இன்றைய இறைமொழி
புதன், 30 அக்டோபர் 2024
பொதுக்காலம் 30-ஆம் வாரத்தின் புதன்
எபேசியர் 6:1-9. லூக்கா 13:22-30
வருந்திப் பெறும் மீட்பு!
‘மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?’ என்று தம்மை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விக்கு விடையளிக்கிறார் இயேசு. மீட்புப் பெறுவோர் பலர், ஆனால், அதன் வழிதான் கடினமானது.
மீட்பு பற்றிய மூன்று புரிதல்களை இங்கே காண்கிறோம்:
(அ) மீட்பு என்பது ஒரு பக்கம் கடவுளின் கொடை என்றாலும் இன்னொரு பக்கம் நாம் அதற்காக முயற்சி செய்ய வேண்டும். அதற்கான வழி இடுக்கமானது.
(ஆ) மீட்பு என்பது அறிமுகத்தின் அடிப்படையில் அல்லது ஒருவர் சார்ந்திருக்கிற இனத்தின் அடிப்படையில் தானாக நடந்தேறுவது அல்ல, மாறாக, தனிநபர் ஆன்மிகத்தின் அடிப்படையிலேயே நடந்தேறுகிறது.
(இ) மீட்பு அனைவருக்கும் பொதுவானது. ‘கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகிற அனைவரும்’ மீட்பின் விருந்தில் பங்கேற்பார்கள்.
நாம் பெறுகிற பாடங்கள் எவை?
(அ) வலியே வாழ்வின் வழி. ‘இடுக்கமான வாயில்’ துன்பம் அல்லது வலியின் உருவகமாக இருக்கிறது. இன்றைய நம் உலகம் வலியற்ற வழிகளையே முன்மொழிகிறது. ஆனால், வலிதான் நம் வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கிறது. வலிகளை மறக்கவும், மறைக்கவும் நாம் பல முயற்சிகள் எடுக்கிறோம். ஆனால், வலி ஏற்பதே வாழ்வுக்கான வழி என்பதை அறிந்துகொள்வோம்.
(ஆ) தானே நிகழ்ந்தேறும் மீட்பு சாத்தியமில்லை! நாம் சார்ந்திருக்கும் மத அமைப்போ, அல்லது கொண்டிருக்கும் நம்பிக்கை வாழ்வோ நமக்க மீட்பைக் கொண்டுவருவதில்லை. அதற்கேற்ற தயார்நிலையும் தொடர் முயற்சியும் அவசியம்.
(இ) அனைவரையும் உள்ளடக்கிய மனநிலை. நடந்து முடிந்துள்ள கூட்டியக்கத்துக்கான மாமன்றம் அனைவரையும் உள்ளடக்கிய பயணத்துக்கு நம்மை அழைக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிச் சிந்திக்கிற மனநிலை ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில், திருத்தூதர் பவுலின் அறிவுரை பிள்ளைகளையும், அடிமைகளையும், தலைவர்களையும் நோக்கியதாக இருக்கிறது. தங்கள் வாழ்வையும் செயல்பாடுகளையும் கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்றாற்போலச் செய்ய அறிவுறுத்துகிறார் பவுல்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ அனைவரையும் உள்ளடக்கிய மனநிலையுடன் பயணம் செய்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 238).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: