இன்றைய இறைமொழி
வெள்ளி, 14 மார்ச் ’25
தவக்காலம் முதல் வாரம் – வெள்ளி
எசேக்கியேல் 18:21-28. திருப்பாடல் 130. மத்தேயு 5:20-26
மேலான நெறி
நேற்று நாம் இருந்ததை விட இன்று மேன்மையாக – உடல்நலத்தில், பொருளாதாரத்தில், மனநிறைவில், உறவின் மகிழ்வில், கடவுளோடு உள்ள உறவில் – நாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், நேற்று செய்ததையே நாம் இன்றும் செய்துகொண்டு மேன்மை வேண்டும் என நினைப்பது ஏற்புடையதன்று. மேன்மை தானாகவே வந்துவிடாது, மேன்மை அடைய வேண்டுமெனில் மேன்மைக்கான வழியை நாம் பின்பற்ற வேண்டும் எனக் கற்பிக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
மலைப்பொழிவின் ஒரு பகுதியாக இயேசு தம் சீடருக்கு வழங்கும் அறிவுரையில், ‘மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்’ என்கிறார்.
மேன்மையான இந்த நெறி, கடவுளுக்கு உகந்த பலி செலுத்துவதில் அக்கறை கொண்டிருத்தலில் அல்ல, மாறாக, ஒருவர் மற்றவருடனான ஒப்புரவில்தான் அடங்கியுள்ளது எனக் கற்பிக்கிறார்.
இந்தப் போதனையில் மூன்று விடயங்கள் அடங்கியுள்ளன:
(அ) எளிதானதுக்கும் சரியானதுக்கும் இடையே நிற்கும் நாம்! வாழ்வில் நாம் செய்ய வேண்டியவற்றை எளிதானவை, சரியானவை என இரண்டாகப் பிரிக்கலாம். எளிதாக இருப்பவை எல்லாம் எப்போதும் சரியாக இருப்பதில்லை. ஆலயத்திற்கு வந்து காணிக்கை கொடுப்பது எளிது. ஆனால், குடும்பத்திலும் சமூகத்திலும் ஒருவர் மற்றவரிடம் அன்பு காட்டுவதே சரியானது. மனம் நிறைய கோபம், பொறாமை, முற்சார்பு எண்ணம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு தூய மனதுடன் கடவுள்முன் வந்து நிற்பதாக நாம் எண்ணுவது முரண் ஆகும்.
(ஆ) வெளிப்புறத்திலிருந்து உள்புறம் நோக்கிய பயணம். மேன்மையான நெறி என்பது நம் வெளிப்புற ஆன்மிக அடையாளங்களில் அல்லது சமூக நிலைகளில் அல்ல. மாறாக, நம் உள்ளத்தில் உள்ளது. என் உள்ளத்தில் வீசும் ஒளியைக் கொண்டே மற்றவர் என்மேல் கொண்டிருக்கும் மனத்தாங்கலை நான் அறிந்துகொள்ள முடியும்.
(இ) தீய செயல்களைக் களைவது அல்ல, மாறாக, அச்செயல்களின் ஊற்றுக்கண்ணாக இருக்கிற தீய எண்ணங்களையும் உணர்வுகளையும் களைவதே நம் முதன்மையான பணியாக இருக்க வேண்டும். கொலை என்னும் செயல் கோபம் என்னும் உணர்வாகவே தொடங்குகிறது.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு விடுக்கும் மனமாற்றத்தின் அழைப்பை வாசிக்கிறோம். பொல்லார் நல்லார் என்று இவ்வுலகில் இரண்டு குழுவினர் இருக்கிறார்கள். பொல்லார் மனம் திரும்ப வேண்டும், நல்லார் தம் நன்னிலையைத் தக்கவைக்க வேண்டும்.
இன்றைய பாடம் என்ன?
நேற்றைவிட இன்று நான் கொஞ்சம் மேன்மையாக இருக்க முயற்சி செய்வேன். அந்த முயற்சிக்கான செயலை நான் இப்போதே எடுப்பேன். அச்செயல் வழியாக நான் என்னிடமும், கடவுளிடமும், என் சகோதர சகோதரிகளிடமும் திரும்பி வருவேன்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: