இன்றைய இறைமொழி
புதன், 27 நவம்பர் 2024
பொதுக்காலம் 34-ஆம் வாரம், புதன்
திருவெளிப்பாடு 15:1-4. திருப்பாடல் 98. லூக்கா 21:12-19
மனவுறுதியுடன் நிலைத்திருங்கள்!
‘வெற்றியாளர்கள் விலகுவதில்லை. விலகுபவர்கள் வெற்றியடைவதில்லை.’ மனவுறுதி, விடாமுயற்சி, பொறுமை, உடனடியான செயல்பாடு ஆகியவற்றால்தான் வெற்றி கிடைக்கிறது. நம் உடல் சார்ந்த இயல்பு வலியையும் அசௌகரியத்தையும் வெறுக்கிறது. ஆனால், ஆன்மிக இயல்போ, வலி மற்றும் துன்பம் வழியாகவே வெற்றியும் வளர்ச்சியும் ஆழமான வாழ்க்கை இலக்கும் சாத்தியம் என்கிறது. சவால்களும் துன்பங்களும் நம் தகைமையை வரையறுக்கின்றன, எதிர்த்தகைவை நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன. துன்பத்தில் மனவுறுதியுடன் நிலைத்திருக்க வேண்டுமெனில் நாம் எதிர்நோக்கை வளர்க்க வேண்டும். நம்பிக்கையில் வேரூன்றி நிற்கும் எதிர்நோக்கு நாம் நிற்கவும், தொடர்ந்து நடக்கவும், இறுதியில் வெற்றியடையவும் துணைபுரிகிறது.
முதல் வாசகச் சிந்தனை (திவெ 15:1-4)
(அ) கடவுளின் வல்ல செயல்களும் வழிபாடும்: வெற்றிபெற்ற புனிதர்கள் கடவுளின் வல்ல செயல்களைப் புகழ்ந்து பாடுகிறார்கள். சவால்கள் நிறைந்த நேரங்களில் கடவுளின் வல்லமையையும் அவருடைய பிரமாணிக்கத்தையும் நாம் நினைவுகூர்ந்து கொண்டாடுதல் வேண்டும்.
(ஆ) பிரமாணிக்கம் வெற்றிக்கு வழிவகுக்கிறது: நம்பிக்கையில் நிலைத்திருக்கும்போது நாம் வெற்றி பெறுகிறோம். நம்பிக்கைப் பார்வையே நம் அர்ப்பணத்தை வலுப்படுத்துகிறது.
(இ) கடவுளின் நீதி: ஆட்டுக்குட்டியின் பாடலும் மோசேயின் வெற்றிப் பாடலும் கடவுளின் நீதியான செயல்களை எடுத்துரைக்கின்றன. காத்திருக்கிற ஒருவரே கடவுளின் நீதியைக் கண்டுகொள்கிறார்.
பதிலுரைப் பாடல் சிந்தனை (திபா 98)
(அ) ஆண்டவருக்குப் புதியதொரு பாடல்: கடவுளின் கடந்தகால வல்ல செயல்களை நினைவுகூரும்போது, அவர் இன்று நம்மிடையே ஆற்றும் செயல்களும் நினைவுக்கு வருகின்றன. நம் உள்ளம் நன்றியாலும் மகிழ்ச்சியாலும் துள்ளுகிறது.
(ஆ) கடவுளின் மீட்பை அனைவருக்கும் அறிவித்தல்: கடவுளின் மீட்பு அனைத்து நாடுகளுக்கும் உரியது. அவரின் வல்லமையை அனைவருமே அனுபவிக்க முடியும். அனுபவிக்கும் அனைவருமே அதை மற்றவர்களுக்கு அறிவிக்க முடியும்.
(இ) கடவுளின் நீதியான ஆட்சியில் மகிழ்தல்: கடவுளின் நீதி நல்லாருக்கு வெற்றியாகவும் பொல்லாருக்கு அழிவாகவும் அமைகிறது.
நற்செய்தி வாசகச் சிந்தனை (லூக் 21:12-19)
(அ) துன்ப வேளையில் பிரமாணிக்கம்: துன்பங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் நேரத்தில் தம் உடனிருப்பை வாக்களிக்கிறார் இயேசு. நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், துன்பமான பொழுதுகளில் அவருடைய உடனிருப்பைக் கண்டுகொள்ளவும் வேண்டும்.
(ஆ) சவால்கள் வழி சான்று பகர்தல்: நாம் எதிர்கொள்ளும் சவால்கள் கடவுளின் அன்புக்கும் நீதிக்கும் சான்று பகரும் வாய்ப்புகளாக அமைகின்றன.
(இ) மனவுறுதியும் மீட்பும்: மனவுறுதியுடன் நிலைத்து நிற்பவரே மீட்பைக் கண்டுகொள்கிறார். பொறுமையும் காத்திருத்தலும் எதிர்நோக்கும் மனவுறுதியை வளர்க்கின்றன.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ எதிர்நோக்கு என்னும் ஒளியை அணையாது காத்துக்கொள்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 259).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: