இன்றைய இறைமொழி
சனி, 5 அக்டோபர் 2024
பொதுக்காலம் 26-ஆம் வாரம், சனி
புனித மரிய பவுஸ்தினா
யோபு 42:1-3, 5-6, 12-17. லூக்கா 10:17-24
மகிழுங்கள்
கடவுள் யோபுவிடம் அனைத்தையும் திருப்பித் தருகிறார். திருத்தூதர்கள் தங்கள் பணி முடிந்து இயேசுவிடம் திரும்பி வருகிறார்கள்.
இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் ‘சுபம்’ என்று முடிகிறது. யோபு கடவுளுடன் உரையாடும் பகுதி நிறைவு பெறுகிறது. இறுதியில் இழந்த அனைத்தையும் யோபு இரு மடங்காகப் பெற்றுக்கொள்கின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவால் பணிக்கு அனுப்பப்பட்ட சீடர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பி வருகின்றனர். அவர்களுடைய மகிழ்ச்சி கண்டு இயேசுவும் தன் வானகத் தந்தையைப் புகழ்கின்றார்.
யோபுவின் வாழ்க்கையில் அவருக்கு எல்லாம் திரும்பக் கிடைத்தது போல எல்லாருக்கும் திரும்பக் கிடைப்பதில்லை. சிலர் தங்கள் வாழ்வில் துன்பங்கள் மட்டுமே அனுபவித்து – தாங்கள் செய்யாத தவறுக்காக – புன்னகையுடன் மறைந்து போகவே செய்கிறார்கள். வாழ்க்கையின் இறுதி திரைப்படத்தின் இறுதி போல சுபம் என்று இல்லை என்றாலும், அந்த நேரத்திலும் புன்முறுவல் செய்வதற்கு நிறையத் துணிச்சலும் நேர்முகமான பார்வையும் தேவை.
தொடக்கநூல் யோசேப்பு, ஞானநூல் யோபு ஆகியோர் தாங்கள் இழந்தவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். சாம்பல் நிலையிலிருந்து மேன்மை நிலைக்கு உயர்கிறார்கள். இவர்களின் உயர்வு நமக்கு எதிர்நோக்கு தருகிறதே தவிர, உத்திரவாதம் தருவதில்லை.
‘உண்மையில் நான்தான் புரியாதவற்றைப் புகன்றேன்’ என்பதே யோபுவின் இறுதிச் சொற்களாக இருக்கின்றன. வாழ்வின் புரியாத பிடிபடாத எதார்த்தங்களை நாம் எப்படியாவது புரிந்துகொள்ள விழைகின்றோம். ஆனால், நாம் காணும் விடைகள் மேலும் கேள்விகளை எழுப்புகின்றன. அல்லது விரல்களிடையே தண்ணீர் போல நம் கைகளில் நிற்காமல் மறைந்துவிடுகின்றன.
யோபு கொண்டிருக்கும் இதே மனநிலை வந்துவிட்டால் வாழ்வின் எந்தப் பிரச்சினைகளையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்.
நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் சீடர்கள் பணி முடித்துத் திரும்ப வருகின்றார்கள். பணிக்கு அவர்களை அனுப்பும்போது, ‘எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம். யாருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்’ எனச் சொல்லி அனுப்புகின்றார். இதை வாசிக்கும்போது சீடர்களை நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. அதாவது, எல்லாம் பேக்கிங் செய்து தயாராக இருக்கிறார்கள். அப்போது அங்கே வருகிற இயேசு, ‘இது என்ன? அது என்ன? இது எதற்கு? அது எதற்கு? இதை வைத்துவிட்டுப் போங்கள்!’ என்று சொல்வதுபோல கற்பனை செய்து பாருங்களேன். சீடர்கள் இயேசுவிடம் எதிர்கேள்வி கேட்கவில்லை என்றாலும், தங்களுக்குள்ளே புலம்பியிருப்பார்கள், முணுமுணுத்திருப்பார்கள். ‘இது இல்லாம என்ன செய்ய முடியும்? இது இல்லாம என்னால இருக்க முடியாது!’ என்று கூட நினைத்திருப்பார்கள். ஆனால், தங்கள் பணி முடிந்து வரும்போது தங்களிடம் எதுவும் குறைவுபட்டதாக அவர்கள் கருதவே இல்லை. அவர்கள் இதுவரை சுமந்த சுமைகள் எல்லாம் தேவையற்ற சுமைகளாகவே அவர்களுக்குத் தெரியத் தொடங்குகின்றன. தங்களை அறியாமலேயே ஏதோ ஒரு சுதந்திரமும் கட்டின்மையும் தங்களைத் தழுவிக்கொண்டதை அவர்கள் உணர்கிறார்கள்.
இயேசுவின் அறிவுரைகள் அவர்களுக்குப் புரியவில்லை என்றாலும் அவரின் சொற்களுக்குச் சராணகதி அடைகின்றனர். விளைவு, மகிழ்ச்சியும் மனச்சுதந்திரமும் அடைகின்றனர்.
குழந்தைகள் தங்களுக்குப் புரியாதவற்றை புரியவில்லை என்றே ஏற்றுக்கொள்கின்றனர். வயது வந்த நாம்தான் புரியாதவற்றைப் புரிந்துகொள்ள மெனக்கெடுகிறோம். அல்லது புரிந்துகொண்டதுபோல நடிக்கிறோம்.
புரியாதவை புரியாதவைகளாக இருக்கும்போதும் மகிழ்ச்சி கிடைக்கிறது எனக் கற்றுக்கொடுக்கிறது இந்த நாள்.
புனித மரியா பவுஸ்தினா
இறைஇரக்கத்தின் திருத்தூதர் என வழங்கப்படுகிற புனித மரிய பவுஸ்தினாவுக்குக் காட்சி தந்த இயேசு கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் உலகுக்கு அறிவிக்கிறார். கடவுளுடைய இரக்கம் நம் எல்லாப் பாவங்களையும்விட மேன்மையாக இருக்கிறது.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ கடவுளிடம் திரும்பி வருதலில் தங்கள் மகிழ்ச்சியைக் கண்டடைகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 217)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: