இன்றைய இறைமொழி
வியாழன், 16 ஜனவரி ’25
பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன்
எபிரேயர் 3:7-14. திருப்பாடல் 95. மாற்கு 1:40-45
யாருக்கும் சொல்ல வேண்டாம்!
மாற்கு நற்செய்தியில் மேலோங்கி நிற்கிற கூறுகளில் ஒன்று ‘மெசியா இரகசியம்.’ வல்ல செயலை நிகழ்த்துகிற இயேசு, அந்த வல்ல செயலால் பயன்பெற்றவர் அதை மற்றவர்களிடம் அறிவிக்கக் கூடாது எனக் கட்டளை இடுவதே மெசியா இரகசியம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் மற்றவர்கள் கட்டளையை மீறி இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்கிறார்கள்.
‘இதை அறிவிக்கக் கூடாது’ என்று இயேசு சொல்வதற்கான காரணங்கள் எவை?
(அ) தனிப்பட்ட அனுபவம். மெசியா அனுபவம் என்பது ஒவ்வொருவரும் தனியே பெற வேண்டிய அனுபவம். இதை ஒருவர் மற்றவருடைய அறிவிப்பின் வழியாக அறிந்துகொள்ள இயலாது.
(ஆ) அனுபவத்திற்கும் அறிவித்தலுக்கும் இடையே உள்ள இடைவெளி. ஒருவர் தான் பெற்ற பெரிய அனுபவத்தை மற்றவருக்கு விளக்கிச் சொன்னாலும் அந்த மற்றவரைப் பொருத்தவரையில் அது ஒரு செய்திதான். அது அவரை பாதிப்பதில்லை. ஆகவே, நாம் நம் நேரத்தை வீணாக்கத் தேவையில்லை.
(இ) அறிமுகத்தால் வரும் ஆபத்து. அறிமுகம் அல்லது பழக்கமான இடம் அல்லது மக்கள் தம் பணிக்கான தடையாக மாறிவிடலாம் என்று இயேசு எச்சரிக்கையாக இருந்தார். ஆகையால் அவர் தம்மை மக்கள் தெரிந்துகொள்ள விரும்புவதை இயேசு விரும்பவில்லை.
மெசியா இரகசியம் பற்றிய கட்டளை இன்றைய நற்செய்தி வாசகத்தில் மீறப்படுகிறது. விளைவாக, ஊருக்கு வெளியே தனிமைப்படுத்தப்பட்டிருந்த தொழுநோயாளர் மீண்டும் ஊருக்குள் சேர்கிறார். ஊருக்குள் வலம் வந்த இயேசு தம்மையே தனிமைப்படுத்திக்கொள்கிறார்.
இருந்தாலும் மக்கள் அவரைத் தேடிச் செல்கிறார்கள்.
கடவுள் அனுபவம் என்பது நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட அளவில் பெற வேண்டிய அனுபவம். அது ஒட்டுமொத்தமான சமயத்தின் அல்லது திருஅவையின் அல்லது குழுமத்தின் அனுபவம் அல்ல. மேலும், வேறொருவர் பெற்ற அனுபவத்தை நாம் சொந்தமாக்கிக்கொள்ள இயலாது. ஒவ்வொருவரும் கடவளைத் தனியாக எதிர்கொள்ள வேண்டும்.
நாம் கடவுளைத் தனியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, கடவுளே நமக்காகத் தனிமையை ஏற்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில், தன் குழுமத்தாருக்கு அறிவுரை வழங்குகிற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், ‘ஒவ்வொரு நாளும் ‘இன்றே’ என எண்ணி வாழுங்கள்!’ என அழைப்பு விடுக்கிறார். கடந்த கால வாழ்வில் நம் முன்னோர் பெற்ற கடவுள் அனுபவம் அல்ல, மாறாக, நம் வாழ்வின் இன்றைய பொழுதில் நாம் பெறும் கடவுள் அனுபவமே நம்மை மாற்றுகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: