• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

விதைபோல வாழ்க்கை. இன்றைய இறைமொழி. புதன், 29 ஜனவரி ’25.

Wednesday, January 29, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
புதன், 29 ஜனவரி ’25
பொதுக்காலம் 3-ஆம் வாரம் – புதன்
எபிரேயர் 10:11-18. திருப்பாடல் 110. மாற்கு 4:1-20

 

விதைபோல வாழ்க்கை

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் விதைப்பவர்-விதைகள் எடுத்துக்காட்டை வாசிக்கிறோம். ‘கடவுளின் வார்த்தையே விதை. அதை விதைப்பவர் கிறிஸ்துவே’ என்று நற்செய்திக்குமுன் வாழ்த்தொலி பாடுகிறோம். நம் வாழ்க்கையே விதை. கிறிஸ்துவே நமக்கு வாழ்வு தருபவர் என்று சிந்திப்போம்.

 

வாழ்க்கை நம் அனைவரையும் ஒரே போல நடத்துவதில்லை என்றாலும், அனைவருக்கும் பொதுவான சிலவற்றை வாழ்க்கை வரையறுக்கவே செய்கிறது. எடுத்துக்காட்டாக, உயிர் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதன்மேல் நமக்குக் கட்டுப்பாடு கிடையாது. அதுபோல நேரம் பொதுவானது. நாம் விரும்பினாலும் விரும்பவில்லையென்றாலும் அது நகர்ந்துகொண்டே இருக்கும். நாம் நிறைவை நோக்கி நகர்ந்துகொண்டே இருப்போம்.

 

வாழ்க்கை அனைவருக்கும் சில கொடைகளைப் பொதுவாக வைத்திருந்தாலும் ஏன் நம்மால் முழுமையாக வாழ முடியவில்லை? ஏன் நம்மால் முழுமையாகக் கனி தர இயலவில்லை?

 

விதைப்பவர்-விதைகள் எடுத்துக்காட்டில் நான்கு வகை நிலங்கள் பற்றிப் பேசுகிறார் இயேசு: வழியோரம், பாறைநிலம், முட்செடிகள் நிறைந்த நிலம், நல்ல நிலம். விதை கனிதர இயலாமல் போவதற்கு அல்லது விதை தன் முழு இயல்பை அடைவதற்கு மூன்று எதிர்மறையான சூழல்கள் காரணமாக அமைகின்றன: (அ) கடினமான பாதை – மனிதர்கள் நடந்து நடந்து நிலம் இறுகிவிடுகிறது. அந்த இறுக்கத்தை உடைத்து விதை கீழே செல்ல முடிவதில்லை. வழியோரம் பறவைகளின் பாதையாக இருப்பதால் அவை விதையை விழுங்குகின்றன. (ஆ) பாறைநிலம் – பாறைநிலத்தில் உள்ள மண் இலகுவாக இருக்கிறது. ஏனெனில், அது பாறைக்கு மேல் இருக்கிறது. இலகுவான பாதையில் நுழைகிற விதை, கடினமான பாறையைத் தொட்டவுடன் காய்ந்துவிடுகிறது. (இ) முட்செடிகளுக்கு நடுவே விழுகிற விதை பசுமையான இடத்தில் விழுவதாக, சூரியனின் சூட்டிலிருந்து பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறது. ஆனால், தனக்கு பாதுகாப்பு என நினைத்ததே தன் வளர்ச்சியை நிறுத்திவிடும் என்பதை அது உணரவில்லை.

 

நல்ல நிலத்தில் விழுந்த விதை பலன் தருகிறது – ஆனால், அந்தப் பலனில் வேறுபாடு இருக்கிறது: முப்பது, அறுபது, நூறு. முப்பது தன் முயற்சியால், அறுபது தன் சூழலால், நூறு பொழிகிற மழையால்.

 

‘விதை’ என்னும் இடத்தில் ‘வாழ்க்கை’ என்னும் சொல்லை வைத்துத் தியானிப்போம்.

 

(அ) கடினமான பாதையும் வழியோரப் பறவைகளும் – சிலருடைய வாழ்க்கை கடினமான இறுகிப்போன பாதைமேல் விழுந்ததுபோல இருக்கிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்கள் தாங்கள் இருக்கிற நிலையிலேயே இருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையை மற்றவர் எடுத்து வாழத் தொடங்குகிறார். தங்கள் நேரம், ஆற்றல் அனைத்தையும் மற்றவர்களுக்கு விற்றுவிட்டு, மற்றவர்களின் வாழ்க்கையைத் தங்கள் வாழ்க்கை என வாழ்கிறார்கள் இவர்கள்.

 

(ஆ) பாறைநிலமும் இலகுவான மண்ணும் – வாழ்க்கை எளிதாக இருக்கிறதே என எண்ணி ஓய்ந்துவிடுகிற இவர்கள், பாறையைத் தொட்டவுடன் பதறிவிடுகிறார்கள். விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் கைவிடுகிறார்கள். நகர நகர கல்லும் தேயும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

 

(இ) முட்செடிகளும் போலியான நிழலும் – ‘உலகக் கவலை, செல்வ மாயை, தீய ஆசை’ என்னும் மூன்று எதிர்மறையான கூறுகளை முட்செடிக்கு ஒப்பிடுகிறார் இயேசு. முட்செடி நன்றாக வளரும், பசுமையாக இருக்கும். ஆனால், அச்செடியால் பயன் ஒன்றும் இல்லை. நிழலுக்கு ஒதுங்கினாலும் முள் குத்திவிடும். இயேசு குறிப்பிடுகிற மூன்று எதிர்மறையான கூறுகளும் நம் வாழ்க்கையில் நாம் முழுமையாகப் பலன் தருவதற்குத் தடைகளாக இருக்கின்றன.

 

(ஈ) நல்ல நிலம் – நிலம் நல்லது என்றாலும், நம் முயற்சி நிறைவாக இருந்தாலும் நாம் கனி தருவதில் வேறுபாடு இருக்கவே செய்கிறது. நம் சொந்த முயற்சியால் நாம் ‘முப்பது’ மடங்கு பலன் கொடுக்கிறோம். நம் முயற்சிகள் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் அதற்கேற்ற சூழல் என அமையும்போது பலன் ‘அறுபது’ மடங்கு என ஆகிறது. இறைவனின் இரக்கம் மேலிருந்து பொழியப்படும்போதுதான் வாழ்க்கை ‘நூறு’ மடங்கு கனிகொடுக்கத் தொடங்குகிறது. இதைத்தான் திருப்பாடல் ஆசிரியர், ‘ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்’ (காண். திபா 127:1) என்கிறார். நம் முயற்சி, வாழ்க்கைச் சூழல் அனைத்தையும் தாண்டி கடவுளுடைய வழிகாட்டுதலும் பராமரிப்பும் இருக்கிறது. அதுதான் நம்மைக் கட்டுக்குள் வைக்கிறது. அதிர்ஷ்டம், விதி, நேரம், கடவுள் விருப்பம் என இதை நாம் எப்படியும் அழைக்கலாம்.

 

இன்றைய முதல் வாசகத்தில், ‘ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார்’ என்று இயேசுவைப் பற்றிக் குறிப்பிடுகிறார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர். ஆரோன் வழித் தலைமைக்குருக்கள் ஆண்டுதோறும் பலி செலுத்தினாலும் பலன் என்னவோ முப்பது மடங்குதான். ஆனால், இயேசு பலி செலுத்தினால் அது நூறு மடங்காக மாறுகிறது.

 

நிறைவின் இறைவன் நம் வாழ்வில் நாம் நிறைவாகக் கனிதர அருள்கூர்வாராக!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: