இன்றைய இறைமொழி
வெள்ளி, 18 அக்டோபர் 2024
பொதுக்காலம் 28-ஆம் வாரத்தின் வெள்ளி
புனித லூக்கா, நற்செய்தியாளர்
2 திமொத்தேயு 4:9-17. லூக்கா 10:1-9
லூக்கா மட்டுமே என்னுடன்!
‘என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர்’ (காண். 2 திமொ 4:9-17). மேற்காணும் சொற்களால் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தை நிறைவு செய்கிறார் பவுல். இந்த வாக்கியம் பவுலின் தனிமை, பணிச்சுமை, பணித்தேவை ஆகியவற்றை எடுத்துரைப்பதோடு, லூக்காவின் உடனிருப்பையும் மாற்குவின் தேவையையும் நமக்கு உணர்த்துகிறது.
நற்செய்தியாளரும் பவுலின் உடனுழைப்பாளருமான புனித லூக்காவின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம். இரண்டாம் ஏற்பாட்டில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியை இவர் எழுதியிருக்கிறார். நற்செய்தி மற்றும் திருத்தூதர் பணிகள் என நாம் இரண்டு நூல்களாக இவருடைய எழுத்துகளைக் கொண்டாலும், இவை இரண்டும் ஒரே நூலின் இரு பகுதிகள் என்பது ஆய்வாளர்களின் கருத்து. யூஸேபியுவின் கருத்துப்படி, சிரியாவில் உள்ள அந்தியோக்கியாவின் வளமான கிரேக்கக் குடும்பம் ஒன்றில் லூக்கா பிறந்தார்ளூ மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றினார். இவருடைய எழுத்துகளில் துலங்கும் இலக்கியத்திறமும் மொழிவளமும் கருத்துச் செறிவும் நம் கவனத்தை மிகவே ஈர்க்கின்றன. இயேசுவை உலகின் மீட்பர் என அறிவிக்கிறது இவருடைய நற்செய்தி.
பவுலின் இரண்டாம் தூதுரைப் பயணத்தில் அவரோடு பயணம் செய்த லூக்கா, அவருடைய தனிப்பட்ட மருத்துவராகவும் இருந்திருப்பார். பவுலின் மறைசாட்சிய இறப்பு வரை அவரோடு உடனிருக்கிற லூக்கா, பவுலின் இறப்புக்குப் பின்னர் கிரேக்க நாட்டிலுள்ள பொவோஷியா திரும்புகிறார். இவர் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தார் எனவும், இவர் வரைந்த மரியா-இயேசு ஓவியத்தை புனித தோமா தம்மோடு இந்தியாவுக்கு எடுத்து வந்தார் எனவும் மொழிகிறது மரபு. இந்த ஓவியம் தற்போது சென்னையில் உள்ள பரங்கிமலை ஆலயத்தில் உள்ளது. மருத்துவர்கள், ஓவியர்கள், கைவினைஞர்கள் ஆகியோரின் பாதுகாவலராகத் திகழ்கிறார் லூக்கா.
இறக்கைகள் கொண்ட காளை இவருடைய நற்செய்தியின் அடையாளமாக இருக்கிறது. ‘காளை’ லூக்கா அழுத்தம் தருகிற இயேசுவின் குருத்துவ, தியாகப் பலி வாழ்வையும், ‘இறக்கைகள்’ லூக்கா நற்செய்தி எல்லைகள் தாண்டிப் பறந்து சென்று அனைவரையும் தழுவிக்கொள்வதையும் குறிக்கிறது.
இயேசுவின் குழந்தைப் பருவம் முதல் விண்ணேற்றம் வரை உள்ள நிகழ்வுகளை ‘பயணம்’ என்னும் ஒற்றைக் கயிற்றில் கட்டுகிறார் லூக்கா. இவரே திருத்தூதுப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்பதாலும், ‘வாழ்க்கை என்பது ஒரு பயணம்’ என உணர்ந்ததாலும் அவர் இப்படிப் பதிவுசெய்திருக்க வேண்டும். கடவுளின் இரக்கம், ஆவியார், இறைவேண்டல், பெண்கள் சமத்துவம், எளியோர்பால் அக்கறை, வரலாற்று உணர்வு போன்ற கருத்துருகள் லூக்கா நற்செய்தியில் காணப்படுகின்றன. இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளில் மரியா-மையக் கதையாடல்கள், மரியாவின் பாடல், சக்கரியாவின் பாடல், சிமியோன்-அன்னா, நல்ல சமாரியன், காணாமற்போன மகன் எடுத்துக்காட்டுகள், மார்த்தா-மரியா சக்கேயு நிகழ்வுகள், சிலுவையில் இயேசுவுடன் அறையப்பட்ட கள்வர்கள் போன்ற பாடங்கள் லூக்காவுக்கு மட்டுமே உரியவை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 10:1-9) இயேசு வேறு எழுபத்திரண்டு (சில பிரதிகளில் எழுபது) பேரை நியமித்து தமக்கு முன்பாக இருவர் இருவராக எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறார். ‘வேறு எழுபத்திரண்டு’ என்னும் சொல்லாடல், இவர்களைப் பன்னிருவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. பணித்தேவையின் பொருட்டு இவர்களை ஏற்படுத்துகிறார் இயேசு. இவர்களுடைய அழைத்தல் இயேசுவிடமிருந்து நேரடியாக அல்லது பிறர்வழியாக வருகிறது. இவர்கள் இருவர் இருவராகச் செல்ல வேண்டும். இவ்வாறு இயேசுவின் நற்செய்திக்குச் சான்றுபகர வேண்டும். இவர்கள் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும்.
இயேசுவிடமிருந்து திருத்தூதர் வழியாகப் பெற்ற அழைப்பு, திருத்தூதர்களுடன் பயணம், நற்செய்தி வழியாக சான்று பகர்தல், அனைத்து நாடுகளுக்கும் பயணம் என லூக்கா, ‘அந்த வேறு எழுபத்திரண்டு பேரில்’ஒருவராகத் தெரிகிறார். நாம் அனைவரும் அந்த எழுபத்திரண்டு பேரில் ஒருவர் என்பது லூக்கா நமக்கு உணர்த்தும் பாடம். இயேசுவின் பணி இன்னும் முடிவுறவில்லை.
லூக்கா எழுதிய சில கதையாடல்கள் அவர் கொண்டிருந்த மதிப்பீடுகளை நமக்கு எடுத்துச் சொல்கின்றன: கடவுள் மைய வாழ்வு, நன்றியும் புகழ்ச்சியும் கலந்த வாழ்க்கை, இயேசுவை நாடிச் செல்தல், நீதியும் இரக்கமும் கடவுளின் கரங்கள், ஆனால் தேவையானது ஒன்றே என அவர் கொண்டிருந்த முதன்மைகள் நமக்கும் பாடங்களாக அமைகின்றன.
லூக்கா நற்செய்தியின் சில பகுதிகளையாவது வாசித்துத் தியானிக்க முயற்சி செய்வோம் – இன்று! ‘இன்று மீட்பர் பிறந்துள்ளார்,’ ‘இன்று இந்த வீட்டுக்கு மீட்பு உண்டாயிற்று’ என கடவுளின் நிகழ்காலத்தில் வாழ முயற்சி செய்வோம்.
லூக்கா மட்டுமே பவுலுடன் இருந்தார்! அவர் மட்டுமே செய்யக் கூடிய பணியை நிறைவாகச் செய்தார்!
நான் மட்டுமே என நான் எதைக் குறிப்பிடுகிறேன்? அதை எப்படி வாழ்கிறேன்?
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ கடவுளுடைய ‘இன்றில்’ வாழ்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 228)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: