இன்றைய இறைமொழி
சனி, 21 டிசம்பர் ’24
திருவருகைக்கால வார நாள்
இனிமைமிகு பாடல் 2:8-14. லூக்கா 1:39-45
ஓ விடியலே, வாரும்!
கிறிஸ்து பிறப்பு நவநாளின் ஐந்தாம் நாள் ‘ஓ அழைப்பு’, ‘விடியலே, வாரும்!’ என்பதாகும். இலத்தீனில் ‘ஓரியன்ஸ்’ என்பதை ‘கிழக்கு’ என்றும் ‘விடியல்’ என்றும் மொழிபெயர்க்கலாம். சில பதிப்புகளில் ‘விடியற்காலை விண்மீனே!’ எனவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விண்மீன் புதிய உதயத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இருள் என்பது இறப்பையும் ஒளி என்பது வாழ்வையும் குறிக்கிறது. நீடித்த ஒளியின் வெளிச்சம் (சாஞா 7:26), ‘நீதியின் கதிரவன்’ (மலா 3:20) என்னும் அருள்வாக்கியங்கள் இந்த அழைப்பின் பின்புலத்தில் இருக்கின்றன.
இன்றைய முதல் வாசகத்திற்கென இரு பகுதிகள் தரப்பட்டுள்ளன. இபா 2:8-14 பகுதியில் தலைவி மற்றும் தலைவனின் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காதலின் மயக்கத்தில் இருக்கும் காதலி தன் தலைவனின் வருகையை எதிர்நோக்கியிருக்கிறாள். தலைவனின் வருகை தலைவிக்கு மகிழ்ச்சி தருகிறது. தலைவனின் எதிர்பாராத வருகை தலைவிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது. தலைவி கூற்றாக இங்கே உள்ள பகுதி, தலைவனை எதிர்பார்த்து தலைவி பாடுவதாகவும், அதே வேளையில் தலைவன் இப்படிப்பட்ட ஓர் இன்ப அதிர்ச்சியை நமக்குத் தரமாட்டானா என்ற ஆவலை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. தலைவரின் வருகையை கலைமானின் ஓட்டத்தோடு ஒப்பிடுகிறார் தலைவி. மேலும், கார்காலத்து மழைச்சாரல் பொழியும் நேரமும் தலைவனின்மேல் உள்ள ஆர்வத்தை அதிகரிக்கிறது. தலைவன் தன் தலைவியை வெண்புறாவுக்கு ஒப்பிட்டுப் பாடுகின்றார். கலைமானும், வெண்புறாவும் சந்திக்கும் நிகழ்வு இன்பமயமானதாக இருக்கும்.
இரவின் இருளில் இருந்த தலைவி, தன் இல்லத்தின் கதவுகளைத் திறந்து பார்த்தபோது அங்கே தலைவன் நிற்கிறான். தன் வாழ்வின் கிழக்கு எனத் தலைவனைக் கண்டுகொள்கிறாள் தலைவி. முற்காலத்தில் வீடுகள், கதிரவனின் ஒளியை உள்ளே வரவேற்கும் விதமாக, பெரும்பாலும் கிழக்கே வாசல் கொண்டதாகக் கட்டப்பட்டன. தன் வீட்டைத் திறக்கிற காதலி, கதிரவனுடன் சேர்ந்து தன் காதலனையும் காண்கிறாள்.
(இரண்டாவது தெரிவாகக் கொடுக்கப்பட்டுள்ள செப்பனியா இறைவாக்குப் பகுதியில் (3:14-17), எருசலேம் நகரத்தை மகள் என அழைக்கிறார் இறைவாக்கினர். நகர்களும் ஊர்களும் பெரும்பாலும் பெண்களாகவே உருவகப்படுத்தப்பட்டன. பெண்மை என்பது வளமையின் அடையாளமாக இருந்தது. எருசலேம் என்னும் மகள் மகிழ்ந்து ஆர்ப்பரிக்க வேண்டும் என அழைக்கிறார் இறைவாக்கினர்.)
நற்செய்தி வாசகத்தில், மரியா எலிசபெத்தைத் தேடிச் சென்று சந்திக்கும் நிகழ்வை வாசிக்கிறோம். இரவு முடிந்து விடியற்காலையில் தன் வீட்டின் கதவைத் திறந்த எலிசபெத்து அங்கே மரியா நிற்கக் காண்கிறார். ‘ஓ கிழக்கே!’ ‘ஓ விடியலே!’ என்று அவரைத் தழுவிக்கொள்கிறார். மரியாவின் வாழ்த்தொலி எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தர, எலிசபெத்தோ தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்படுகிறார். ‘என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?’ எனக் கேட்கிறார் எலிசபெத்து.
இந்த நிகழ்வு பற்றி விளக்கம் தருகிற புனித அம்புரோஸ், ‘தூய ஆவியாரால் நிரப்பப்பட்ட ஒருவர் உயரங்கள் நோக்கி ஓடுவார், அவர் விரைந்து செயல்படுவார், சந்திப்பவருக்கெல்லாம் மகிழ்ச்சி தருவார்’ என எழுதுகிறார். மற்றொரு பக்கம், எலிசபெத்து, ‘சிறிய மரியாவில் ஆண்டவரின் தாயைக் காண்கிறார். மரியாவின் நம்பிக்கையைப் பாராட்டுகிறார். மரியாவின் பிரசன்னம் தன்னில் ஏற்படுத்திய மாற்றத்தை எடுத்துச் சொல்கிறார்.’
இவ்விரு வாசகங்களின் பின்புலத்தில், ‘ஓ கிழக்கே’ அல்லது ‘ஓ விடியலே’ என்னும் தலைப்பு நமக்கு வழங்கும் செய்தி என்ன?
ஆண்டவராகிய கடவுள் வியப்புகளின் இறைவனாக இருக்கிறார். வீட்டின் கதவை நாம் திறக்கும் வரை வீட்டுக்கு வெளியே என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. திறக்கும்போது அங்கே நாம் அவரைக் கண்டுகொள்கிறோம். கதிரவனைக் கண்ட தாமரை போல நாம் சிலிர்த்துப்போகிறோம். கடவுளுக்கான ஏக்கம் இருந்தால்தான் கடவுளின் இருத்தல்கண்டு நாம் வியப்படைவோம். அல்லது இந்த வியப்பே அதிர்ச்சியாக மாறும். நாம் விரும்புகிற நபர் நமக்குத் தோன்றினால் அது வியப்பு. நாம் வெறுக்கிற நபர் திடீரென வரக் கண்டால் அதுவே அதிர்ச்சியாக மாறுகிறது நமக்கு. ஆண்டவர்மேல் கொள்ளும் விருப்பத்துடன் நாம் கதவுகளைத் திறக்க, கடவுள் அங்கே கதிரவன்போல ஒளிர்வதை நாம் கண்டுகொள்ள முடியும்.
மெசியா வாசிப்பில், எருசலேம் நகரின் கிழக்கே நோக்கியிருக்கிற வாயில் வழியாகவே மெசியா வருவார் என்பது ரபிக்களின் நம்பிக்கை. விடியல் எனவும் கிழக்கு எனவும் மெசியா அழைக்கப்படுகிறார். இயேசுவின் பிறப்பின்போது கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்த ஞானியர் அவரை யூதர்களின் அரசராகக் கண்டு வணங்குகிறார்கள். இயேசு இறந்து உயிர்த்தவராக கிழக்கே (ஈஸ்ட் – ஈஸ்டர்) உதிக்கிறார்.
ஓ விடியலே, என் வாழ்வின் இருள் போக்கியருளும்!
‘ஓ கிழக்கே, விடியலே, விடியலின் விண்மீனே (எரே 23:5, சக் 3:8, 6:12),
நீடித்த ஒளியின் வெளிச்சமே (அப 3:4, சாஞா 7:26, எபி 1:3)
நீதியின் கதிரவனே (மலா 3:20).
வாரும்! இருளில் வாழ்பவர்களை ஒளிரச் செய்யும்! (திபா 107:10, லூக் 1:78)’
இதுவே இன்றைய இறைவேண்டல்
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: