இன்றைய இறைமொழி
புதன், 12 மார்ச் ’25
தவக்காலம் முதல் வாரம் – புதன்
யோனா 3:1-10. திருப்பாடல் 51. லூக்கா 11:29-32
யோனாவைவிடப் பெரியவர்
இன்றைய இரு வாசகங்களையும் அலங்கரிக்கும் ஒரு நபர் யோனா. எபிரேயத்தில் ‘யோனா’ என்றால் ‘புறா’ என்பது பொருள். பல ரபிக்கள் யோனா நூலை மித்ராஷ் வகை இலக்கியம் (கதையாடல் இலக்கியம்) எனக் கருதுகின்றனரே அன்றி, இறைவாக்கு நூலாகக் கருதுவதில்லை. ஏனெனில், இஸ்ரயேல் மக்களின் உருவகமாகத் திகழ்கிறார் யோனா. யோனா நூல் மூன்று நபர்களைச் சுற்றிச் சுழல்கிறது: நினிவே நகர மக்கள், கடவுள், யோனா. நூலின் தொடக்கத்தில் நினிவே மக்கள் பாவிகளாக இருக்கிறார்கள், கடவுள் கோபமாக இருக்கிறார், யோனா தயக்கம் காட்டுகிறார். நூலின் இறுதியில் மேற்காணும் மூன்று பேருமே மனமாற்றம் அடைகிறார்கள்: நினிவே மக்கள் சாக்கு உடை உடுத்தி மனம் திரும்புகிறார்கள், கடவுள் அவர்கள்மேல் இரக்கம் காட்டுகிறார், யோனா கடவுளின்மேல் கோபம் கொள்கிறார்.
அசீரியாவின் தலைநகரமே நினிவே. கி.மு. 723-722ஆம் ஆண்டில் வடக்கு இஸ்ரயேலை அடிமைப்படுத்துகிறது அசீரியா. இதனால் இஸ்ரயேல் மக்கள் அசீரியாமேல் வெறுப்பும் கோபமும் கொள்கிறார்கள். கடவுள் யோனாவை முதன்முதலாக நினிவே நகர மக்களிடம் அனுப்பியபோது அவர் அந்நகருக்கு எதிர்திசையில் செல்லக் காரணம் இதுவே. இஸ்ரயேல் மக்கள் கொண்டிருந்த இனவெறுப்பும் கோபமும் யோனா வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால், கடவுளின் அணுகுமுறை வேறு மாதிரியாக இருக்கிறது. இந்த நிகழ்விலிருந்து இஸ்ரயேல் மக்கள் மூன்று பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது: (அ) கோபம் அல்ல, மாறாக, இரக்கமே மற்றவர்களுக்கு நலம் தரும், (ஆ) கடவுளின் வழிகள் தனித்துவமானவை. அவற்றை நம்மால் கேள்விக்கு உட்படுத்த இயலாது, (இ) இந்த உலகில் தீமை எல்லாக் காலங்களிலும் எதிர்க்கப்படுவதில்லை. தீமையுடனும் வாழ்வதற்குப் பழகிக்கொள்தல் அவசியம்.
நற்செய்தி வாசகத்தில், அடையாளம் கேட்டுச் சோதித்த தம் சமகாலத்து மக்களுக்கு இரு அடையாளங்களைத் தருகிறார் இயேசு: சாலமோன், யோனா. இவ்விருவருமே தங்களுடைய சமகாலத்து மக்களைத் தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். சாலமோன் மிகப்பெரும் ஞானியாகத் திகழ்ந்தார். யோனா ஆற்றல்மிகு போதகராகத் திகழ்ந்தார். இயேசு சாலமோனைவிடப் பெரியவர். ஏனெனில், அவர் கடவுளின் ஞானம். இயேசு யோனாவைவிடப் பெரியவர். ஏனெனில், போதிக்கும் பணியுடன் சேர்த்து, நலம்தரும் பணியையும் இயேசு செய்தார்.
நினிவே நகரின் வாழ்க்கையை, ‘யோனாவுக்கு முன்,’ ‘யோனாவுக்குப் பின்’ என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். யோனாவின் அறிவிப்பினால் நினிவே நகரம் அழிவிலிருந்து தப்பிக்கின்றது.
ஆனால், யோனா இரண்டாம் முறையே தன் அழைப்பை ஏற்கின்றார். இயேசுவோ முதல் முறையிலேயே ஏற்றுக்கொள்கின்றார்.
யோனாவின் அறிவித்தல் ஏனோ தானோ என்று இருக்கின்றது. மூன்று நாள் கடக்கக் கூடிய தூரத்தை ஒரு நாளில் ஓட்டமும் நடையுமாய், வேண்டா வெறுப்பாய்க் கடக்கின்றார் யோனா.
மேலும், ‘நினிவே நகர் அழிக்கப்படும்’ என்னும் எதிர்மறையான செய்தியை யோனா தருகிறார். இயேசுவின் செய்தியோ அனைவருக்கும் வாழ்வு தருவதாக அமைகின்றது.
இந்த மூன்று நிலைகளில் யோனாவை விடப் பெரியவராக இயேசு இருக்கின்றார்.
தென்னாட்டு அரசி சாலமோனை நம்பினார். நினிவே மக்கள் யோனாவை நம்பினார்கள். ஆனால், இயேசுவின் காலத்து மக்கள் அவரை நம்பவில்லை.
யோனாவைவிடப் பெரியவரான இயேசு நம்மிடம் விரும்புவதும் பெரிய மனமாற்றமே!
நாம் இன்று கேட்க வேண்டிய கேள்விகள் இரண்டு:
ஒன்று, என் நம்பிக்கை இன்னும் அடையாளங்களை மையப்படுத்தியதாக இருக்கிறதா?
இரண்டு, யோனாவிலும் பெரிய இறைவாக்கினரை, சாலமோனிலும் பெரிய ஞானியை – அதாவது, இயேசுவை – இன்று நான் எப்படிப் புரிந்துகொள்கிறேன்?
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: