• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

வறியோர்க்கான 8-ஆவது உலக நாள். நான் அசைவுறேன்! இன்றைய இறைமொழி. ஞாயிறு, 17 நவம்பர் ’24.

Sunday, November 17, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 17 நவம்பர் 2024
பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு
வறியோர்க்கான 8-ஆவது உலக நாள்

தானியேல் 12:1-3. எபிரேயர் 10:11-14, 18. மாற்கு 13:24-32

 

நான் அசைவுறேன்!

 

ஆண்டின் பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறு இன்று. வருகின்ற ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. இன்றைய ஞாயிற்றை ஏழைகள் அல்லது வறியோர்க்கான (8-ஆவது உலக நாள்) ஞாயிறு என்றும் நாம் சிறப்பிக்கின்றோம். வறியோர் ஆண்டுக்கான செய்தியாக நம் திருத்தந்தை வழங்கியுள்ள தலைப்பு: ‘வறியோரின் செபம் இறைவனை நோக்கி எழுகிறது’ (சீஞா 21:5). யூபிலி 2025-க்கான தயாரிப்புக்காக வழங்கப்பட்டுள்ள ‘இறைவேண்டல்’ என்னும் கருத்துருவே இத்தலைப்பின் பின்புலத்தில் உள்ளது.

 

இன்றைய நாளின் வாசகங்கள் உலகத்தின் இறுதி நாள்கள் பற்றிப் பேசுகின்றன.

 

முதல் வாசகம் தானியேல் நூலின் இறுதிப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திருவெளிப்பாட்டு நடை என்னும் இலக்கியக் கூற்றை நாம் இங்கே காண்கிறோம். இந்த நடையில் நிறைய உருவகங்களும், அடையாளங்களும், குறிச்சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. துன்பம், போர், வன்முறை, வறுமை, பசி, பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள் என வருந்தும் உலகம் நொடிப்பொழுதில் முடியும் அல்லது மாறும் என மொழிகிறது இந்த நடை. செலூக்கிய அரசர் நான்காம் எபிஃபேனஸ் காலத்தில் யூதர்கள் அனுபவித்த துன்பங்களின் போது தானியேல் காட்சி காண்கின்றார். நீதித் தீர்ப்பின்போது என்ன நடக்கும் என்பதைக் காட்சியாகக் காண்கிறார் தானியேல். மிக்கேல் என்னும் அதிதூதர் யூத நாட்டின் காவல் தூதராக இருக்கின்றார். மக்களின் கருத்துகளைக் கடவுள்முன் கொண்டு செல்பவர் இவரே. கடவுளின் கட்டளைகளை உடனடியாக நிறைவேற்றுபவரும் இவரே. உலக முடிவில் தீமைக்கு முடிவு கட்டுவதற்காக கடவுள் மிக்கேல் அதிதூதரை அனுப்புகிறார். இந்த நேரத்தில் இறந்தோர் உயிர் பெறுவர். நல்லோர் எனவும், தீயோர் எனவும் இரு குழுக்களாக அவர்கள் பிரிக்கப்படுவர். தானியேல் நூலைப் பொருத்தவரையில் நல்லோர் என்பவர் கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருந்து, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, துன்பங்களை ஏற்றுக்கொண்டோர் ஆவர்.

 

இரண்டாம் வாசகத்தில், எருசலேமில் வாழ்ந்த தலைமைக் குருக்களுக்கும் ஒப்பற்ற தலைமைக் குருவாம் இயேசுவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தொடர்ந்து பட்டியலிடுகின்றார் ஆசிரியர். ஒரே பலியால் – தன் உடலால் – நிறைவுள்ளவராக்குகிறார் இயேசு. நிறைவுள்ளவராக்குதல் என்பது பலி செலுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுதலைக் குறிக்கின்றது.

 

நற்செய்தி வாசகத்தில், மாற்கு நற்செய்தியில் உள்ள திருவெளிப்பாட்டு நடைப் பகுதியை – உலக இறுதியை – வாசிக்கின்றோம். உலக இறுதியின்போது வான்வெளியில் நிகழும் மாற்றங்களையும், மானிட மகனின் வருகையையும் முன்மொழிகின்ற இயேசு (மாற்கு), ‘விண்ணும் மண்ணும் ஒழிந்து போகும். என் வார்த்தைகள் ஒழிய மாட்டா’ என்கிறார். மேலும், அந்த நாள் வானகத் தந்தைக்கு மட்டுமே தெரியும்.

 

ஆக, தொடங்கியது அனைத்தும் முடிவுறும் என்றும், இறுதியில் நல்லோர் வெல்வர் என்றும், இயேசுவின் வழியாக நாம் அனைவரும் நிறைவுள்ளவராக்கப்படுவோம் என்றும் முன்மொழிகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

 

உலகம் அழிந்தாலும், வான்கோள்கள் அதிர்ந்தாலும், நல்லோர்-தீயோர் எனப் பிரிக்கப்பட்டாலும், நமக்கு இவை அனைத்தும் அச்சம் தந்தாலும், ‘நான் அசைவுறேன்!’ எனத் துணிவோடும் உறுதிபடவும் கூறுகின்றார் பதிலுரைப் பாடல் ஆசிரியர் (திபா 16). ‘ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன். அவர் என் வலப் பக்கம் உள்ளார். எனவே, நான் அசைவுறேன்’ என்கிறார் பாடல் ஆசிரியர். ஆண்டவரைத் தன் கண்முன் வைத்துள்ளவர்கள் அசைவுறுவதில்லை.

 

இன்றைய வாசகங்கள் நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றன:

 

(அ) டிவோஷன். தமிழில், ‘அர்ப்பணம்’ என்று சொல்லலாம். ஆண்டவருக்கும், வாழ்க்கைக்கும், நம் அழைப்புக்கும் நாம் கொடுக்கும் பதிலிறுப்பே டிவோஷன். தானியேல் காலத்தில் சிலர் தங்கள் ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளைப் பற்றிக்கொண்டனர். அப்படி அவர்கள் பற்றிக்கொண்டதே அர்ப்பணம்.

 

(ஆ) டெடிகேஷன். ‘அர்ப்பணம்’ என்பது ‘உணர்வு’ என்றால், ‘ஈடுபாடு’ என்பது செயல். எடுத்துக்காட்டாக, நான் இறைவனுக்கு அர்ப்பணமாக இருந்தால், அவர்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுவேன். குடும்ப உறவில், கணவன் மனைவியிடமும் மனைவி கணவரிடமும் அர்ப்பணத்தோடு இருந்தால், அவர்கள் தாங்கள் செய்கின்ற அனைத்திலும் ஈடுபாட்டுடன் விளங்குவர்.

 

(இ) டிஸிப்லின். ‘ஒழுக்கம்’ என்று இதை மொழிபெயர்க்கலாம். தீர்க்கமான முடிவும் அந்த முடிவைச் செயல்படுத்துதலுமே ஒழுக்கம். ஒழுக்கம் என்பது அறநெறி சார்ந்த ஒன்று அல்ல. மாறாக, அது அன்றாட வாழ்வியல் சார்ந்தது.

 

அர்ப்பணம், ஈடுபாடு, ஒழுக்கம் என்னும் அணிகலன்கள் நம்மை அலங்கரித்தால், நாம் எச்சூழலிலும் அசைவுறாமல் நிலைத்து நிற்க முடியும்.

 

இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 16), வறியோர்க்கான உலக நாள் கருத்துருவோடு இணைந்து செல்கிறது. ‘இறைவா, என்னைக் காத்தருளும். உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்’ எனப் பாடுகிறார் ஆசிரியர். ஆசிரியரின் இச்சொற்கள் அவருடைய கையறுநிலையையும், இறைவன்மேல் கொண்டுள்ள சார்புநிலையையும் எடுத்துரைக்கின்றன.

 

சார்பு நிலையை உணர்பவர்கள் ஏழைகள். வறுமை அல்லது ஏழ்மை அல்லது வறிய நிலை என்பது இடம், நேரம், நபர், மதிப்பீடு சார்ந்தது. எடுத்துக்காட்டாக, ரூபாய் 1 இலட்சம் மாத ஊதியம் பெறுகிற ஒருவர் நம் ஊரில் செல்வர் எனக் கருதப்படுவார். ஆனால், இதே வருமானம் உடைய ஒருவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வருமானம் போதாதவர் எனக் கருதப்படுவார். வறுமை என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. ஆன்மிக வறுமை, அறிவு வறுமை, உணர்வு வறுமை என நாம் பல நிலைகளில் வறியோர்களாகவே இருக்கிறோம்.

 

ஆக, ‘வறிய நிலை’ என்பது ‘வெறுமை நிலை.’ இந்த வெறுமையை நிரப்ப வல்லவர் ஆண்டராகிய கடவுள் ஒருவரே. கடவுள்மேலும் ஒருவர் மற்றவர்மேலும் சார்புநிலையை வளர்த்துக்கொள்ளும் நாம், திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, ‘நான் அசைவுறேன்!’ எனச் சொல்வோம்!

 

இன்றைய நாளில் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோமை நகரில் ஏறக்குறைய 1300 ஏழை மக்களோடு உணவருந்துகிறார். உரோமையில் ஏழ்மையா? என்னும் கேள்வி உடனே எழலாம். ஏழ்மை என்பது போதாத நிலை. ‘இதுவே போதும் என்றால் அது செல்வம்! எதுவும் போதாது என்றால் அது வறுமை!’ நாமும் ஏதாவது ஒரு நிலையில் வறியவர் ஒருவருக்கு நம் உதவிக்கரம் நீட்டுவோம்!

 

நான் அசைவுறேன் – ஏனெனில், நான் கடவுள்மேல் சாய்ந்துள்ளேன்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Image courtesy: Dicastery for Evangelization, Vatican

 


 

Share: