• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

வானத்திலிருந்து தீ! - இன்றைய இறைமொழி. செவ்வாய், 1 அக்டோபர் ’24.

Tuesday, October 1, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
செவ்வாய், 1 அக்டோபர் ’24
பொதுக்காலம் 26-ஆம் வாரம், செவ்வாய்
குழந்தை இயேசுவின் புனித தெரசா, நினைவு

யோபு 3:1-4அ, 11-17, 20-23. லூக்கா 9:51-56

 

வானத்திலிருந்து தீ!

 

இயேசுவுடைய சீடர்கள் ரொம்ப கோபக்காரங்களா இருக்காங்க! அவர்களைச் சமாளிப்பதே இயேசுவுக்கு மிகப் பெரிய வேலையாக இருந்திருக்கும்!

 

தங்களைச் சாராத ஒருவர் பேய் ஓட்டுவதைக் கண்டு நிறுத்தப் பார்க்கின்றனர். இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சமாரிய நகர்மேல் தீ விழுமாறு செய்யவா? எனக் கேட்கின்றனர். இருமுறையும் இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார்.

 

‘விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே இயேசு எருசலேமுக்குச் செல்லத் தீர்மானித்தார்’ எனப் பதிவு செய்கின்றார் லூக்கா. லூக்காவின் நற்செய்தி பயணத்தின் நற்செய்தி என அழைக்கப்படக் காரணம் இந்த வாக்கியமே. ஏனெனில், லூக்காவின் இயேசு பயணம் செய்துகொண்டே இருக்கின்றார். அவருடைய போதனைகள் மற்றும் வல்ல செயல்கள் அனைத்தும் அவருடைய பயணத்தின் நிகழ்வுகளாக அமைகின்றன.

 

சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். ஏனெனில், இயேசு தங்களைக் கடந்து செல்வதை அவர்கள் விரும்பவில்லை. ஒருவேளை, அவர் தங்களுடன் தங்கவில்லை என்று அவர்மேல் கோபித்திருக்கலாம். வழக்கமாக, கலிலேயாவிலிருந்து (வடக்கிலிருந்து) யூதேயாவுக்கு (தெற்கு நோக்கி) பயணம் செய்யும் யூதர்கள், சமாரியா நிலப்பகுதியைத் தவிர்த்து, யோர்தானை ஒட்டிய பகுதியில் நடந்துசெல்வார்கள். ஏனெனில், சமாரிய நிலப்பகுதி தீட்டானது என்பது அவர்களுடைய நம்பிக்கை. இயேசு அந்த நம்பிக்கையை உடைக்கின்றார். சமாரியப் பகுதி வழியாகப் பயணம் செய்ய விரும்புகின்றார்.

 

சமாரியர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதைக் கண்டு, தங்கள் போதகரிடம் ‘வெரி குட்’ வாங்குவதற்காக, ‘சமாரியக் கிராமத்தின்மேல் வானத்திலிருந்து தீ விழுமாறு செய்யவா?’ எனக் கேட்கின்றனர்.

 

இயேசு தன் ஆற்றலை ஒருபோதும் தனக்காகவோ, அல்லது யாரையும் பழிதீர்க்கவோ பயன்படுத்தவில்லை. சாத்தான் அவரைப் பாலைவனத்தில் சோதித்தபோது, முதல் சோதனை அதுதான். கற்களை அப்பமாக மாற்றி பசியாற்றிக்கொள்ளுமாறு சாத்தான் தூண்டியபோது இயேசு மறுக்கின்றார்.

 

இங்கே, சீடர்கள் மற்றவர்கள்மேல் பழிதீர்த்துக்கொள்ள தங்கள் ஆற்றலைப் பயன்படுத்த நினைப்பதை இயேசு விரும்பவில்லை.

 

அதற்கும் முன்னதாக, தீமைக்குப் பதில் தீமை செய்வதோ, அல்லது உணர்வுப் பெருக்கில் ஒருவர் வினையாற்றும்போது அதே உணர்வுப் பெருக்கில் எதிர்வினை ஆற்றுவதோ தவறு என்பது இயேசுவின் புரிதலாக இருக்கின்றது.

 

இயேசு எதிர்வினை ஆற்றுவதற்குப் பதிலாக, அடுத்த முயற்சி என்ன என்பதைப் பார்க்கின்றார். வேறு ஊர் வழியாகப் பயணம் செய்கின்றார். எதிர்வினை ஆற்றி தன் ஆற்றலை விரயம் செய்ய அவர் விரும்பவில்லை.

 

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

 

(அ) தூய்மை-தீட்டு என்ற நிலையிலோ, அல்லது அடிமைப்படுத்தும் நிலையிலோ சமூகம் அல்லது நாம் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளையும், மரபுகளையும் மீறுவது. ஏனெனில், தூய்மை-தீட்டு, மேட்டிமை-தாழ்மை என்பது நம் உள்ளத்து உணர்வுகளே தவிர வெளியில் அப்படி எதுவும் இல்லை.

 

(ஆ) நம் வாழ்க்கை என்பது ஒரு பயணம் என்பதை உணர்வது. இந்தப் பயணத்தில் தடைகள் வரலாம். நம்முடன் பயணம் செய்பவர்கள் நமக்கு இடர்கள் தரலாம். ஆனால், பயணம் தடைபடக் கூடாது. ஒரு பாதை அடைக்கப்பட்டால் மறு பாதையைக் கண்டுபிடித்து நாம் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். விண்ணேற்றம் ஒன்றே – அதாவது, மேன்மை அல்லது வெற்றி ஒன்றே – நம் இலக்காக இருக்க வேண்டும்.

 

(இ) எதிர்வினை ஆற்றுதல் பெரிய ஆற்றல் விரயம் என்பதை உணர்வது. சமாரியர்கள் இயேசுவின்மேல் எதிர்வினை ஆற்ற, சீடர்கள் சமாரியர்கள்மேல் எதிர்வினை ஆற்றுகின்றனர். ஆனால், இயேசு இரு நிலைகளிலும் தன் ஆற்றலைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கின்றார். நாம் பல நேரங்களில் நம்மை அறியாமல் எதிர்வினை ஆற்றிக்கொண்டே, அல்லது தேவைற்றவற்றுக்குப் பதிலிறுப்பு செய்துகொண்டே நம் ஆற்றலை வீணாக்குகின்றோம். ஆற்றலைத் தற்காத்தல் மிகப் பெரிய அவசியம். ஏனெனில், ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஓர் ஆற்றலை இன்னொரு ஆற்றலாக மட்டுமே மாற்ற முடியும்.

 

இன்றைய முதல் வாசகத்தில் (யோபு 3:1-4,11-17,20-23), யோபு தன் பிறந்த நாளைச் சபிக்கத் தொடங்குகின்றார். ‘ஒளி’ என்னும் சொல் ‘பிறப்பைக் குறிக்க’ உருவகமாக இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. நம் வாழ்வின் கதவுகள் அடைக்கப்பட்டது போல நாம் உணரும்போது நாம் தொடங்கிய பயணத்தை நினைத்து வருந்துவது இயல்பு. தன் பிள்ளைகளை இழந்து, தன் உடைமைகளை இழந்து, தன் உடல்நலத்தையும் இழந்து அமர்ந்திருக்கின்றார் யோபு. அவரைக் காண வந்திருக்கின்ற அவருடைய நண்பர்கள் மௌனமாக அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் உரையாடலைத் தொடங்கி வைப்பதற்காக, யோபுவே ஒரு தன்புலம்பல் செய்வதாக ஆசிரியர் இந்த பாடப்பகுதியைக் கையாளுகின்றார். யோபுக்கு ஏன் இப்படி நடந்தது என்பதை கடவுள் அறிவார், அவர் அனுப்பிய சாத்தான் அறிவார், வாசகராகிய நாம் அறிவோம். ஆனால், யோபுவும் அவருடைய நண்பர்களும் அறியவில்லை. யோபு தானாகவே தன் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்கின்றார். தொடர்ந்து அவருடைய நண்பர்களும் தங்களுக்குத் தெரிந்த காரணங்களை முன்வைக்கின்றனர்.

 

நம் கண்முன் மட்டும் இருப்பதைப் பார்க்கும்போது நாமும் யோபு போல, இயேசுவின் சீடர்கள்போல குறுகிய பார்வை கொண்டிருக்கின்றோம். ஆனால், பாதை நீண்டது எனத் தெரிந்தவுடன் பார்வை மாறுகிறது.

 

குழந்தை இயேசுவின் புனித தெரசா

 

சிறுமலர், சின்னராணி என அழைக்கப்படுகிற குழந்தை இயேசுவின் புனித தெரசா ‘சிறிய வழியை’ நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். கிறிஸ்துவோடு நெருக்கம், தொடர்ந்த இறைவேண்டல், துன்பங்கள் ஏற்றல் வழியாக சிறந்த புனிதையாக விளங்குகிறார் இவர். மறைந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் மறைவல்லுநர், மறைப்பணியாளர் என வழங்கப்படுகிறார்.

 

நிற்க.

 

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்கள் மனப்பாங்கை தொடர்ந்து மாற்றிக்கொள்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 213)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: