இன்றைய இறைமொழி
சனி, 1 மார்ச் ’25
பொதுக்காலம் 7-ஆம் வாரம் – சனி
சீராக்கின் ஞானம் 17:1-15. திருப்பாடல் 103. மாற்கு 10:13-16
மனித மாண்பு பேணுதல்
எருசலேம் ஆலயத்தை இயேசு தூய்மைப்படுத்தும் நிகழ்வில் அவர் கோபப்பட்டதை நாம் அனைவரும் நினைவுகூர்வோம். இயேசு கோபம் கொள்கிற இன்னொரு நிகழ்வை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். தம்மிடம் கொண்டு வரப்படுகிற குழந்தைகளை அதட்டுகிற தம் சீடர்கள்மேல் கோபம் கொள்கிறார் இயேசு. ‘சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள்!’ என்பது இயேசுவின் அழைப்பாக இருக்கிறது.
இயேசுவின் சமகாலத்தில், ரபிக்கள் பொதுவிடங்களில் பெண்களிடமும் குழந்தைகளிடமும் உரையாடக் கூடாது என்ற வழக்கம் இருந்தது. இதன் பின்புலத்தில்தான் இயேசுவிடம் குழந்தைகள் கொண்டுவரப்படுவதை சீடர்கள் தடுக்கிறார்கள். பன்னிரண்டு வயது வரையிலான குழந்தைகள் ‘பொருள்களாகவே’ கருதப்பட்டார்கள்.
தம்மிடம் அவர்களை வருமாறு அழைப்பதன் வழியாக, குழந்தைகளின் மாண்பை உயர்த்துகிறார் இயேசு. மேலும், இறையாட்சியை சிறு குழந்தைகள்போல ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
நம்மைவிடச் சிறியவர்களை, குறிப்பாக, குழந்தைகளை இன்று நாம் எப்படி வரவேற்கிறோம்? நடத்துகிறோம்?
இன்றைய முதல் வாசகத்தில், மனிதர்களின் மாண்பு பற்றி எடுத்துரைக்கிறார் பென் சீரா. மனிதர்களை மற்ற உயிர்களிடமிருந்து குறிப்பாக விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவர்கள் கொண்டிருக்கிற விருப்புரிமையும் சிந்திப்பதற்காக அவர்கள் கொண்டிருக்கிற உள்ளமும் என்கிறார் ஆசிரியர். ஆறாவது அறிவான சிந்திக்கும் திறனும், ஏழாவது திறனாக கடவுளுக்குரிய பகுத்தறிவும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் மேன்மையை இது குறிப்பதோடு அவர்கள் கொண்டிருக்க வேண்டிய பொறுப்புணர்வையும் எடுத்துரைக்கிறது.
நாம் கொண்டுள்ள அறிவுத்திறனை எப்படிப் பயன்படுத்துகிறோம்? நமக்கு வழங்கப்பட்டுள்ள மேன்மையான அழைப்பின் வழியாக, படைப்பனைத்தின்மேலும் நாம் பொறுப்பாளர்களாக இருக்கிறோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: