• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

மனமாற்றத்தின் அவசரமும் இறைப் பொறுமையும்! இன்றைய இறைமொழி. ஞாயிறு, 23 மார்ச் ’25.

Sunday, March 23, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Lenten Season Daily Catholic Lectio இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 23 மார்ச் ’25
தவக்காலம் மூன்றாம் ஞாயிறு
விடுதலைப் பயணம் 3:1-8, 13-15. 1 கொரிந்தியர் 10:1-6, 10-12. லூக்கா 13:1-9

 

மனமாற்றத்தின் அவசரமும் இறைப் பொறுமையும்!

 

தவக்காலத்தின் முதன்மையான அழைப்புகளுள் ஒன்று ‘மாற்றம்’ அல்லது ‘மனமாற்றம்.’ இன்றைய நற்செய்தி வாசகத்தில், இதன் அவசியத்தை இயேசுவே மொழிகிறார்: ‘மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்!’

 

இயேசுவிடம் வருகிற மக்கள் சிலர், ‘பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான்!’ என்ற செய்தியை அறிவிக்கிறார்கள். இந்தச் செய்தியின் பின்னால் இரண்டு கருத்துருகள் உள்ளன:

 

(அ) இறந்தவர்கள் அனைவரும் பாவிகள். அதாவது, நீடிய ஆயுள் என்பது கடவுள் நல்லார்க்குத் தரும் பரிசு. குறுகிய காலத்தில், குறைந்த வயதில் ஒருவர் இறக்க நேரிடுகிறது என்றால் அது அவர்களுடைய பாவத்துக்குக் கிடைத்த தண்டனை. நோய், இளவயதில் இறப்பு, உடல் குறைபாடு ஆகியவை பாவத்தால் விளைபவை என்பது அன்றைய புரிதல். எடுத்துக்காட்டாக, பிறவிலேயே பார்வையற்ற ஒருவரைப் பற்றி இயேசுவிடம் சீடர்கள், ‘ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?’ என்று கேட்கிறார்கள் (காண். யோவா 9:2).

 

(ஆ) நாம் செலுத்துகிற பலியினால் பயன் ஒன்றுமில்லை. செய்தியின்படி, பிலாத்து கலிலேயரைக் கொல்லும்போது அவர்கள் பலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கோவிலில் இருப்பதால், அல்லது பலி செலுத்துவதால் கடவுள் அவர்களைக் காப்பாற்றியிருக்கலாமே? கடவுளின் ‘இயலாமையை’ அல்லது ‘இல்லாமையை’ மறைமுகமாக இயேசுவுக்கு அறிவிக்கிறார்கள் வந்தவர்கள். வாழ்வில் நடப்பபை நடக்கத்தான் செய்யும் என்ற இத்தகைய எதார்த்தப் புரிதலை நாம் சபை உரையாளர் நூலிலும் வாசிக்கிறோம்: ‘பலி செலுத்துபவர்களுக்கும் பலி செலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும்’ (சஉ 9:2).

 

தம் சமகாலத்தவரின் மேற்காணும் புரிதல்களை மாற்றுகிறார் இயேசு. பாவம், விதி என்னும் கருத்துருகளை சற்றே மாற்றி ‘மனமாற்றத்தின் அவசரத்தை’ எடுத்துரைக்கிறார்.

 

‘மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்!’ என எச்சரிக்கிற இயேசு, சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டு பேரைக் கொன்ற நிகழ்வை எடுத்துரைக்கிறார். மனிதர்கள் கையால் கொல்லப்படுபவர்கள் பாவிகளும் அல்ல, இயற்கைச் சீற்றத்தாலும் விபத்துகளாலும் இறப்பவர்கள் குற்றவாளிகளும் அல்ல. இவை அனைத்தும் மற்றவர்களுக்கு ஒரு பாடம். என்ன பாடம்?

 

வாழ்க்கை குறுகியது. நம் காலம் குறுகியது. எதுவும் எப்போதும் நமக்கு நேரிடலாம் என்பதால் மனமாற்றம் பெற்றிருப்பது அவசியம். கடவுளை நோக்கி நம் உள்ளங்களைத் திருப்புவது அவசியம்.

 

நற்செய்தி வாசகத்தின் இரண்டாவது பகுதியில், திராட்சைத் தோட்டத்தில் நடப்பட்ட அத்திமரம் எடுத்துக்காட்டை முன்மொழிகிறார் இயேசு. மரம் கனி தரவில்லை. மூன்று ஆண்டுகளாக அந்த மரத்தில் கனிகள் எதுவும் இல்லை. தலைவருக்கு அதைப் பார்க்கும்போதெல்லாம் ஏமாற்றமாக இருக்கிறது. அந்த மரம் நிறைய ஊட்டத்தை எடுத்தாலும், தண்ணீரை எடுத்துக்கொண்டாலும், பசுமையாக இருந்தாலும் அது கனிதரவில்லை. அது தன் முழு இயல்பையும் வளர்ச்சியையும் எட்டவில்லை.

 

தலைவரும் தோட்டத் தொழிலாளரும் உரையாடுகிறார்கள்.

 

தலைவர் தோட்டக்காரரிடம், ‘வெட்டிவிடும் இதை!‘ என்கிறார்.

 

தோட்டக்காரர் தலைவரிடம், ‘விட்டுவையும் இதை!‘ என்கிறார்.

 

மேற்காணும் இரண்டு கட்டளைச் சொற்களும், இரண்டு வகையான இறையியலை முன்மொழிகின்றன. தலைவர் என்பவர் இங்கே கடவுள் அல்லது முதல் ஏற்பாட்டுக் கடவுள். தோட்டக்காரர் என்பவர் இயேசு. முதல் ஏற்பாட்டுக் கடவுள், ‘மனம் மாறாவிட்டால் அழி!’ என எச்சரிக்கிறார். இரண்டாம் ஏற்பாட்டு இயேசு, அவர்கள்மே; இரக்கம் கொள்கிறார். அவர்களுடைய மனமாற்றத்துக்காகப் பொறுமை காக்கிறார்.

 

கடவுள் பொறுமையாக இருக்கிறார் என்பதற்காக நாம் மனமாற்றத்தைத் தள்ளிப்போடத் தேவையில்லை. மனமாற்றத்தில் நாம் அவசரமாக. விரைந்து செயல்பட வேண்டும்.

 

இன்றைய முதல் வாசகத்தில், மோசேயின் அழைப்பு நிகழ்வை வாசிக்கிறோம். ‘மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்துக்கொண்டிருந்த’ மோசேயின் வாழ்க்கைப் பாதையைத் திருப்புகிறார் ஆண்டவராகிய கடவுள். ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று தம்மை அறிமுகம் செய்கிற கடவுள், மக்களோடு தாம் கொண்டிருக்கிற நெருக்கத்தை எடுத்துரைக்கிறார்: ‘என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அவர்கள் குரலைக் கேட்டேன். அவர்களின் துயரங்களை அறிந்தேன். நான் இறங்கி வந்தேன்!’

 

கடவுள் தம் மக்களைக் காண்கிறார், அவர்கள் குரலைக் கேட்கிறார், அவர்களை அறிந்தவராக இருக்கிறார். மேலும், கீழே இறங்கி வருகிறார். மோசேயின் மிதியடிகள்கூட கடவுளைத் தூரமாக்கிவிடும் என்பதற்காக, அவற்றைக் கழற்றச் சொல்கிறார் கடவுள். கடவுளுடைய நிலமும் மாந்தர்களின் காலடிகளும் நெருக்கமாக இருக்க வேண்டும் எ;னபது கடவுளின் அழைப்பு.

 

கடவுள் நம்மிடம் இறங்கி வருவதால், நமக்கு நெருக்கமாக வருவதால் நாமும் அவரிடம் நெருக்கமாகச் செல்ல வேண்டும்.

 

இரண்டாம் வாசகத்தில், கொரிந்து நகர இறைமக்களுக்கு எழுதுகிற பவுல், முதல் ஏற்பாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு முன்னடையாளமாகவும் அறிவுரையாகவும் தரப்பட்டுள்ளன என்கிறார். ஆக, நமக்கே அனைத்தும் நேர வேண்டும் என்று காத்திருப்பதற்குப் பதிலாக, மற்றவர்களுக்கு நடப்பவற்றை நமக்கான எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு நம் வாழ்க்கையை மாற்ற வேண்டும்.

 

இன்றைய ஞாயிறு நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன?

 

(அ) மனமாற்றத்துக்கான அவசரம்

 

நமக்கு அழிவு அல்லது இறப்பு எந்த நேரத்திலும் வரலாம், யார் வழியாகவும் வரலாம், நாட்டின் தலைவர்கள் வழியாகவும் விபத்துகள் வழியாகவும் வரலாம்! வாழ்க்கை குறுகியது, கட்டுக்குள் வைக்க இயலாதது என்பதால், நம் வாழ்க்கையை நாம் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

 

(ஆ) அறிகுறிகளை அடையாளம் காணுதல்

 

நமக்கு நடப்பவை, நம்மைச் சுற்றி நடப்பவை பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியம். மோசேயின் கண்களுக்குத் தெரிகிற எரிகிற முட்புதர் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. மோசேயின் முன்பாக நின்றுகொண்ட பேசியதுபோல கடவுள் இன்று நம் முன் நின்று பேசுவதில்லை. இருந்தாலும் அறிகுறிகள் வழியாக நாம் அவருடைய செய்தியை அறிந்துகொள்ள முடியும். தோட்டக்காரர் அத்திமரத்துக்கு இரண்டாம் வாய்ப்பை வழங்கியதுபோல, கடவுள் இரண்டாம் வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறார்!

 

(இ) பார்வை மாற்றம்

 

இயேசுவின் சமகாலத்தவர் கொண்டிருந்த குறுகிய மனநிலை போல – கடவுள் நம்மைத் தண்டிப்பார், நம் வாழ்வில் நமக்கு நிகழும் அனைத்து எதிர்மறை நிகழ்வுகளும் கடவுள் நமக்குத் தரும் தண்டனை போன்ற எண்ணங்கள் கொண்டிருத்தல் – நாம் கொண்டிருத்தல் கூடாது. ‘வெட்டிவிடும்!’ என்று சொல்கிற கடவுள் அல்ல நம் கடவுள். மாறாக, ‘விட்டு வையும்!’ என்று சொல்லி பொறுமை காப்பவர். நாமும் நம் உறவுநிலைகளில் கடவுள்போல பொறுமை காத்தல் நலம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: