இன்றைய இறைமொழி
செவ்வாய், 26 நவம்பர் 2024
பொதுக்காலம் 34-ஆம் வாரம், செவ்வாய்
திருவெளிப்பாடு 14:14-20. திருப்பாடல் 96. லூக்கா 21:5-11
மறுபக்கம்
உயரமாகவும் ஒய்யாரமாகவும் நின்றுகொண்டிருந்த எருசலேம் ஆலயத்தின் மறுபக்கத்தை – அழிவை – கண்டார் இயேசு. மறுபக்கத்தைக் காணக் கூடியவர்கள் – ஓர் இலையின், ஒரு புத்தகத்தின், ஒரு சுரூபத்தின், ஒரு நாற்காலியின், ஒரு மனிதரின் – ஞானம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அலைக்கழிக்கப்படுவதில்லை. மாறாக, அமைதியுடனும் தயார்நிலையிலும் இருக்கிறார்கள்.
முதல் வாசகச் சிந்தனை (திவெ 14:14-20)
(அ) கிறிஸ்து நீதியான நடுவர்: கூர்மையான அரிவாளுடன் காட்சியளிக்கிற கிறிஸ்து மீட்பராகவும் நீதியான நடுவராகவும் திகழ்கிறார். இறுதி அறுவடைக்க ஏற்றவாறு நம் வாழ்வை நாம் தகவமைத்துக்கொள்ள அழைக்கிறது இந்த வாசகம்.
(ஆ) மனமாற்றத்தின் அவசரம்: அறுவடைக்குத் தயாராக நிற்கும் பயிர்கள் தயார்நிலையையும் அவசரத்தையும் எடுத்துரைக்கின்றன. கடவுளை நோக்கி நாம் இன்றே திரும்புதல் வேண்டும்.
(இ) கடவுளின் இறையாண்மை: திராட்சைக் கனிகள் ஆலையில் சேகரிக்கப்படுகின்றன. கடவுள்தாமே அனைத்தின்மேலும் ஆட்சி செலுத்துகிறார்.
பதிலுரைப் பாடல் சிந்தனை (திபா 96)
(அ) வழிபாடு என்பது அனைவருக்குமான அழைப்பு: ஒட்டுமொத்த உலகமும் இறைவழிபாட்டுக்க அழைக்கப்படுகிறது. கடவுளை மாட்சிப்படுத்துதல் என்பது இடத்தைக் கடந்த செயல்பாடாகும்.
(ஆ) நம் அன்றாட வாழ்வில் கடவுளின் மாட்சி: நம் செயல்களும் சொற்களும் கடவுளுக்கு மாட்சி தருவனவாக இருக்க வேண்டும்.
(இ) கடவுளின் நீதிக்கான எதிர்நோக்கு: அனைத்தின்மேலும் ஆட்சி செலுத்தும் ஆண்டவராகிய கடவுள் நம்மைத் தண்டிக்க அல்ல, மாறாக, நம்மை நீதியோடு வழிநடத்துகிறார்.
நற்செய்தி வாசகச் சிந்தனை (லூக்கா 21:5-11)
(அ) மண்ணுலகப் பொருள்களின் நிலையாமை: நாம் காணக்கூடிய அழகிய பெரிய கட்டடங்கள் அழிந்துபோகும் என எச்சரிக்கிறார் இயேசு. நிலையற்றவற்றின் நடுவே நிலையான கடவுளை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்.
(ஆ) துன்பங்கள் நடுவே நம்பிக்கை: துன்பங்களும் ஆபத்துகளும் வந்தாலும் நம் நம்பிக்கையில் நாம் தளராநம்பிக்கை கொள்ள வேண்டும்.
(இ) உறுதியற்ற நிலையிலும் சான்றுபகர்தல்: வாழ்வின் உறதியற்ற தன்மையிலும் நேரங்களிலும் நாம் நம் நம்பிக்கைக்குச் சான்று பகர வேண்டும்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ வாழ்வின் மறுபக்கத்தை அறியும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 258).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: