதுதான் அவர்கள் தாங்கள் யாருக்கும் அடிமைகளாக இருந்ததில்லை என்கின்றனர். ஆனால், அவர்களின் முன்னோர் எகிப்தில் அடிமைகளாக இருந்ததையும், அவர்களை ஆண்டவராகிய கடவுள் வியத்தகு முறையில் விடுதலை செய்ததையும் அவர்கள் மறந்துவிடுகின்றனர். அடுத்ததாக, வெகு சில ஆண்டுகளுக்கு முன் அசீரியாவிலும் பின்னர் பாபிலோனியாவிலும் அடிமைகளாக இருக்கின்றனர். இப்போது – அதாவது, இயேசுவின் சமகாலத்தில் – உரோமைக்கு அடிகைளாக இருக்கின்றனர். இப்படி அடிமைத்தனங்களை அனுபவித்தாலும் அவர்கள் பொய்யுரைக்கின்றனர்.
இயேசு அவற்றைச் சுட்டிக்காட்டாமல், இதையெல்லாம் கடந்த, எல்லாரும் அடிமையாக இருக்கின்ற ஒன்றைச் சுட்டிக்காட்டுகின்றார்: ‘பாவம் செய்யும் யாவரும் பாவத்திற்கு அடிமை’. ஏனெனில், பாவம் செய்த ஒருவர் அதைத் திரும்பத் திரும்பச் செய்வதால் ஒரு கட்டத்தில் அவர் ‘செய்தார்’ என்ற நிலை மாறி, அவர் செய்யும் நிலைக்குத் ‘தள்ளப்பட்டார்’ என்ற நிலை உருவாகிவிடுகிறது. பாரவோன் மன்னன் போல. அவனுடைய உள்ளம் இறுக இறுக, ஒரு கட்டத்தில் அவன் விரும்பினாலும் அவன் நல்லவனாக இருக்க முடிவதில்லை. முதலில் நாம் கட்டளையிடுவது போலத் தொடங்குகிறது பாவச் செயல். ஆனால், காலப் போக்கில் அது நமக்குக் கட்டளையிடுகிறது. இதையே அகுஸ்தினார், ‘பழக்கம் கட்டுப்படுத்தப்படாத போது தேவையாக மாறுகிறது’ என்கிறார்.
ஆ. ‘ஆபிரகாமே எங்கள் தந்தை’
முதல் ஏற்பாட்டில் ஆபிரகாமை ‘நம்பிக்கையின் தந்தை’ என இஸ்ரயேலர் அறிவித்தனர். இஸ்ரயேலரின் இனம் யாக்கோபில் தோன்றினாலும், அவர்கள் நம்பிக்கையில் தங்களுடைய தந்தையாக நினைப்பது ஆபிரகாமையே.
ஆனால், இயேசு இதிலிருந்த பொய்யையும் சுட்டிக்காட்டினார். நம்பிக்கையின் தந்தையின் பிள்ளைகளாக இருந்துகொண்டு நம்பிக்கை இல்லாமல் இருப்பது எப்படி? என்று கேட்கின்றார். மேலும், இயேசுவைக் கொல்ல அவர்கள் முயன்றதால் அவர்கள் ஆபிரகாமைப் போல இல்லாமல் தங்களின் முற்கால மண்ணகத் தந்தையர்போல இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாறாக, அவர்கள் தங்களின் அடையாளங்கள் என்று நினைத்த இரண்டு வரையறைகளையும் உடைக்கின்றார் இயேசு.
இந்த நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
‘அடையாளம்’ நமக்கு ஆட்டோமேடிக் வாழ்வைத் தந்துவிடாது. நான் ‘கிறிஸ்தவர்,’ நான் ‘அருள்பணியாளர்,’ நான் ‘இப்படி,’ நான் ‘அப்படி’ என்று நாம் வைத்திருக்கும் வரையறைகள் வெளிப்புறக் கொண்டாட்டமாக இருந்துகொண்டு, நம்மை உள்புறத்தில் அழிப்பவையாகவும் இருக்கும் அபாயம் இருக்கிறது. ஆக, அடையாளங்களை முழுமையாக ஏற்று வாழ்ந்து அதன்படி நடக்கும்போதுதான் அவை வாழ்வைத் தர முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில் நெபுகத்னேசர் தன் தெய்வங்களை வணங்குமாறு மூன்று இளைஞர்களுக்குக் கட்டளையிட அவர்கள் மறுக்கின்றனர். எரிகிற தீச்சூளையில் தள்ளப்பட்டாலும் எதிர்சான்றாக நிற்கின்றனர்.
மேலும், இயேசு தன் வாழ்வில் எப்போதும் தக்க வைத்துக்கொண்ட ஒரு மேன்மையான பண்பு ‘கட்டின்மை’ அல்லது ‘விடுதலை.’ மற்றவர்களும் தங்களுடைய கட்டின்மை அல்லது விடுதலையை அனுபவிக்க வேண்டும் என்றும், அதை மேன்மையாகக் கருதிப் போற்ற வேண்டும் என்றும், ஒருவர் மற்றவரின் விடுதலையை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
பெத்சதா குளத்தருகில் 38 ஆண்டுகளாகக் கிடந்த உடல்நலமற்றவருக்கு உடல்சார்ந்த விடுதலை அளிக்கின்றார் (யோவா 8). மெசியா என்பது அரச நிலை என்று நினைத்த தன் சீடர்களிடம் மெசியா என்பது துன்புறும் நிலை என்று விளக்கியதன் வழியாக அவர்களுக்கு அறிவுசார்ந்த விடுதலை அளிக்கின்றார். பாவிகளோடும் வரி தண்டுபவரோடும் உணவருந்தியதன் வழியாக அவர்களும் சமத்துவத்தின் மக்கள் என உணர்த்தி, உணர்வுசார் விடுதலைக்கு அனைவரையும் அழைக்கின்றார். ‘ஆனால் தேவையானது ஒன்றே!’ என்று மார்த்தாவை ஆன்மிக விடுதலைக்கு அழைக்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் உடல்சார் கட்டுகளோடு இருந்த சாத்ராக்கு, மேசாக்கு, மற்றும் ஆபேத்நெகோ என்னும் மூன்று இளவல்களை ஆண்டவராகிய கடவுள் வியத்தகு முறையில் விடுவிக்கின்றார்.
இன்று நான் கட்டின்மையை மேன்மையாகப் போற்றுகின்றேனா?
குறிப்பாக, என் உறவுநிலையில் மற்றவரின் கட்டின்மை அல்லது சுதந்திரத்தை மதிக்கிறேனா?
எந்த நிலையில் நான் அடிமையாக இருக்கிறேன்?
என் அடிமை நிலையிலிருந்து என்னை விடுவிக்குமாறு நான் இறைவனை வேண்டுகிறேனா?
எனக்கு விடுதலை தருகின்ற உண்மையாகிய இயேசுவை நான் ஏற்கிறேனா?
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: