• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

வழியும் இலக்கும். இன்றைய இறைமொழி. வெள்ளி, 8 நவம்பர் 2024

Friday, November 8, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
வெள்ளி, 8 நவம்பர் 2024
பொதுக்காலம் 31-ஆம் வாரம், வெள்ளி
பிலிப்பியர் 3:17-4:1. திருப்பாடல் 122:1-2, 4-5. லூக்கா 16:1-8.

 

வழியும் இலக்கும்

 

வழிக்கும் இலக்குக்கும் உள்ள வித்தியாசத்தைப் பகுத்துணர்ந்து பார்க்க தெளிந்து தேர்தல் அவசியம். நாம் இவ்வுலகில் பெற்றிருக்கிற வளங்களும், உறவுகளும் நம் இலக்குகளை அடைவதற்கான வழிகளே அன்றி, அவை இலக்குகள் அல்ல. வழியைப் பற்றிக்கொண்டு இலக்கை மறப்பது சரியன்று. நம் வாழ்வின் இலக்காக இருப்பவர் கடவுளே. வாழ்வைப் பற்றிய அகன்ற பார்வையும் ஆழமான நம்பிக்கையும் கொண்டிருக்கிறவரே வழிக்கும் இலக்குக்குமான வேறுபாட்டை உணர்ந்து செயல்படுகிறார். நற்செய்தி வாசகத்தின் உவமையில் காணும் வீட்டுப் பொறுப்பாளர் தன் தலைவரின் செல்வத்தைப் பயன்படுத்தி தன் இலக்கை அடைகிறார். பிலிப்பி நகர இறைமக்களுக்கு எழுதுகிற பவுல், நம் மண்ணகத் திருப்பயணத்தின் இறுதி இலக்கான விண்ணகம் நோக்கி அவர்களுடைய பார்வையைப் பதிக்க அழைக்கிறார்.

 

முதல் வாசகச் சிந்தனை (பிலி 3:17-4:1)

 

(அ) பவுலின் நன்மைத்தனமும் நம்பகத்தன்மையும்: ‘நீங்கள் அனைவரும் என்னைப் போல வாழுங்கள்!’ என்று தன்னையே சான்றாக முன்மொழிகிறார் பவுல். இப்படிச் சொல்வதற்கு நிறையத் துணிச்சல் தேவை. தன் கடந்த காலத்தோடு ஒப்புரவாகிற பவுல், தன்னை முதலில் மன்னிக்கிறார். கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார். அந்தப் புதிய வாழ்க்கையே அவருடைய நம்பகத்தன்மையின் அடையாளம். ‘என்னைப் பின்பற்றுங்கள்’ என நான் மற்றவரிடம் சொல்லும் அளவுக்கு என் வாழ்க்கை நன்மைத்தனமும் நம்பகத்தன்மையும் நிறைந்ததாக இருக்கிறதா?

 

(ஆ) ‘விண்ணகமே தாய்நாடு’: நம் மண்ணக வாழ்வை நீண்ட பயணமாகப் பார்க்கிற பவுல், விண்ணகம் செல்வதை ‘தாய்வீடு திரும்புதல்’ என்னும் அனுபவத்துக்கு ஒப்பிடுகிறார். இந்தப் பார்வை நம் வாழ்வின் மதிப்பீடுகளையும் வாழ்வின் தரத்தையும் உயர்த்துகிறது.

 

(இ) ‘மகிழ்ச்சியும் வெற்றிவாகையும்’: ‘வாஞ்சைக்குரியவர்களே’ என்று தன் குழுமத்தின் இறைமக்களை அழைக்கிற பவுல், அவர்களே தன் மகிழ்ச்சி, வெற்றிவாகை எனக் கொண்டாடுகிறார். பவுல் தன் குழுமத்தை கிறிஸ்துவில் அன்பு செய்ததால் அவர்களுடைய நிறைகுறைகளை ஏற்றுக்கொள்கிறார். நம் அன்புக்குரியவர்களை கிறிஸ்துவில் அன்பு செய்வது நலம்.

 

பதிலுரைப் பாடல் சிந்தனை (திபா 122:1-2, 4-5)

 

(அ) கடவுளின் இல்லத்திற்கு வருவதன் மகிழ்ச்சி: ‘ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்!’ என்னும் அழைப்பு தனக்கு மகிழ்ச்சி தந்ததாக எழுதுகிறார் ஆசிரியர். கடவுளின் இல்லம் நோக்கிச் செல்லும்போதெல்லாம் நாம் நம் இல்லம் நோக்கியே செல்கிறோம். அங்கே நன்றியுணர்வு பிறக்கிறது.

 

(ஆ) வழிபாட்டில் ஒன்றிப்பு: ஆசிரியர் மட்டுமல்ல ஆண்டவரின் திருக்குலத்தார் அனைவரும் கடவுளின் இல்லம் செல்கிறார்கள். இறைவனை நோக்கிய பயணம் நமக்கு அடுத்திருப்பவரையும் உள்ளடக்கிய பயணமாக இருக்கிறது.

 

(இ) கடவுளின் நீதியும் அமைதியும்: கடவுள் தம் மக்களுக்கு நீதி வழங்கும் இருக்கையாக அமைகிறது எருசலேம். இறைநீதியிலிருந்து அமைதி பிறக்கிறது. அமைதியும் நீதியும் நம் குழுமங்களில் நிலைக்க நாம் உழைக்க வேண்டும்.

 

 

நற்செய்தி வாசகச் சிந்தினை (லூக் 16:1-8)

 

(அ) பொறுப்பாளர்நிலையில் ஞானம்: தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வளங்களை முன்மதியோடு பயன்படுத்துகிறார் வீட்டுப் பொறுப்பாளர். கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள வளங்களின் உறவுகளின் பொறுப்பாளர் நாம் என்னும் நிலையில் முன்மதியோடு செயல்பட வேண்டும்.

 

(ஆ) நீடித்த மதிப்பீடுகளை முதன்மைப்படுத்துதல்: நம் நேரம், ஆற்றல், வளங்கள், அழைத்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி நீடித்தவற்றை அடைய அழைக்கிறார் இயேசு. இலக்குகளே முதன்மையானவை அன்றி, வழிகள் அல்ல.

 

(இ) சரியான பாடத்தைக் கற்பது: முன்மதியோடு செயல்படுகிற வீட்டுப் பொறுப்பாளர் உவமை சொத்துகளை தவறாகப் பயன்படுத்துவது பற்றியது அல்ல, மாறாக, நம் வளர்ச்சிக்கு ஏற்றதாக அதை மாற்றிக்கொள்வது. ‘வழிகள் இலக்குகளை நியாயப்படுத்துவதில்லை’ என்றாலும், இந்த உவமை அறநெறியைத் தாண்டியதாக இருக்கிறது.

 

நிற்க.

 

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ வழிகளுக்கும் இலக்குகளுக்கும் உள்ள வேறுபாட்டை ஆய்ந்தறிவதோடு, வழிகளைப் பற்றிக்கொண்டு இலக்குகளை அடைகிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 242).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: