இன்றைய இறைமொழி
வியாழன், 10 அக்டோபர் 2024
பொதுக்காலம் 27-ஆம் வாரம், வியாழன்
கலாத்தியர் 3:1-5. லூக்கா 11:5-13
மனித விடாமுயற்சியும் கடவுளின் பராமரிப்பும்
மனித விடாமுயற்சியும் கடவுளின் பராமரிப்பும் இன்றைய வாசகங்களின் மையக்கருத்தாக அமைகின்றன. மனித விடாமுயற்சி இறைவனில் வேரூன்றியுள்ளது என மொழிகிறார் பவுல். இறைவேண்டலில் நாம் கொண்டிருக்க வேண்டிய விடாமுயற்சியை இயேசு நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். கடவுளுடைய பராமரிப்பு அவருடைய ஆசீரை நமக்குப் பெற்றுத் தருகிறது.
(அ) நம்பிக்கையில் தொடர் வேரூன்றல்
கலாத்திய நகரத் திருஅவை இரண்டு பிரச்சினைகளை எதிர்கொண்டது. ஒன்று, புதிய நற்செய்தி அறிவிப்பு. பவுல் கலாத்திய நகரை விட்டு வந்தவுடன் அங்கே வருகிற மற்றொரு குழுவினர் புதிய நற்செய்தி ஒன்றை அறிவிக்கிறார்கள். இது அவர்கள் நடுவே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இரண்டு, விருத்தசேதனம் என்னும் செயல்பாடு வழியாகவே மீட்பு பெற முடியும் என்னும் விவாதம். இவ்விரண்டு பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு முயற்சி செய்கிற பவுல், சட்டம் சார்ந்த செயல்களில் அல்ல, மாறாக, நம்பிக்கையில் வேரூன்றி நிற்குமாறு அவர்களை அழைக்கிறார்.
(ஆ) இறைவேண்டலில் விடாமுயற்சி
இறைவேண்டலில் நம்பிக்கையாளர்கள் கொண்டிருக்க வேண்டிய விடாமுயற்சியை விளக்கிச் சொல்வதற்கு உவமை ஒன்று தருகிறார் இயேசு. நட்புக்காக அல்ல, மாறாக, தொந்தரவுக்காக பதில் தருகிறார் நண்பர். ஆனால், கடவுளுடைய பராமரிப்பு நமக்குப் பதிலிறுப்பு செய்வதற்கு எப்போதும் தயாராக இருக்கிறது.
(இ) நமக்கு நன்மை செய்யும் கடவுளின் பராமரிப்பு
உவமையைத் தொடர்ந்து இறைவேண்டல் பற்றிய விளக்கம் தருகிற இயேசு, கடவுளுடைய பராமரிப்பின் மேன்மையை எடுத்துரைக்கிறார். இவ்வுலகின் தந்தையர்களோடு வானகத் தந்தையை ஒப்பிடுகிறார் இயேசு. கேட்கவும், தேடவும், தட்டவும் நம்மை அழைக்கிறார்.
மனித விடாமுயற்சியும் கடவுளின் பராமரிப்பும் இணைந்து செல்லும்போது வல்ல செயல் நடந்தேறுகிறது.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ நம்பிக்கையிலும் இறைவேண்டலிலும் நிலைத்திருக்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 221)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: