• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

மிகுதியாக எதிர்பார்க்கப்படும்! இன்றைய இறைமொழி. புதன், 23 அக்டோபர் ’24.

Wednesday, October 23, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
புதன், 23 அக்டோபர் 2024
பொதுக்காலம் 29-ஆம் வாரத்தின் புதன்
எபேசியர் 3:12-22. லூக்கா 12:39-48

 

மிகுதியாக எதிர்பார்க்கப்படும்!

 

‘மிகுதியாக நம்மிடம் கொடுத்துள்ள கடவுள் நம்மிடமிருந்து மிகுதியாகக் கேட்பதைக் கொடுக்க வேண்டுமெனில், தாழ்வானதை அகற்றை உயர்வானதைப் பற்றிக்கொள்ள வேண்டும்’

 

இயேசுவின் இரண்டாம் வருகைக்கான ஆயத்தநிலை, விழிப்புநிலை, காத்திருத்தல், மானிட மகனின் வருகை போன்ற கருத்துருகளைப் பின்புலத்தில் கொண்டுள்ள இன்றைய நற்செய்தி வாசகம் இரு பிரிவுகளாக அமைந்துள்ளது: முதல் பிரிவில், திருடர் எந்த நேரத்தில் வருவார் என அறியாத வீட்டு உரிமையாளர் எந்நேரமும் ஆயத்தநிலையில் இருந்து தம் இல்லத்தைக் காத்துக்கொள்வதுபோல, சீடர்களும் மானிட மகனின் வருகைக்காக எந்நேரமும் ஆயத்தநிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் இயேசு. இந்த அறிவுரையைக் கேட்கிற பேதுரு, ‘ஆண்டவரே, நீர் சொல்லும் உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?’ என்று கேள்வி கேட்கிறார். இவருடைய கேள்விக்கு விடையாக அமைவதே இரண்டாம் பிரிவு.

 

இங்கே இருவகைப் பணியாளர்களைச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு:

 

(அ) வீட்டுப் பொறுப்பாளராக மாறுகிற நல்ல பணியாளர்: இவருடைய செயல்கள் அல்லது பண்புகள் மூன்று – அவர் தலைவருக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறார், பணியாளர்களுக்கு வேளா வேளைக்கு உணவளிக்கிறார், தம்மிலேயே அறிவுள்ளவராக இருக்கிறார். பணியாளர் நிலையிலிருந்து தலைவர் இவரைப் பொறுப்பாளர் நிலைக்கு உயர்த்தினார். ஏனெனில், இவர் தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருந்தார்.

 

(ஆ) பொறுப்பற்ற கெட்ட பணியாளர்: இவர் தலைவரைப் பற்றிய தவறான புரிதலைக் கொண்டிருப்பதோடு, அதைப் பற்றித் தனக்குத்தானே அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறார். தம் சகபணியாளர்கள்மேல் கோபம், பொறாமை கொண்டு வன்முறையைக் கையாளுகிறார். உண்டுகுடிப்பதில் மும்முரமாக இருக்கிறார். தலைவரைப் பற்றிய தவறான எண்ணம், சக பணியாளர்களின் மாண்பு போற்றாமை, குடிவெறி போன்ற காரணங்களுக்காக இவர் தண்டிக்கப்படுகிறார். இவர் சில நேரங்களில் தலைவரின் விருப்பம் எது என்று தெரியாமல் செயல்படும்போது இவர் பெறும் தண்டனை சற்றே குறைவாக இருக்கும்.

 

மேற்காணும் இருவரில், தாங்கள் யாரைப்போல இருக்கப் போகிறோம் என்பதைச் சீடர்களே முடிவு செய்துகொள்ளுமாறு விட்டுவிடுகிறார் இயேசு.

 

இரண்டு விடயங்களை முன்மொழிந்து, அவற்றில் அல்லதை விடுத்து நல்லதைப் பற்றிக்கொள்ளுமாறு வாசகரிடம் விட்டுவிடுவது ஞான இலக்கியங்களில் நாம் காணும் இலக்கியக் கூறு ஆகும். இதை ‘இரு வழிகள் இறையியல்’ என வழங்குவர். இயேசுவின் மலைப்பொழிவின் இறுதியிலும் இதே போன்ற ஒன்றைப் பார்க்கிறோம்: இருவகை அடித்தளங்கள் (காண். மத் 7:24-27).

 

நற்செய்தி வாசகம் ஞானக்கூற்றோடு நிறைவுபெறுகிறது: ‘மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்பட்டவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.’

 

இன்றைய வாசகம் வழங்கும் வாழ்வியல் வழிகள் எவை?

 

(அ) வீக் பாயிண்ட் இல்லாத தயார்நிலை

 

வாகன ஓட்டிகளுக்கு ப்ளைன்ட் ஸ்பாட் இருப்பதுபோல ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் ஒரு வீக் பாயிண்ட் இருக்கும். ஏதோ ஒரு நேரம் வீட்டைப் பூட்ட மறந்துவிடுவார், அல்லது பூட்டியதாக நினைத்துத் தூங்கச் செல்வார், அல்லது கவனச் சிதறல்களுடன் வெளியே நின்று பேசிக்கொண்டிருப்பார். இந்த வீக் பாயிண்ட் அறிகிற திருடர் அந்த நேரத்தில் உள்ளே நுழைவார். வீக் பாயிண்ட் இல்லாத தயார்நிலை நம் வாழ்வில் இருந்தால் நம் வாழ்க்கை என்ற வீடு ஒருபோதும் திருடுபோகாது. தயார்நிலை அல்லது விழிப்புநிலையிலிருந்து நம்மைத் திசை திருப்புகிற வீக் பாயிண்டைக் கண்டறிந்து அதை அகற்றுதல் நலம்.

 

(ஆ) இருவழிகளில் மேன்மையான வழியைத் தெரிவு செய்தல்

 

வாழ்வில் நாம் எந்த நிலைக்கு வந்திருந்தாலும், நாம் வந்ததன் நோக்கம் அந்த நிலையில் தங்கிவிடுவதற்காக அல்ல, மாறாக, அந்த நிலையிலிருந்தும் உயர்ந்து செல்வதே. பணியாளராக வேலைக்கு வருபவர் பணியாளராகவே தங்கிவிடக் கூடாது. பொறுப்பாளர் நிலைக்கு உயர வேண்டும். இப்படி உயர்வதற்கான வழி, மேன்மையானதைத் தழுவிக்கொண்டு – தலைவருக்கு உகந்ததைப் பற்றிக்கொண்டு – தாழ்வானதைத் – அதீத எண்ணம், தவறான புரிதல், கோபம், பகை, வன்மம், குடிவெறி, மயக்கம் போன்றவற்றை – தள்ளிவிடுவதே.

 

(இ) மிகுதியாக எதிர்பார்க்கப்படும்!

 

‘தெ 10எக்ஸ் ரூல்: வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான ஒரே வித்தியாசம்’ (‘பத்து மடங்கு விதிமுறை’) என்னும் நூலின் ஆசிரியர் கிராண்ட் கார்டோன், நம் வெற்றியின் இலக்குகளை பத்து மடங்கு அதிகமாக நிர்ணயம் செய்து, பத்து மடங்கு அதிகமாக உழைக்க வேண்டும் என்கிறார். ஒரு வேலை முடிந்தவுடன் வெற்றியாளர்கள் ஓய்வுக்குச் செல்வதில்லை. ஏனெனில், அவர்கள் முடிப்பதற்கு முன் அடுத்த வேலை அவர்களுக்காகக் காத்திருக்கும். மிகுதியாக அவர்கள் பெற்றிருப்பதால் மிகுதியாக அவர்களிடம் கேட்கப்படும். மிகுதியாக நம்மிடம் கேட்கப்படுமாறு நம்மிடம் உள்ளதை மிகுதியாக்கிக்கொள்வது நல்லது. பணியாளர் குறைவாகவே கொடுப்பார். ஏனெனில், அவரிடம் உள்ளது குறைவே. பொறுப்பாளர் மிகுதியாகக் கொடுக்க இயலும். ஏனெனில், அவரிடம் உள்ளது மிகுதி.

 

இன்றைய முதல் வாசகத்தில், எபேசு நகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல், ‘உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்’ என மொழிகிறார்;. கடவுள் வெளிப்படுத்திய மறைபொருளின் நல்ல பொறுப்பாளராகத் திகழ்கிறார் பவுல். ‘பொறுப்பாளர்’ என்னும் நிலையில் தன் திருஅவைகளை வழிநடத்துகிறார்.

 

நிற்க.

 

‘மதிப்பீடுகளே மனித வாழ்வின் போக்கை உயர்த்துகின்றன’ (காண். கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி 1803) என்பதை உணர்கிற ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்கள் வாழ்வை மதிப்பீடுகளால் அலங்கரிக்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 232)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: