இன்றைய இறைமொழி
செவ்வாய், 5 நவம்பர் 2024
பொதுக்காலம் 31-ஆம் வாரத்தின் செவ்வாய்
பிலிப்பியர் 2:5-11. லூக்கா 14:15-24
விருந்துக்கு வாருங்கள்!
‘இறையாட்சி மற்றும் சீடத்துவத்துக்கான அழைப்பை நிராகரிப்பவர்களும், வற்புறுத்தலின்பேரில் அவற்றை ஏற்பவர்களும் அவற்றைச் சுவைத்து மகிழ்வதில்லை.’
பரிசேயர் ஒருவருடைய இல்லத்தில் இயேசு உணவருந்தும் நிகழ்வு, நீர்க்கோவை பீடித்தவர் நலம் பெறுதல், விருந்தினர்களுக்கு அறிவுரை, விருந்துக்கு அழைப்பவர்களுக்கு அறிவுரை என வளர்ந்து, ‘பெரிய விருந்து உவமையுடன்’ நிறைவு பெறுகிறது.
இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இயேசுவின் போதனைகளைக் கேட்டு, ‘இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்!’ எனக் கூறுகிறார். இவரின் சொற்கள் நமக்கு ஆச்சர்யம் தருகின்றன. கண்ணுக்கு முன்னே நடக்கின்ற விருந்திலிருந்து, இன்னும் காணாத இறையாட்சி விருந்து நோக்கித் தன் எண்ணத்தை உயர்த்துகிறார் அந்த நபர். மேலும், இயேசுவின் வல்ல செயல்களும் போதனைகளும் இறையாட்சியின் ஒளியிலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதை அறிந்தவராக இருக்கிறார்.
இவரைப் பொருத்தவரையில் இறையாட்சியின் விருந்து என்றால் என்ன?
(அ) இறையாட்சி விருந்தில் விதிவிலக்குகளும் விதிகளாகக் கருதப்படும். ஓய்வுநாளில்கூட நலம் கிடைக்கும்.
(ஆ) இறையாட்சி விருந்துக்கு அழைக்கப்படுபவர்கள் முதன்மையான இருக்கைகளை நாடிச் செல்லமாட்டார்கள்.
(இ) இறையாட்சி விருந்துக்கான அழைப்பு கைம்மாறு செய்ய இயலாதவர்களுக்கு, சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கே அளிக்கப்படும்.
பெயரற்ற அந்த நபரின் கூற்றுக்கு இயேசு ஓர் உவமை வழியாக விடை தருகிறார். ஒருவர் விருந்து ஏற்பாடு செய்து பலரை அழைக்கிறார். விருந்து நேரம் வந்தபோது அழைக்கப்பட்டவர்கள் விருந்துக்கு வருவதற்குப் பதிலாகச் சாக்கு போக்குகள் – வயல், ஏர் மாடுகள், திருமணம் – கூறுகிறார்கள். விருந்துக்கான அழைப்பு ஏழைகளுக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் பார்வையற்றோருக்கும் கால் ஊனமுற்றோருக்கும் வழங்கப்படுகிறது. இன்னும் இடம் இருந்ததால் விருந்துக்கு வருமாறு பலர் வற்புறுத்தி அழைக்கப்படுகிறார்கள்.
‘அழைப்பு பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப்போவதில்லை’ என்னும் இயேசுவின் கூற்றுடன் உவமை நிறைவுபெறுகிறது.
இங்கே உருவகமாக, விருந்து என்றால் இறையாட்சி, விருந்தின் நேரம் என்றால் இயேசுவின் முதல் வருகை, விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யூதர்கள், சாக்குப் போக்குகள் அவர்களுடைய முதன்மைகள், இரண்டாவதும் மூன்றாவதும் அழைக்கப்பட்டவர்கள் புறவினத்தார்கள் எனப் புரிந்துகொள்ளலாம்.
அல்லது, இதற்குப் பிந்தைய பகுதியின் பின்புலத்தில், ‘விருந்து என்றால் சீடத்துவம்’ என்றும், சாக்குப் போக்குகள் சொல்வது சீடத்துவத்துக்கு உகந்ததல்ல என்றும், வற்புறுத்தலின்பேரில் வருகிற சீடர்கள் சீடத்துவத்தைச் சுவைக்க மாட்டார்கள் என இயேசு அறிவுறுத்துவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், ‘சொத்துகள்’ (‘வயல் வாங்கியுள்ளேன்’), ‘சொந்த வேலைகள்’ (‘ஏர் மாடுகள் வாங்கியுள்ளேன்’), ‘இரத்த, திருமண உறவுகள்’ (‘திருமணம் முடித்துள்ளேன்’) ஆகியவை சீடத்துவத்துக்கான தடைகளாக முன்வைக்கப்படுகின்றன.
விருந்துக்கு முதலில் அழைக்கப்பட்டவர்கள் விருந்தைச் சுவைப்பதில்லை. ஏனெனில், அவர்கள் விருந்தை நிராகரித்தார்கள். அவர்கள் மற்ற முதன்மைகளைக் கொண்டிருந்தார்கள்.
விருந்துக்கு இரண்டாவதாக அழைக்கப்பட்டவர்களும் விருந்தைச் சுவைப்பதில்லை. ஏனெனில், அவர்கள் வற்புறுத்தலின்பேரில் வந்தார்கள்.
இந்த உவமை வழியாக இறையாட்சி, சீடத்துவம் பற்றி நாம் கற்பது என்ன?
(அ) அழைப்பு இலவசமாக, கொடையாக வழங்கப்படுகிறது. கடவுள்தாமே அருள்கூர்ந்து நம்மை அருள்கொடைகளால் அணிசெய்கிறார்.
(ஆ) இறையாட்சியும் சீடத்துவமும் அனைவருக்கும் உரியதாக இருக்கின்றன.
(இ) அழைக்கப்படுபவரின் உள்மனச் சுதந்திரத்தைக் கடவுள் மதிக்கிறார்.
(ஈ) அழைக்கப்பட்டவர்கள் தங்களையே விருந்துக்குத் தகுதியாக்கிக்கொள்ள வேண்டும்.
நம் முதன்மைகள் சரியாக இருக்கின்றனவா? வெளிப்புற அழுத்தங்களுக்கு நாம் இடம் கொடுக்கிறோமா? என்பவை இந்த உவமை எழுப்பும் கேள்விகள்.
அழைக்கப்பட்ட நாமும் விருந்தைச் சுவைக்க மாட்டோம் என இயேசு சொல்லுமாறு விட வேண்டாம்! இறையாட்சியும் சீடத்துவமும் நம் வாழ்வின் முதன்மைகளாக இருக்கட்டும்.
இன்றைய முதல் வாசத்தில், ‘கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்’ என்று பிலிப்பு நகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல், இயேசுவின் தற்கையளிப்பு பற்றிய கிறிஸ்தியல் பாடலை முன்மொழிகிறார்.
‘இறையாட்சி மற்றும் சீடத்துவத்துக்கான அழைப்பை நிராகரிப்பவர்களும், வற்புறுத்தலின்பேரில் அவற்றை ஏற்பவர்களும் அவற்றைச் சுவைத்து மகிழ்வதில்லை.’
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ சீடத்துவத்துக்கான அழைப்பை மனமுவந்து ஏற்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 240).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: