இன்றைய இறைமொழி
புதன், 6 நவம்பர் 2024
பொதுக்காலம் 31-ஆம் வாரம், புதன்
பிலிப்பியர் 2:12-18. திருப்பாடல் 27:1, 14, 13-14. லூக்கா 14:25-33
மகிழ்ச்சி – ஒளி – சீடத்துவம்
‘கடவுள் நம் ஒளியாக இருப்பதால் அவரைப் பின்பற்றும்போது உலகில் ஒளிரும் சுடர்களாக நாம் திகழ்கிறோம்.’
முதல் வாசகச் சிந்தனை (பிலி 2:12-18)
(அ) அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழையுங்கள். தாழ்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் நம் நம்பிக்கைப் பயணத்தை மேற்கொள்ளத் தூண்டுகிற பவுல், கடவுள்தாமே நம் வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் செயலாற்றுகிறார் என்பதை அறிந்துகொள்ளச் சொல்கிறார்.
(ஆ) உலகில் ஒளிரும் சுடர்களாகத் திகழுங்கள். முணுமுணுக்காமல், வாதாடாமல் இருக்கிற மனநிலை நம் உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்துவதோடு, அமைதியற்ற உலகுக்கு நாம் அமைதியையும் மகிழ்ச்சியையும் வழங்கச் செய்கிறது. நம் உள்ளத்தின் அமைதியே நம் ஒளி.
(இ) பலியாகப் படைப்பதில் மகிழ்ச்சி. தன் தியாகங்களை கடவுளுக்கு உகந்த பலியாகக் கருதுகிறார் பவுல். நம் வாழ்வில் எதிர்வரும் துன்பங்களை நாம் தழுவிக்கொள்ளும்போது அவை கடவுளின் முன்னிலையில் வழிபாட்டுச் செயல்களாக மாறுகின்றன.
பதிலுரைப் பாடல் சிந்தனை (திபா 27:1, 14, 13-14)
(ஆ) கடவுளே நம் ஒளியும் மீட்பும். ஆண்டவரைத் ஒளியும் மீட்பும் என அறிக்கையிடுகிற ஆசிரியர், கடவுள்தரும் பாதுகாப்பை நாம் சென்றடையத் தூண்டுகிறார். வாழ்வின் அச்சங்களுக்கும் உறுதியற்ற நிலைகளுக்கும் நடுவே கடவுள் ஒளிர்கிறார்.
(ஆ) ஆண்டவரின் திருமுன்னிலையை நாடுதல். ஆண்டவரின் இல்லத்தில் குடிகொள்வதே தன் வாழ்வின் ஒரே விருப்பம் எனப் பாடுகிறார் ஆசிரியர். கடவுளோடு நாம் கொள்ளும் நெருக்கமே நமக்குப் பெரிய சொத்து, அதுவே அமைதியின் ஊற்று.
(இ) காத்திருத்தலில் வலிமையும் பொறுமையும். எதிர்நோக்குநிறை உள்ளத்துடன் ‘ஆண்டவருக்காகக் காத்திருக்க’ அழைக்கிறார் ஆசிரியர். ஆண்டவர் அவருடைய நேரத்தில் செயலாற்றும்வரை பொறுமை காத்தல் நலம்.
நற்செய்தி வாசகச் சிந்தினை (லூக் 14:25-33)
(அ) பிளவுபடாத அர்ப்பணம்: அனைவருக்கும், அனைத்துக்கும் மேலாக ஆண்டவரை முதன்மைப்படுத்துவதே சீடத்துவம் என மொழிகிற இயேசு, பிளவுபடா அர்ப்பணமும், அந்த அர்ப்பணத்தால் வரும் மாற்றமும் அவசியம் என்கிறார்.
(ஆ) ஆய்ந்தறிதல்: சீடத்துவம் என்பது கோபுரம் கட்டுதல் போன்றது. கையிருப்பு, வேலையின் நகர்வு ஆகியவற்றை ஆய்ந்தறிந்து, சவால்களை எதிர்கொள்ளும் துணிவு பெற்று நகர்தலே சீடத்துவம்.
(இ) அனைத்தையும் இழத்தல்: வெற்றி ஒன்றையை இலக்காகப் பெற்றிருக்கிற அரசன், அதை அடைவதற்கான அனைத்து முயற்சிகளிலும் – தன்னையே இழப்பது என்றாலும் – ஈடுபடுகிறான்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ கோபுரம் கட்டுகிறவர்போலத் திட்டமிடுகிறார்கள், போருக்குச் செல்லும் அரசன் போல தங்கள் ஆற்றல்களை ஒருமுகப்படுத்துகிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 241).
அருள்திரு யேசு கருணாநிதி (# Sower)
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: