இன்றைய இறைமொழி
புதன், 19 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 6-ஆம் வாரம் – புதன்
தொடக்கநூல் 8:6-13, 20-22. திருப்பாடல் 116. மாற்கு 8:22-26
மனிதரைப் பார்க்கிறேன்!
‘மெசியா வெளிப்பாடு’ என்னும் கருத்துரு அடிப்படையில் மாற்கு நற்செய்தியை நாம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: (அ) யார் இந்த இயேசு? (மாற் 1:1-8:26). (ஆ) இயேசுவே மெசியா (மாற் 8:27-33). (இ) இயேசு எப்படிப்பட்ட மெசியா? (மாற் 8:34-16:8).
இந்த வகையில் மாற்கு நற்செய்தியின் முதல் பகுதி இன்றைய வாசகப் பகுதியில் நிறைவு பெறுகிறது. பார்வையற்ற நபர் ஒருவர் பார்வை பெறும் நிகழ்வைப் பதிவு செய்கிறார் மாற்கு. பெத்சாய்தா என்னும் ஊரில் இந்த நிகழ்வு நடக்கிறது. இந்த நிகழ்வுக்கும் இயேசுவின் மற்ற வல்ல செயல்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால், மற்ற வல்ல செயல்களில் இயேசு செயலாற்றும்போது ஒரே முறையில் புதுமை அல்லது அற்புதம் நடந்தேறுகிறது. ஆனால், இங்கே இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது. பார்வையற்ற நபர் முதலில் அரைகுறையாகப் பார்க்கிறார். இரண்டாவது முழுமையாகப் பார்க்கிறார்.
தொடர்ந்து வரக்கூடிய பகுதியில், இயேசுவே இறைமகன் என்று அறிக்கையிடுகிறார் பேதுரு. ஆக, இயேசு யார் என்பது மக்களுக்கும் சீடர்களுக்கும் தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறது என நமக்கு உணர்த்துகிறார் மாற்கு. இந்தப் பின்புலத்தில் பார்க்கும்போது, இந்த நிகழ்வை ஒரே நேரத்தில் வல்ல செயல் என்றும், உருவகம் அல்லது உவமை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
‘ஏதாவது தெரிகிறதா?’ என்னும் இயேசுவின் கேள்விக்கு, ‘மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்கள்போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்’ என்று பதில் கூறுகிறார் பார்வையற்ற நபர். நபரால் முழுமையாகக் காண இயலவில்லை. இறுதியாக, அவர் முழுமையாகக் காண்கிறார்.
பார்வையற்ற நபரின் விடையை மக்கள் மற்றும் சீடர்களின் சொற்களாகப் பார்த்தால், ‘நாங்கள் இயேசுவை மனிதர் எனப் பார்க்கிறோம். ஆனால், அவர் மெசியா போலத் தெரிகிறாhர்.’
மங்கிய பார்வையிலிருந்து தெளிவான பார்வைக்குக் கடந்து செல்கிறார் பார்வையற்ற நபர்.
இன்றைய முதல் வாசகத்தில், பெருவெள்ளத்திற்குப் பிறகு நோவா கரையைக் காண்கிறார். ஆண்டவராகிய கடவுள் நோவாடன் உடன்படிக்கை செய்து அதன் அடையாளமாகத் தன் வில்லை (வானவில்லை) வைக்கிறார். ‘வானவில்’ உருவான காரணக் கதையாடல் என இந்நிழ்வை எடுத்துக்கொண்டாலும் இன்னொரு பக்கம் ஆண்டவராகிய கடவுள் தம் உடனிருப்பை மக்களுக்கு வழங்குகிறார்.
மேற்காணும் இரண்டு வாசகங்களையும் இணைத்துப் பார்த்து நாம் கற்கும் பாடங்கள் எவை?
(அ) கடவுளின் இரக்கம்
கடவுள் பெருவெள்ளத்தால் இந்த உலகை அழித்தாலும் அவர் தம் இரக்கத்தால் மனிதர்களையும் படைக்கப்பட்ட பொருகள் அனைத்தையும் நினைவுகூர்கிறார். அவருடைய இரக்கமே மேலோங்கி நிற்கிறது. தாம் யார் என்பதை மக்கள் கண்டுணரவில்லை என்றாலும், அவர்கள்மேல் இயேசு கோபம் கொள்ளவில்லை. தம் இரக்கத்தால் அவர்களைத் தம்மவர்களாக ஏற்றுக்கொள்கிறார்.
(ஆ) கடவுள் பார்வை
நம் வாழ்க்கை நிகழ்வுகளின் ஊடாகக் கடவுளைக் காணும்போது அவரை நம்மை முழுமையாகக் காண இயலாது. அவரால் தொடப்படும்போதே – பார்வையற்ற நபர் போல – நாம் முழுiமாகப் பார்வை பெறுகிறோம். ஆக, அவர் நம்மைத் தொடுமாறு இறைவேண்டல் செய்வோம்.
(இ) நடக்கும் மரங்கள்
நாம் பல நேரங்களில் ‘மனிதர்களாக அல்லாமல்’, ‘நடக்கும் மரங்களாக’ – உணர்வு, பதிலுணர்வு இன்றி நடக்கிறோம், நகர்கிறோம், வாழ்கிறோம். நம் குடும்பங்களில், பணித்தளத்தில் நம்மை முழுமையாக உணர்ந்து வாழாதபோது, நமக்கு அருகிலிருப்பவர்கள் பற்றிய சிந்தனை நம்மில் தோன்றாதபோது நாம் நடக்கும் மரங்களாகவே இருக்கிறோம்.மரங்களாக இருக்கும் நிலை மறைய வேண்டும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: