இன்றைய இறைமொழி
வியாழன், 6 மார்ச் ’25
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன்
இணைச்சட்ட நூல் 30:15-20. திருப்பாடல் 1. லூக்கா 9:22-25
வாழ்வைத் தெரிதல்
(அ) வாழ்வின் அல்லது இறப்பின் வழி
இன்றைய வாசகங்கள் அடிப்படையான தெரிவை முன்மொழிகின்றன: வாழ்வின் வழி அல்லது இறப்பின் வழியைத் தெரிந்துகொள்தல். இணைச்சட்ட நூலில் மோசே மக்கள்முன் ஓர் உறுதியான முடிவை முன்மொழிகிறார்: கடவுளுக்குக் கீழ்ப்படிதல் வாழ்வையும் வளமையையும் தரும். கடவுளின் சட்டத்திலிருந்து விலகிச் செல்தல் அழிவைத் தரும். இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 1) இதையொட்டியே, ‘நற்பேறு பெற்றவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல இருப்பர், பொல்லார் காற்றில் அடித்துச் செல்லப்படும் பதர்போல இருப்பர்’ என்கிறது. நற்செய்தி வாசகத்தில், இதன் நீட்சியாக, தன்னை மறுப்பதிலும் சிலுவையைச் சுமப்பதிலுமே உண்மையான வாழ்வு அடங்கியுள்ளது என்கிறார் இயேசு. நம் தவக்காலப் பயணம் வாழ்வைத் தெரிந்துகொள்வதில் அடங்கியுள்ளது. இதுவே கிறிஸ்துவின் வழி. இந்த வழி தியாகம் நிறைந்தது.
(ஆ) சிலுவையின் சவால்
இயேசுவின் சொற்கள் நமக்குச் சவாலாக இருக்கின்றன: ‘தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.’ ஆனால், ‘காத்துக்கொள்பவர் தக்கவைத்துக்கொள்கிறார்’ என்று இவ்வுலகம் எதிரான போதனையை முன்மொழிகிறது. சிலுவை என்பது வெறும் துன்பம் அல்ல. மாறாக, மாற்றத்துக்கான வழி. இழந்துவிடும்போது நம் கட்டுப்பாட்டிலிருந்து அனைத்தும் விலகுவதுபோல, பாதுகாப்பை நாம் இழப்பதுபோல நாம் உணரலாம். ஆனால், சரணாகதி மனப்பான்மையே உள்ளார்ந்த விடுதலையை நமக்குத் தருகிறது. சிலுவை என்பது உயிர்ப்பு என்னும் இலக்கை அடைவதற்கான வழி.
(இ) கிறிஸ்துவை அன்றாடம் தெரிந்துகொள்தல்
‘வாழ்வைத் தெரிந்துகொள்ளுங்கள்!’ என மக்களை அழைக்கிறார் மோசே. ‘அன்றாடம் சிலுவையைத் தூக்குங்கள்!’ என்கிறார் இயேசு. சின்னச் சின்ன விடயங்களில், வாழ்வின் சாதாரண நகர்வுநிலைகளில், அன்றாட முடிவுகளில் கிறிஸ்துவைத் தெரிந்துகொள்வோம். கண்டுகொள்ளாத்தன்மைக்குப் பதிலாக அன்பை, தன்னலத்திற்குப் பதிலாக தற்கையளிப்பை, கவனச் சிதறலுக்குப் பதிலாக இறைவேண்டலை, அச்சத்திற்குப் பதிலாக நம்பிக்கையையும் தேர்ந்துகொள்வோம்.
இன்றைய சவால்: ஒவ்வொரு பொழுதும் வாழ்வைத் தெரிந்துகொள்தல்
கிறிஸ்துவுக்கு உங்களை அருகில் நகர்த்திச் செல்லும் ஒரு தெரிவை மேற்கொள்ளுங்கள். சோதனை ஒன்றைத் தவிர்ப்பதாக இருக்கலாம், மன்னிப்பு வழங்குவதாக இருக்கலாம், இறைவேண்டலுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்குவதாக இருக்கலாம். இந்த நாள் முடியுமுன் சிந்திப்போம்: ‘இன்று நான் வாழ்வைத் தெரிந்துகொண்டேனா?’
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: